Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

ஜீவன் வெளியேறும் முன் ப்ரபந்நனுக்கு எம்பெருமான் செய்யும் உபகாரங்கள்

மூலம் – சரீர பாத ஸமயே து கேவலம் மதீயயைவ தயயா அதிப்ரபுத்தோ மாமேவாவலோகயந் அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரத: என்று அருளிச்செய்ததும் இவ்வசநங்களுக்கு அவிருத்தமாக ஒரு ப்ரகாரத்தாலே நிர்வாஹம், எங்ஙனேயென்னில் – கத்யத்தில் அருளிச்செய்கிற அந்திமஸ்ம்ருதி இவ்வந்திமஸ்ம்ருதியையும் உபாயபலமாகக் கோரி ப்ரபந்நரானவர்களுக்கு வரக்கடவதென்று சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பார்கள். இப்படியாகில் ஒரு சரீரத்திலும் அந்திமமான ப்ரத்யயம் நிர்விஷயமாயிராமையால் இது பகவத்வ்யதிரிக்த விஷயத்திலே போமாகில் யம் யம் வாபி ஸ்மரந் பாவம் என்கிற கணக்கிலே விபரீதபலமாம். ஆனபின்பு கத்யத்தில் அருளிச்செய்தபடியே ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு பகவத் விஷயத்தில் அந்திம ப்ரத்யயம் அவச்யம் வரும். நஷ்டஸ்ம்ருதிரபி இத்யாதிகள் ஸ்ரீகீதையில் அஷ்டமாத்யாயத்திலும், யம் யோகிந: ப்ராணவியோக காலே யத்நேந விநிவேசயந்தி இத்யாதிகளிலும் ஸ்வயத்நஸாத்யமாக விதித்த கட்டளையிலே உபாயமாக அந்திமஸ்ம்ருதி வேண்டாவென்கின்றன என்று சில ஆசார்யர்கள் அநுஸந்திப்பார்கள். “கேவலம் மதீயயைவ தயயா” என்றே இங்கு அருளிச்செய்தது.

– சரணாகதிகத்யம் (சூர்ணை 21) - சரீர பாத ஸமயே து கேவலம் மதீயயைவ தயயா அதிப்ரபுத்தோ மாமேவாவலோகயந் அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரத: - உனது சரீரம் விழும் நேரத்தில், உனக்கு எனது தயை காரணமாக முழுமையான ஞானம் உண்டாகும்; எனது திவ்யமங்கள விக்ரஹத்தைக் காண்பவனாக, ”எம்பெருமானே உயர்ந்த பலன்” என்பதான உனது ஆசையும் நினைவும் கைகூடும் – என்பது போன்ற வரிகள் கடந்த பத்தியில் கூறப்பட்ட விஷயங்களுக்கு முரணாகாதபடி பொருள் கொள்ளப்பட வேண்டும். ஒரு சில ஆசார்யர்கள் அந்த கத்யவரிக்கு “உயிர்பிரியும் நேரத்தில் எம்பெருமானைக் குறித்த எண்ணம் உண்டாகவேண்டும் என்று ப்ரபத்தியின்போது செய்கின்ற வேண்டுதலே அந்த வரியால் உரைக்கப்பட்டது” என்று பொருள் கொள்வர். இந்தக் கருத்தை ஏற்க இயலாது. ஏன்? உயிர் பிரிகின்ற நேரத்தில் ஏதோ ஒரு எண்ணம் கண்டிப்பாக உண்டாகும், அப்படி உண்டாகும் எண்ணம் ஏதோ ஒரு பொருளைக் குறித்தே இருக்கும். இவ்விதம் எண்ணப்படும் பொருளானது எம்பெருமான் நீங்கலாக வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால் கீதை (8-6) - யம் யம் வாபி ஸ்மரந் பாவம் – எந்தனை எண்ணியபடி சரீரம் விடுகிறானோ, அதனையே அடைகிறான் – என்பதற்கு ஏற்ப விபரீதத்தில் கொண்டுவிடக்கூடும். ஆகவே ப்ரபந்நன் ப்ரபத்தியை ”அந்திமகாலத்தில் எம்பெருமானை எண்ணவேண்டும்” போன்றதான வேண்டுதல்கள் இன்றிச் செய்தாலும், அவனுக்கு எம்பெருமானைப் பற்றிய எண்ணங்கள் அந்த நேரத்தில் உண்டாகிவிடும் என்பதே அந்த கத்ய வரிக்கான பொருளாகும். இப்படியாக அந்திம நேரத்தில் எம்பெருமானை எண்ணுதல் என்பது பற்றி கீதையின் எட்டாவது அத்யாயத்திலும், மஹாபாரதம் சாந்திபர்வம் (46-143) - யம் யோகிந: ப்ராணவியோக காலே யத்நேந விநிவேசயந்தி – யோகிகள் தங்களது அந்திம நேரத்தில் எந்த எம்பெருமானை மிகவும் கடினப்பட்டு எண்ணுகிறார்களோ, அவனைப் பீஷ்மர் தனது கண்களின் முன்பாகப் பார்த்தபடி மரணம் அடைந்தார் – என்றும் கூறுவது காண்க. ஆகவே இத்தகைய எண்ணமானது உபாயமாக ப்ரபந்நனுக்கு விதிக்கப்படவில்லை என்றாகிறது. இத்தகைய எண்ணம் எம்பெருமானின் தயை காரணமாகவே உண்டாகும் என்பதை கத்யத்தில் - கேவலம் மதீயயைவ தயயா – எனது தயையால் மட்டுமே – என்றது காண்க.