Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்
தேவயான மார்க்கத்தில் எம்பெருமானே வழிநடத்துதல்
மூலம் – ”மன்னும் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்ன தோரில்லியினூடு போய்” என்றும், “தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு” என்றும், “சண்ட மண்டலத்தினூடு சென்று” என்றும், “இருளகற்றும் எரிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி” என்றும் சொல்லுகிற தேவயாந மார்க்கத்திலே வழிப்படுத்தி, “அமரரோடு உயர்வில் சென்று அறுவர்தம் பிறவியஞ்சியே” என்கிறபடியே அர்ச்சிஸ்ஸென்றும், அஹஸ்ஸென்றும், பூர்வபக்ஷமென்றும், உத்தராயணமென்றும், ஸம்வத்ஸரமென்றும், வாயுவென்றும், ஆதித்யனென்றும், சந்த்ரனென்றும், வைத்யுதனென்றும், அமாநவஸம்ஜ்ஞனான இவனுக்கு ஸஹகாரிகளான வருண இந்த்ர ப்ரஜாபதிகளென்றும் சொல்லப்படுகிற வழிநடத்தும் முதலிகளையிட்டு, அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் என்கிறபடியே தான் ப்ரதாநனாய் நடத்தி, அவ்வோ எல்லைகளில் பகவச்சாஸ்த்ரத்திலே பரக்கப் பேசின போகங்களையும் அநுபவிப்பித்து.
– பின்னர் கீழே உள்ள பல வரிகளில் கூறப்படுவது போன்று ஜீவனை எம்பெருமான் தேவயான மார்க்கத்தில் வைக்கிறான்: பெரிய திருமடல் - மன்னும் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்ன தோரில்லியினூடு போய் – கடுமையான வெப்பத்துடன் கூடிய சூரியனின் நடுவில் உள்ள துவாரம் வழியாக ஜீவனைப் புகவைத்து. சிறிய திருமடல் - தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு – தேரில் உள்ளவனும், கதிர்கள் நிறைந்தவனும் ஆகிய சூரியனின் மண்டலம் வழியே சென்று. திருச்சந்தவிருத்தம் (67) - சண்ட மண்டலத்தினூடு சென்று – சூரிய மண்டலத்தின் நடுவில் புகுந்து. பெரியாழ்வார் திருமொழி (4-9-3) - இருளகற்றும் எரிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி – இருளை விலக்குகின்ற சூரிய மண்டலத்திற்குள் ஜீவனை ஏற்றி, பரமபதத்திலிருந்து மீண்டும் இறங்கிவிடக் கூடாது என்பதால் ஏற்றிவிட்ட ஏணியை திருவரங்கன் அகற்றுகிறான். அதன் பின்னர், திருவாய்மொழி (1-3-11) - அமரரோடு உயர்வில் சென்று அறுவர்தம் பிறவியஞ்சியே – அதன் பின்னர் ஸ்ரீவைகுண்டம் சென்று தங்களது பிறவியை விடுவர் – என்று கூறுவதற்கு ஏற்ப, தானே அந்த ஜீவனை வழிநடத்துகிறான். அப்போது அந்த ஜீவனுக்கு அக்னி, அஹஸ் (பகல் தேவதை), பூர்வபக்ஷம் (முதல் பதினைந்து நாட்களின் தேவதை), உத்தராயணம் (ஆறு மாதங்களின் தேவதை), ஸம்வத்ஸரம் (வருடத்தின் தேவதை), வாயு, சூரியன், சந்த்ரன், மின்னல் போன்ற பல தேவதைகளை வழித்துணையாக வைக்கிறான். மேலும் அமானவன் என்பவனையும் அவனது உதவியாட்களான வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி ஆகியோரையும் கொண்டு ஜீவனை வழிநடத்துகிறான். அதன் பின்னர் வராஹ சரமச்லோகத்தில் - அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் – அவர்களை நினைவில் வைத்துக் கொண்டு, நானே அவர்களை வழிநடத்துவேன் – என்று கூறுவதற்கு ஏற்ப தானே முன்னின்று ஜீவனை வழிநடத்துகிறான். வழி நெடுக உள்ள பல இடங்களில் பகவத்சாஸ்த்ரம் என்னும் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தில் கூறப்படுவது போன்று, எல்லையற்ற இன்பங்களை ஜீவன் அனுபவிக்கும்படி எம்பெருமான் செய்கிறான்.