Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்
மூலம் – மோக்ஷம் பெறுகைக்கு காலவிசேஷம் குறியாதே ப்ரபந்நரானாரைப் பற்ற, அபாயாவிரத: சச்வந்மாம் சைவ சரணம் கத: தநூக்ருத்யாஸ்விலம் பாபம் மாமாப்நோதி நர: சநை: என்று சொல்லுகிறது. முமுக்ஷுவாயிழிந்தவனாகையாலே ப்ரயோஜநாந்தர ருசி நிலை நிற்கவுண்டாகாது. உபய பாவனர்க்குப் போலே மோக்ஷருசியோடே கூட ப்ரயோஜநாந்தர ருசியும் கலந்து வந்தால் இவனுக்கு ஹிதபரனான ஈச்வரன் யாசிதோ அபி பக்தைர்நாஹிதம் காரயேத்தரி:, யஸ்யாநுக்ரஹமிச்சாமி தநம் தஸ்ய ஹராம்யஹம் இத்யாதிகளிலும், குண்டதாரோபாக்யாநாதிகளிலும் சொல்லுகிறபடியே சில ப்ரயோஜநாந்தரங்களைக் கொடாதே கண்ணழித்தும் சிலவற்றிலே அல்பாஸ்திரத்வ துக்கமிச்ரத்வாதி விவேகத்தாலே இவன் தனக்கு அருசியை விளைவித்தும், ஸௌபரி குசேலாதிகளுக்குப்போலே சில போகங்களைக் கொடுத்துத் தானே அலமந்துவிடப் பண்ணியும் விடுகையாலே மோக்ஷ காலம் குறித்து ப்ரபத்தி பண்ணியவனுக்கு அக்காலத்துக்குள்ளே ப்ரயோஜநாந்தர வைமுக்யம் பிறந்துவிடும். மற்றையவனுக்கும் அதோபாய ப்ரஸக்தோ அபி புக்த்வா போகாநநாமயாந் அந்தே விரக்திமாஸாத்ய விசதே வைஷ்ணவம் பதம் என்கிறபடியே வைராக்யாவதியே விலம்பமாயிருக்கும். தேவதாந்தரஸ்பர்சம் உண்டாயிற்றாகிலும் ஸர்வேச்வரன் ஏதேனும் ஒரு நாளிலே ச்ருத்யுக்தமானபடியே பரமைகாந்திகளோடே சேர்த்து லஜ்ஜாவதியாகத் திருத்தி இவனுடைய வ்யபிசாரத்தைத் தீர்க்கும். சிலருக்கு தேவதாந்தரஸ்பர்சம் நிலை நிற்குமாகில் முன்பு உபாயஸ்பர்சமில்லை; மேல் நரகாதிகளும் உண்டென்று அறியலாம். இவனுக்கு பகவத்விஷயத்தில் க்ருதாம்சம் என்றேனும் ஒரு நாள் உபாய நிஷ்பத்தியைப் பண்ணிக் கார்யகரமாம். மஹாவிச்வாஸம் பூர்ணமாகப் பிறந்து ப்ரபத்தி பண்ணினார்க்கு புத்திதௌர்பல்யமும் உபாயாந்தர ப்ரத்யாசையும் பிறவா. இவை பிறந்தவர்களுக்கு முன்பு பிறந்த விச்வாஸம் மந்தமாயிருக்கும். இவர்களையும் ஸர்வேச்வரன் மஹாவிச்வாஸாவதியாகத் திருத்திப் பூர்ணப்ரபத்தி நிஷ்டராக்கும். இவ்வைபரீத்யங்களுள் ஒன்றும் பிறவாதே நடந்தவர்களுக்கு விலம்பாதி சங்கையுங்கூட இல்லை. இவர்களுக்கு இச்சாவதி விலம்பம். இவர்கள் கோலின எல்லையில் மோக்ஷம் அவினாபூதம், இந்நிஷ்டையைப் பெற்ற இவ்வதிகாரி “கடைத்தலையிலிருந்து வாழும் சோம்பரை உகத்தி” என்கிறபடியே ச்ரிய:பதியான ஸர்வேச்வரனுக்கு சர்வதா அபிமதனாயிருக்கும்.
