Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

ஜீவன் வெளியேறும் முன் ப்ரபந்நனுக்கு எம்பெருமான் செய்யும் உபகாரங்கள்

மூலம் – அந்திம ஸ்ம்ருதியாவது வாகாதிகள் உபசாந்தமானால் மநஸ்ஸு உபசாந்தமாவதற்கு முன்பே பிறப்பதொரு ஸ்ம்ருதி. இது அருகிருந்தார்க்குத் தெரியாது. த்ருச்யதே ஹி வாகிந்த்ரிய உபரதே அபி மந: ப்ரவ்ருத்தி: என்கிற பாஷ்யமும் ஏதேனும் ஒரு லிங்கத்தாலே ஒரு மந: ப்ரவ்ருத்தி இவனுக்கு உண்டென்று அறிகிறவளவைச் சொல்லுகிறது. தனக்குச் சில வ்யாத்யாத்யவஸ்தைகளிலே கண்டபடியைச் சொல்லுகிறதாகவுமாம். ஆனபின்பு பகவத்விஷயத்தில் அந்திமஸ்ம்ருதி முக்தராகிறவர்க்கும் மோக்ஷம் கொடுக்கிறவர்க்கும் தெரியுமித்தனை.

– இப்படியாகக் கூறப்படும் “அந்திமஸ்ம்ருதி” என்றால் என்ன? வாக்கு முதலான செய்கைகள் அடங்கும்போது, மனதிலிருந்து உண்டாகும் எண்ணங்கள் அனைத்தும், மனம் அடங்குவதற்கு முன்பாக அடங்கிவிடுகின்றன. இதுவே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆனால் இதனை அருகில் உள்ளவர்களால் அறிய இயலாது. ஸ்ரீபாஷ்யத்தில் (4-2-1) - த்ருச்யதே ஹி வாகிந்த்ரிய உபரதே அபி மந: ப்ரவ்ருத்தி: - மரணம் அடையும் நேரத்தில் வாக் இந்த்ரியம் தனது செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண முடிகிறது – என்று கூறியது ஏன் என்றால், மனதி இயக்கம் என்பது செய்கைகள் மூலம் உணர இயலும் என்பதால் ஆகும். தனக்கு நோய்வாய்ப்பட்ட காலங்களில் உண்டான அனுபவத்தின் மூலம் கூறுவதாகவும் கொள்ளலாம். ஆகவே அந்திமஸ்ம்ருதி என்பது முக்தி பெற்றவனுக்கும், அவனுக்கு மோக்ஷம் அளித்த எம்பெருமானுக்கும் மட்டுமே தெரியும்.