Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

ஜீவன் வெளியேறும் முன் ப்ரபந்நனுக்கு எம்பெருமான் செய்யும் உபகாரங்கள்

மூலம் – (1) இவன்றிறத்தில் நிருபாதிக ஸர்வசேஷியாய் நிருபாதிக ஸ்வதந்த்ரனாய் ஸத்யஸங்கல்பனுமான ஸர்வேச்வரன் ஸர்வபயங்களுக்கும் காரணமான நிக்ரஹ ஸங்கல்பத்தை தததிகம உத்தர பூர்வாகயோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் என்கிறபடியே ஸத்வாரகப்ரபத்தி நிஷ்டனுக்கு உபாஸந ப்ராரம்பத்திற்போலே ப்ரபத்தி வாக்யோச்சாரணத்தில் ப்ரதமக்ஷணத்திலே விலக்கி; (2) இவனையும் இவனுடைய அநுபந்திகளையும் நித்யஸூரிகள் கோவையிலே கோத்தாலும் ஆவல் கெடாதே ஆச்ரித அபராதராசிகளில் உண்டது உருக்காட்டாதே வயிறுதாரியாய் அனுபந்திகளுடைய புத்திபூர்வாபராதங்களுக்கும் அநுதாபாதிகளாலே நிஸ்தாரம் பண்ணுவிக்கும்படிக்கு ஈடான அநுக்ரஹ ஸங்கல்பத்தைப் பண்ணி; (3) “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்” என்கிறபடியே இவன் இசைந்த விலம்பத்துக்குத் தான் ஸாநுசயனாய் த்வரித்து; (4) “இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்” என்றும், “மாயஞ்செய்யேல் என்னை” என்றும் சொல்லுகிறபடியே இவனுக்கு இசைவை உண்டாக்கி; (5) “உன் திருமார்வத்து மாலை நங்கை வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை” என்று இவன்தான் த்வரித்து வளைக்கும்படி பண்ணி; (6) “சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்கிறபடியே இவன் கோருதலுக்கு ஈடாகப் ப்ராரப்த சரீராவஸாநத்திலே பரமபத ப்ராப்தியுண்டாக்குவதாகக் கோரி; (7) பொன்னும் இரும்புமான விலங்குகள் போலே பந்தங்களான பூர்வோத்தர புண்ய பாபங்களையும் ப்ராரப்த கார்யமான கர்மத்தில் இவன் இசைந்த அம்சமொழிய மேலுள்ள கூற்றையும் “போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்கிறபடியே முன்பே இவனோடு துவக்கறுத்து வைக்கையாலே சரீரபாதத்துக்கு நினைப்பிட்ட ஸமயம் வந்தவாறே ப்ரியேஷு ஸர்வேஷு ஸுக்ருதம் அப்ரியேஷு ச துஷ்க்ருதம் விஸ்ருஜ்ய த்யாநயோகேந ப்ரஹ்மாப்யேதி ஸநாதநம் என்றும், “நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே” என்றும் ஸ்மர்த்தாக்கள் சொன்ன உபநிஷதர்த்தத்தின்படியே இவனுக்கு அநுகூல ப்ரதிகூலராயிருந்துள்ள இரண்டு சிறகிலும் இவன் பக்கல் ஆநுகூல்ய ப்ராதிகூல்யங்களுக்குப் பலமாக