– மோக்ஷம் அடைவதற்காக எந்தவிதமான காலமும் குறிப்பிடாமல் ப்ரபத்தி செய்த ஒருவன் எப்போது மோக்ஷம் பெறுவான் என்பதை லக்ஷ்மீ தந்த்ரம் (17-102) - அபாயாவிரத: சச்வந்மாம் சைவ சரணம் கத: தநூக்ருத்யாஸ்விலம் பாபம் மாமாப்நோதி நர: சநை: - என்னைச் சரணம் என்று புகுந்த பின்னரும் ஒருவன் பாவங்களை இடைவிடாமல் செய்து, அதற்கான பிராயச்சித்தமும் செய்யாமல் இருக்கக்கூடும்; அவன் தனது அத்தனை பாவங்களையும் அனுபவித்துக் கழித்த பின்னரே என்னை அடைவான் – என்றது காண்க. ப்ரபன்னன் ஒருவன் மோக்ஷத்தில் விருப்பம் கொண்ட காரணத்தினால் அவன் மற்றை பலன்களில் அதிக காலம் விருப்பம் கொண்டிருக்கமாட்டான். ஒரு சில ப்ரபன்னர்கள் தங்களுடைய மோக்ஷ ஆசையுடன் சேர்த்து, ப்ரஹ்மபாவனர்கள் மற்றும் கர்மபாவனர்கள் போன்று, மற்ற பலன்களில் விருப்பம் கொண்டிருக்கக்கூடும். ஆனாலும், அவர்களுக்கு அவை ஏற்புடையவை என்பதால், அவர்களின் நலத்தை விரும்பும் ஸர்வேச்வரன் அவர்களுக்கு அவற்றை அளிப்பதில்லை. இதனை விஷ்ணுதர்மம் - யாசிதோ அபி பக்தைர்நாஹிதம் காரயேத்தரி: - தனக்கு தீமை உண்டாகும் ஒன்றை ப்ரபன்னன் வேண்டினாலும், அதனை எம்பெருமான் செய்வதில்லை – என்றும், யஸ்யாநுக்ரஹமிச்சாமி தநம் தஸ்ய ஹராம்யஹம் – நான் யாருக்கு அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று எண்ணுகிறேனோ அவனிடமிருந்து செல்வங்களை பறிக்கிறேன்; இதனால் அவனது உறவினர்களும் நண்பர்களும் அவனைவிட்டு அகல்வார்கள்; அவன் மிகுந்த துன்பம் கொண்ட அந்த நிலையிலும் என்னை விடாமல் இருந்தான் என்றால், தேவர்களுக்கும் கிட்டாத பலவற்றையும் அவனுக்கு அளிப்பேன் – என்றும் கூறியது காண்க. மேலும் குண்டதாரோபாக்யாநத்தில் கூறுவது போன்று மற்ற பயன்களை அளிக்காமல் தவிர்க்கிறான் (குறிப்பு: குண்டதாரோபாக்யாநம் என்பது மஹாபாரதத்தில் உள்ளதாகும். குண்டாதரன் என்னும் மேக தேவதையை வணங்கும் அந்தணன் ஒருவன் செல்வங்களை அந்தத் தேவதையிடம் யாசித்தான். ஆனால் அந்தத் தேவதையோ அவற்றை அளிக்காமல், அவனுக்கு அந்தச் செல்வங்கள் காரணமாக உண்டாகவல்ல குற்றங்களை உணர்த்தி, நல்வழிப்படுத்தியது). ஒரு சில நேரங்களில் இது போன்ற மற்ற பயன்கள் என்பவை அற்பமானவை, ஸ்திரமாக இல்லாதவை, துன்பத்தை அளிக்கவல்லவை என்று உணர்த்துகிறான். ஒரு சில நேரங்களில் ஸௌபரி மற்றும் குசேலர் போன்றவர்களுக்கு அளித்தது போன்று பெருஞ்செல்வத்தை அளித்துவிட்டு, அவர்களுக்கு அவற்றின் மீது வெறுப்பு உண்டாகும்படியாகச் செய்துவிடுகிறான். ஆகவே மோக்ஷத்திற்கான காலவரம்புடன் ப்ரபத்தி செய்யும் ஒருவன், அந்தக் காலகட்டத்திற்குள் எம்பெருமான் நீங்கலாக உள்ள மற்ற பயன்களில் வெறுப்பு