Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

ஜீவன் வெளியேறும் முன் ப்ரபந்நனுக்கு எம்பெருமான் செய்யும் உபகாரங்கள்

மூலம் – ஆழ்வான் அந்திமதசையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச்செய்ய, “இப்பேறு நமக்கு வருகை அரிது. நாமென் செய்யக் கடவோம்?”, என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்களபிப்ராயத்தை திருவுள்ளம் பற்றி “ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ? இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்டசர்க்கரையையும் இட்டமாத்ரமன்றோ? நாமிது உபாயத்துக்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம்” என்று அருளிச்செய்ய முதலிகள் தெளிந்து நிர்பரரானார்கள். ஆகையால் நஷ்டஸ்ம்ருதிரபி பரித்யஜன் தேஹம் என்றும், ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே என்கிற ச்லோகத்வயத்திலும், “துப்புடையாரை அடைவதெல்லாம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே ப்ரபந்நனுக்கு அந்திம ஸ்ம்ருத்யாதிகளில் நிர்பந்தமில்லை.

– கூரத்தாழ்வான் தனது உயிர் பிரியும் நேரத்தில், நாக்கு உலர்ந்து, ஏதும் கூற இயலாமல் எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றினார். அப்போது ஆழ்வானின் செவியில் எம்பெருமானார் த்வயமந்த்ரத்தை உச்சரித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தனக்கள் மனதில், “இப்படியாக நமது செவிகளில் எம்பெருமானார் த்வயமந்த்ரத்தை உச்சரிக்கும் பேறு கிட்டுமோ? நாம் என்ன செய்யவேண்டும்?”, என்று எண்ணியபடி நின்றனர். அவர்களுடைய எண்ணத்தை அறிந்துகொண்ட எம்பெருமானார் அவர்களிடம், “ஆழ்வானின் ஸ்வபாவம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்படிப்பட்ட நிலையில் இவர் உள்ளபோது நான் இவரது நாக்கில் சிறிதளவு கர்ப்பூரத்தையும் கண்டசர்க்கரையையும் வைப்பது போன்றே த்வயத்தைக் கூறினோம், அந்த மந்த்ரத்தை இங்கு மோக்ஷ உபாயமாக, அதன் அங்கங்களுடன் உரைக்கவில்லை”, என்றார். இதனைக் கேட்ட பின்னரே அங்கிருந்தவர்கள் சமாதானம் அடைந்தனர். ஆகவே கீழே உள்ள வரிகளில் கூறியபடி ப்ரபந்நன் ஒருவனுக்கு அந்திமநேரத்தில் ஸர்வேச்வரனை எண்ணியபடி இருத்தல் வேண்டும், அப்போதுதான் மோக்ஷம் கிட்டும் என்பதான கட்டாயம் இல்லை: வராஹ புராணம் - நஷ்டஸ்ம்ருதிரபி பரித்யஜன் தேஹம் – நினைவிழந்த நிலையில் மரணம் அடைந்தாலும் மோக்ஷம் அடைகிறான். வராஹ சரமச்லோகம் - ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே – மனம் உறுதியாக உள்ளபோதும், சரீரம் தளராமல் உள்ளபோதும், சரீரத்தில் உள்ள தாதுக்கள் சரியான பக்குவத்தில் உள்ளபோதும் யார் என்னைச் சரணம் அடைந்து த்யானிக்கிறானோ, அவன் இறக்கும்போது கட்டை மற்றும் கல் போன்று கிடந்தாலும் நான் அவனை எண்ணியபடி மோக்ஷம் அளிக்கிறேன். பெரியாழ்வார் திருமொழி (4-10-1) - துப்புடையாரை அடைவதெல்லாம் – திருவரங்கா! எனது இந்த்ரியங்கள் தளர்கின்ற காலத்தில் நான் உன்னை எண்ணமாட்டேன், அதற்காக இப்போதே விண்ணப்பிக்கிறேன்.