அசல் பிளந்தேறிடுகிறதென்னும்படி பண்ணி; (8) திவா ச சுக்லபக்ஷச்ச உத்தராயணமேவ ச முமூர்ஷதாம் ப்ரசாஸ்தாநி என்று ஸ்ம்ருதியிலும் ஜ்யோதி: சாஸ்த்ரத்தில் நிர்யாண ப்ரகரணத்திலும் பலாந்தர ப்ரஸக்தரையும் மோக்ஷோபாய பூர்த்தியில்லாதாரையும் பற்றச் சொல்லும் கால நியமமின்றிக்கே, நிசிநேதி சேந்ந ஸம்பந்தஸ்ய யாவத்தேஹபாவித்வாத் என்றும், அதச்சாயநே அபி தக்ஷிணே என்றும் சொல்லுகிறபடியே மநுஷ்ய பித்ரு தேவர்களுடைய பகல்களிலேயாதல், ராத்ரிகளிலேயாதல் தான் ஸங்கல்பித்த ஸமயத்திலே அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரதனாம்படி பண்ணி; (9) சிறை கிடந்த ராஜகுமாரன் திறத்தில் ப்ரஸந்நனான ராஜா விலங்கை வெட்டிச் சிறைக்கூடத்தினின்றும் கொண்டு புறப்படுமாப்போலே ப்ரசஸ்த அப்ரசஸ்த நியமமறத் தத்காலோபஸ்திதமாயிருப்பது ஏதேனுமொரு சரீர விச்லேஷ நிமித்தத்தை உண்டாக்கி; (10) வாகாதிகளான பாஹ்யேந்த்ரியங்கள் பத்தையும் மனஸ்ஸிலே சேர்த்து; (11) இப்படிக் கர்மஞானேந்த்ரியங்களெல்லாவற்றோடும் கூடின மனஸ்ஸை ப்ராண வாயுவோடே சேர்த்து; (12) இப்படிப் பதினோர் இந்த்ரியங்களோடும் கூடிய ப்ராணவாயுவை ஜீவனோடே சேர்த்து; (13) ப்ராணேந்த்ரிய ஸம்யுக்தனான ஜீவனை த்ரிஸ்தூண க்ஷோப தசையிலே ஸ்தூல தேஹத்தினின்றும் கடைந்தெடுத்த பஞ்சபூத ஸூக்ஷ்மங்களோடே சேர்த்து; (14) இப்படி இந்த்ரிய ப்ராண பூதஸூக்ஷ்ம ஸம்யுக்தனான ஜீவனை நிஸர்க்க ஸௌஹார்த்தமுடைய ஹார்த்தனான தன் பக்கலிலே இளைப்பாற்றி, இப்படி ஸ்தூல சரீரத்தினின்றும் வித்வதவித்வத்ஸாதாரணமான உத்க்ராந்தி க்ரமத்தை நடத்தி; (15) அநந்தா ரச்மயஸ்தஸ்ய தீபவத்ய: ஸ்திதோ ஹ்ருதி ஸிதாஸிதா: கந்த்ருநீலா: கபிலா: பீதலோஹிதா: ஊர்த்வமேக: ஸ்திதஸ்தேஷாம் யோ பித்த்வா ஸூர்யமண்டலம் ப்ரஹ்மலோகமதிக்ரம்ய தேந யதி பராம் கதிம் யதஸ்யாந்யந்த்ரச்மி சதமூர்த்வமேவ வ்யவஸ்திதம் தேந தேவசரீராணி ஸ தாமாநி ப்ரபத்யதே யேநைகரூபாச்சாதஸ்தாந்த்ரச்மய: அஸ்ய ம்ருதுப்ரபா: இஹ கர்மோபபோகாய தை: ஸம்ஸரதி ஸ: அவச: என்கிறபடியே கள்ளர் கொண்டுபோம் வழிகள்போலே ஆத்மாபஹாரிகள் ஸ்வர்க்க நரகங்களுக்குப்போம் மார்க்காந்தரங்களுக்கு முகங்களான நாடீ விசேஷங்களில் போகாதபடி வழிவிலக்கி; (16) அர்ச்சிராதி மார்க்கத்துக்கு முகமான சதாதிகையான ப்ரஹ்மநாடியிலே ப்ரவேசிப்பித்து, ஸூர்யகராவலம்பியாய்க் கொண்டு புறப்படும்படி பண்ணும்.