கொண்டவனாக ஆகிறான். மோக்ஷத்திற்கான காலவரம்புடன் ப்ரபத்தி செய்யாத ஒருவனுக்கு காலதாமதம் உண்டாகும். இதனை லக்ஷ்மீதந்த்ரம் (17-103) - அதோபாய ப்ரஸக்தோ அபி புக்த்வா போகாநநாமயாந் அந்தே விரக்திமாஸாத்ய விசதே வைஷ்ணவம் பதம் – மற்ற பலன்களை விரும்பி, காம்யகர்மங்களில் ஈடுபடும் ஒருவன், எந்தவிதமான இடையூறும் இன்றி, இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து, இறுதியில் வைராக்யம் பெற்று பரமபதம் அடைவான் – என்றது. ஆகவே இவனுக்கு மற்றவை மீது வெறுப்பு உண்டாகும்வரை காலதாமதம் உள்ளது. ப்ரபத்தி செய்த ஒருவன் ஸர்வேச்வரனை விடுத்து மற்ற தேவதைகளை நாடியபடி இருக்கக்கூடும். அவனை ஏதோ ஒருநாள் ஸர்வேச்வரன் தன்னுடைய அடியார்களுடன் சேர்த்து வைக்கிறான். இதன் மூலம் அவன், தான் இத்தனை நாட்கள் இருந்த நிலையை எண்ணி வெட்கப்படும்படிச் செய்து, அவனைத் திருத்துகிறான். இப்படியாக அவனுடைய தகாத தொடர்புகளை நீக்கிவிடுகிறான். ப்ரபத்தி செய்த ஒரு சிலருக்கு மற்ற தேவதைகளின் தொடர்பு என்பது நிலையாக நின்றுவிடுகிறது. இவர்களுக்கு ப்ரபத்தி என்னும் உபாயம் முழுமையாக இல்லை என்று அறியவேண்டும். இவர்கள் நரகங்களுக்குச் செல்வர் என்பதையும் அறியவேண்டும். இப்படிப்பட்ட ஒருவனுக்கு, அவனிடம் உள்ள சிறிதளவு ப்ரபத்தி என்பது எதிர்காலத்தில், சில நேரங்களை பூர்த்தியாகக் கூடும், அப்போது அந்த ப்ரபத்தி பலன் அளிக்கும். பூர்ணமான விச்வாஸம் பிறந்த பின்னர் ப்ரபத்தி செய்த ஒருவனுக்கு எந்தவிதமான புத்தி தடுமாற்றமும் இருக்காது. அவன் மற்ற உபாயங்களை நாடவும் மாட்டான். ஒரு சிலருக்கு இப்படியான புத்தி தடுமாற்றமோ அல்லது மற்ற உபாயங்களை நாடுதல் என்பதோ உள்ளது என்றால், அவர்கள் முன்பு கொண்டிருந்த விச்வாஸம் பூர்ணமானது அல்ல என்று கருத்து. இவர்கள் பூர்ணவிச்வாஸம் பெறும்வரை ஸர்வேச்வரன் இவர்களைத் திருத்தியபடி உள்ளான். இப்படியாக இவர்களை முழுமையான ப்ரபன்னர்களாக மாற்றுகிறான். இப்படியாக உள்ள எந்தவிதமான தோஷங்களும் இல்லாத ப்ரபன்னன் ஒருவனுக்கு மோக்ஷம் பெறுவதற்கு எந்தவிதமான காலதாமதமும் இல்லை. இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. அவர்களுக்கு ”இந்த நாளில் மோக்ஷம் அடையலாம்” என்னும் விருப்பம் உண்டாகின்றவரை மட்டுமே காலதாமதம் உள்ளது. அவர்கள் விரும்பிய நேரத்தில் அவர்களுக்கு மோக்ஷம் கிட்டும். இப்படியாக உண்மையான ப்ரபன்னன் என்னும்படியாக உள்ள ஒருவன் திருமாலை (38) - கடைத்தலையிலிருந்து வாழும் சோம்பரை உகத்தி - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான அரங்கனின் திருவுள்ளத்திற்கு மிகவும் ப்ரியமான ஒருவனாக உள்ளான்.