Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்
ஜீவன் வெளியேறும் முன் ப்ரபந்நனுக்கு எம்பெருமான் செய்யும் உபகாரங்கள்
மூலம் – இதுக்கு அநந்தரம் யோகிகளோடும் அயோகிகளோடும் வாசியற ஹார்த்தனான பரமாத்மாவின் பக்கலிலே விச்ரமிக்குமளவும் ஸுஷுப்திதுல்யமாயிருக்கும். இவ்வவஸ்தையைப் பற்றக் காஷ்ட பாஷாண ஸந்நிபம், நஷ்ட ஸ்ம்ருதிரபி என்றும், “நினைக்கமாட்டேன்” என்றும் சொல்லுகிறது என்றால் ப்ரபந்நாதிகாரிக்கு விசேஷித்து ஓரதிசயம் சொல்லிற்றாகாது. இதுக்கு மேல் மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாந மபோஹநம் ச என்கிற ப்ராஜ்ஞனுணர்த்த தத்ப்ரகாசிதத்வாரனாய்க் கொண்டு ப்ரஹ்மநாடியிலே ப்ரவேசித்தால் பின்பு காலதத்வமுள்ளதனையும் ஒரு பகலாயுணர்த்தியேயாம்.
– அதன் பின்னர் யோகியுடையதாக இருந்தாலும் சரி, யோகி அல்லாதவனுடையதாக இருந்தாலும் சரி, ஆத்மாவானது இதயத்தில் வாசம் செய்யும் பரமாத்மாவின் பக்கம் ஓய்வெடுக்கும். இந்த நிலை கனவுகள் அற்றதான ஆழ்ந்த உறக்கம் போன்றதே ஆகும். மேலே வராஹ புராண வரிகளும், பெரியாழ்வார் திருமொழி வரிகளும் அந்திமஸ்ம்ருதியைக் கூறாமல் ஆழ்ந்த உறக்கத்தைக் கூறியிருக்கலாம் அல்லவோ என்ற சந்தேகம் எழலாம். இவ்விதம் கொண்டால் ப்ரபந்நனுக்கு எந்த ஒரு மேன்மையும் கூற இயலாது அல்லவோ? ஆகவே அவை அந்திமஸ்ம்ருதியைக் கூறுவதாகவே கொள்ளவேண்டும். அதன் பின்னர் கீதை (15-15) - மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாந மபோஹநம் ச – அனைத்து நினைவுகளும் என்னிடமிருந்தே உண்டாகின்றன – என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்தும் அறிந்தவனான எம்பெருமானால் அந்த முக்தாத்மாவிற்குத் தத்வஞானம் உண்டாகிறது. இந்த ஞானத்தால் ஒளி அளிக்கப்பட்ட அந்த ஜீவன் ப்ரஹ்மநாடியில் நுழைகிறான்.