– ப்ரதிபலனை எதிர்பாராமல் அனைத்திற்கும் எஜமானனாக, அனைவரைக் காட்டிலும் சுதந்திரமானவனாக, தளராத ஸங்கல்பம் கொண்டவனாக உள்ள ஸர்வேச்வரன் ப்ரபந்நன் விஷயத்தில் செய்வது என்ன? (1) அனைவருக்கும் அச்சம் உண்டாக்குவதான தனது தண்டித்தல் என்னும் செயலை இவன் பொருட்டு தள்ளி வைக்கிறான். எப்போது என்றால் – ப்ரபத்தி என்பதை பக்தியை அடையும் பொருட்டு கைக்கொண்ட உபாஸகன், தனது த்யானத்தின் தொடக்கத்தில் எவ்விதம் உரைப்பானோ அது போன்று ப்ரபந்நன் ப்ரபத்தியை முன்னிட்டு அதற்கான முதல் வாக்கியம் உரைக்கும்போதே தனது தண்டிக்கும் இச்சையைத் தள்ளிவைக்கிறான். ப்ரஹ்மஸூத்திரம் (4-1-13) - தததிகம உத்தர பூர்வாகயோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் – பக்தியோகத்தில் இழியும் ஒருவனுக்கு, அவன் முன்னர் செய்த பாவங்கள் அனைத்து ஒழிந்துவிடுகின்றன, அதன் பின்னர் அறியாமல் செய்யும் பாவங்கள் சேர்வதில்லை – என்றது காண்க. இப்படிப்பட்ட பக்திநிஷ்டனே மேலே கூறப்படுகிறான். (2) அந்த ப்ரபந்நனையும், அவனுடன் சேர்ந்தவர்களையும் உடனடியாக நித்யஸூரிகளின் வரிசையில் சேர்க்கிறான். அத்துடன் எம்பெருமானின் ஆவல் தீர்வதில்லை. இப்படியாகத் தன்னை அடைந்தவர்களின் பாவங்கள் அனைத்தையும் வெளியில் தெரியாதபடி விழுங்குகிறான். அப்படியும் வயிறு நிரம்பாதவனாக மேலும் இவர்களிடம் பாவங்கள் உள்ளனவோ என்று பார்க்கிறான். அந்த ப்ரபந்நனைச் சேர்ந்தவர்கள் தெரிந்தே பாவங்கள் செய்தபோதிலும், ”ப்ரபந்நனுக்கு அநுக்ரஹம் செய்வேன்” என்னும் தனது ஸங்கல்பம் காரணமாக, அவர்களுடைய பாவங்களையும் நீக்குகிறான். இதன் காரணமாக அவர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்தி, பாவங்களைப் போக்குவார்கள். (3) திருவாய்மொழி (10-6-3) - விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் – என்று கூறுவதற்கு ஏற்ப பரமபதம் அளிக்க தான் விரைவாக உள்ளபோதிலும், ப்ரபந்நன் தனது மோக்ஷம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் காலதாமதம் வேண்டும் என்று விரும்புவதை எண்ணி எம்பெருமான் வருத்தம் கொள்கிறான். ஆகவே அந்த ப்ரபந்நனுக்கு மோக்ஷத்தை அடையும் காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதபடி செய்கிறான். (4) அந்த ப்ரபந்நனுக்கு மோக்ஷம் அடைவதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறான். ஆகவே, திருவாய்மொழி (10-6-1) - இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் – அறியாமை என்னும் இருள் சூழ்ந்த இந்த உலகப்பிறவி இனி எனக்கு வேண்டாம் - என்றும், திருவாய்மொழி (10-10-2) - மாயஞ்செய்யேல் என்னை – என்றும் கூறும்படியாகச் செய்கிறான். (5) அத்துடன் ப்ரபந்நன் நிற்காமல் திருவாய்மொழி (10-10-2) - உன் திருமார்வத்து மாலை நங்கை வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை – இனியும் என்னை நீ வஞ்சிக்காதே, இது உன்னுடைய திருமார்பில் வாழ்பவளும் அழகான கூந்தல் கொண்டவளும் ஆகிய பெரியபிராட்டி மீது ஆணை – என்று வேதனை தாங்காமல் புலம்பச் செய்கிறான். (6) திருவாய்மொழி (9-10-5) - சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – அனைவருக்கும் சரணம் புக ஏற்றபடி உள்ள தனது திருவடிகளின் சரணம் என்று புகுந்தவர்கள் மரணம் அடையும்போது அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அளிக்கிறான் – என்று கூறுவதற்கு ஏற்ப, பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின் முடிவில் சரீரத்தை விடும்போது, ப்ரபந்நனின் விருப்பத்திற்கு ஏற்ப பரமபதம் அளிக்கிறான். (7) பொன்னால் செய்யப்பட்ட விலங்கு போன்றுள்ள புண்ணியம், இரும்பால் செய்யப்பட்ட விலங்கு போன்ற பாவங்கள் ஆகிய இரண்டும் ப்ரபந்நனை மேலும் பந்தப்படுத்தும் என்பதால் அவற்றை எம்பெருமான் விலக்குகிறான். இது போன்று பலன் தரத் தொடங்கிவிட்ட ப்ராரப்த கர்மங்களையும் விலக்குகிறான். ஆகவே ப்ராரப்த கர்மங்களில், ப்ரபந்நன் தான் கழித்து நீக்கிக்கொள்வேன் என்று ஒப்புக்கொண்டவை தவிர மற்ற அனைத்தையும் இருந்த சுவடே தெரியாமல் விலக்குகிறான். இதனையே திருப்பாவையில் (5) - போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – ப்ரபத்திக்கு முன்பாக செய்த பாவங்களும், அதன் பின்னர் தொடர்கின்ற பாவங்களும் தீயில் இட்ட பஞ்சு போன்றாகும் – என்றாள். ப்ரபந்நன் தனது சரீரத்தை விடும் நேரம் வந்தபோது, அவனிடம் எஞ்சியுள்ள புண்ணியங்கள் அனைத்தும் அவனுடைய நண்பர்களிடமும், எஞ்சிய பாவங்கள் அனைத்தும் அவனுடைய விரோதிகளிடமும் சென்று சேரும்படியாக எம்பெருமான் செய்துவிடுகிறான். இதனை மநுஸ்ம்ருதி (6-79) - ப்ரியேஷு ஸர்வேஷு ஸுக்ருதம் அப்ரியேஷு ச துஷ்க்ருதம் விஸ்ருஜ்ய த்யாநயோகேந ப்ரஹ்மாப்யேதி ஸநாதநம் – பரமபதம் செல்லும் ஒருவன் தனது புண்ணிய பலன்களைத் தனது நண்பர்களிடமும், பாவங்களைத் தனது விரோதிகளிடமும் விடுகிறான்; தனது பக்தியால் என்றும் உள்ளதான ப்ரஹ்மத்திற்கு ஒத்த இன்பம் அடைகிறான் – என்றது காண்க. இதனையே பெரியாழ்வார் திருமொழியில் (5-4-3) - நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே – யமன் போன்று நம் மீது விழுந்து அழுத்துகின்ற பாவங்கள் அனைத்தும் ஓடிச்சென்று நமது பகைவர்களிடம் பாய்கின்றன – என்றார். ஸ்ம்ருதிகளை ஆக்கியவர்கள் உபநிஷத்துக்கள் கூறும் கருத்துக்களையே மேலே உள்ளது போன்று கூறுகின்றனர். (8) ஒரு சிலர் மோக்ஷம் தவிர உள்ள மற்ற பலன்களை நாடியபடி இருத்தல் கூடும். மேலும் சிலர் மோக்ஷ உபாயம் அனைத்தையும் முழுமையாகக் கைக்கொள்ளாமல் இருத்தல் கூடும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சரீரத்தை விட்டுப் பிரிய ஏற்ற நேரம் என்று ச்ருதி மற்றும் சாஸ்த்ரங்களில், மஹாபாரதம் - திவா ச சுக்லபக்ஷச்ச உத்தராயணமேவ ச முமூர்ஷதாம் ப்ரசாஸ்தாநி – இறக்கும் அவர்களுக்கு பகல் நேரம், சுக்ல பக்ஷம், உத்தராயணம் ஆகியவை சிறந்த காலங்கள் – என்று கூறுவது போன்று உரைக்கப்பட்டது. ஆனால் ப்ரபந்நன் ஒருவனுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. இதனை ப்ரஹ்மஸூத்ரம் (4-3-8) - நிசிநேதி சேந்ந ஸம்பந்தஸ்ய யாவத்தேஹபாவித்வாத் – மோக்ஷ உபாயம் கைக்கொண்ட ஒருவன் இரவில் மரணம் அடைந்தால் மோக்ஷம் இல்லை என்று கூறக்கூடாது – என்றது. இதே காரணத்தினால் ப்ரஹ்மஸூத்ரம் (4-2-19) - அதச்சாயநே அபி தக்ஷிணே – தக்ஷிணாயத்தில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு – என்றது. ஆக மனிதர்களின் காலத்தில் உள்ள இரவு-பகல் (ஒரு நாளில் இரவு மற்றும் பகல்), பித்ருக்களின் காலத்தில் உள்ள இரவு-பகல் (இவர்களுக்கு சுக்லபக்ஷம் என்பது பகல், க்ருஷ்ணபக்ஷம் என்பது இரவு), தேவர்களின் காலத்தில் உள்ள இரவு-பகல் (இவர்களுக்கு உத்தராயணம் என்பது பகல், தக்ஷிணாயணம் என்பது இரவு) என்று எந்தக் காலமாக இருந்தாலும், எம்பெருமான் ஸங்கல்பம் செய்த நேரம் வரும்போது, அந்த ப்ரபந்நனுக்கு மோக்ஷத்தின் மீது கொண்ட ஆசையின் நினைவுகள் உண்டாகும்படிச் செய்கிறான். (9) சிறையில் வாடுகின்ற ராஜகுமாரன் ஒருவனை மீட்க வரும் அரசன், அந்த விலங்குகளை வெட்டி, அந்தச் சிறையிலிருந்து ராஜகுமாரனை மீட்டுச் செல்வது போன்று, ப்ரபந்நனை எம்பெருமான் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவ்விதம் சரீரத்தை விட்டுப் பிரிகின்ற நேரமானது, மற்றவர்களுக்கு உள்ளது போன்று சுபவேளை, அசுபவேளை என்ற கட்டுப்பாடுகள் இன்று, ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு, பிரியும்படிச் செய்கிறான். (10) அதன் பின்னர் வாக்கு உள்ளிட்ட பத்து இந்த்ரியங்களை மனதுடன் சென்று லயிக்கும்படிச் செய்கிறான். (11) இப்படியாக கர்மேந்த்ரியங்கள் மற்றும் ஞானேந்த்ரியங்களுடன் கூடிய மனதை, ப்ராணவாயுவுடன் சேர்க்கிறான். (12) இப்படியாக மனம் உள்ளிட்ட பதினோரு இந்த்ரியங்களுடன் கூடிய ப்ராணவாயுவை ஜீவனுடன் சேர்க்கிறான். (13) அதன் பின்னர் முதுகின் நடுவில் உள்ள நரம்புகளில் இருந்து கடைந்தெடுக்கும் நேரம் வரும்போது, ஸ்தூல உடலில் இருந்து அவ்விதம் கடைந்து எடுக்கப்பட்ட பஞ்சபூதங்களுடன், ப்ராணவாயு மற்றும் இந்த்ரியங்களுடன் கூடிய ஜீவனைச் சேர்க்கிறான். (14) இவ்விதம் இந்த்ரியங்கள், ப்ராணன், பஞ்சபூதஸூக்ஷ்மங்களுடன் கூடிய ஜீவனை அவனுடைய நலத்தை விரும்புபவனாக உள்ளதால், அந்த ஜீவனின் இதயமாகத் தானே உள்ளது போன்று, அந்த ஜீவனைத் தன்னுடன் அணைத்து இளைப்பாற்றுகிறான். இப்படியாக ஜீவனை ஸ்தூல சரீரத்திலிருந்து வெளியேற்றுகிறான். இதுவரை கூறப்பட்ட (9 முதல் 14 முடிய) அனைத்தும் சாதாரண மனிதர்களுக்கும், ப்ரஹ்மத்தை அறிந்தவர்களுக்கும் பொதுவானது ஆகும். (15) இவ்விதம் கிளம்பும் ஜீவன் சரீரத்தை விட்டு எவ்விதம் வெளியேறுகிறான் என்பதை யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (3-166, 169) பின்வருமாறு கூறுகிறது. (குறிப்பு: மேலே உள்ள மூலத்தில் இவற்றுக்கான ச்லோகங்களைக் கண்டு கொள்க). இதயத்தில் தீபம் போன்ற ஒளியுடன் கூடிய ஜீவனுக்கு எண்ணற்ற நாடிகள் உள்ளன; அவை வெண்மை, கருமை, ஊதா, நீலம், பொன்னிற மஞ்சள், மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல நிறங்களுடன் உள்ளன; அவற்றின் நடுவில் ஒரே ஒரு நாடி மட்டும் மேல் நோக்கிச் செல்வதாக உள்ளது; இந்த நாடி வழியே செல்கின்ற ஜீவன், சூரிய மண்டலத்தைப் பிளந்து கொண்டு சென்று, ப்ரஹ்மலோகத்தைக் கடந்து உயர்ந்த மார்க்கத்தை அடைகிறான்; மேல் நோக்கி மேலும் நூறு நாடிகள் செல்கின்றன; இவற்றில் ஏதேனும் ஒன்றில் செல்லும் ஜீவன், தேவர்களுக்கான சரீரம் அடைந்தவனாக, தேவர்களின் லோகத்தில் நுழைகிறான்; பல நிறங்களில் உள்ள சில நாடிகள் கீழ்நோக்கிச் செல்கின்றன; இவற்றின் வழியே செல்லும் ஜீவன், தனது கட்டுப்பாட்டை இழந்தவனாக, கர்ம பலன்களை அனுபவிக்கும் பொருட்டு, ஸம்ஸாரத்தில் விழுகிறான் – என்றது காண்க. இது போன்று, திருடர்கள் செல்லும் பாதை போன்றதான வழிகளில், “எம்பெருமானின் ஆத்மா என்னுடையதே” என்று எண்ணும் திருடர்கள் செல்லும் வழிகளில் ப்ரபந்நனின் ஜீவன் செல்லாதபடி எம்பெருமான் பார்த்துக் கொள்கிறான். இத்தகைய திருடர்கள் சென்று சேரும் இடங்களான ஸ்வர்க்கம் மற்றும் நரகங்களுக்குச் செல்லும் நாடிகளில் ப்ரபந்நன் புகாதபடி எம்பெருமான் விலக்குகிறான். (16) மேலே கூறப்பட்ட நூறுவகையான நாடிகளிலிருந்து மாறுபட்டதும், அர்ச்சிராதி மார்க்கத்திற்கு இட்டுச் செல்வதும் ஆகிய ப்ரஹ்மநாடி என்பதில் ஜீவன் புகும்படிச் செய்கிறான். அங்கு சூரியனின் கிரணங்களைப் பிடித்தபடி அவன் மேலே ஏறிப் புறப்படும்படியாகச் செய்கிறான்.