Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

மூலம் – மனஸி கரண க்ராமம் ப்ராணே புன: புருஷே ச தம் ஜடிதி கடயந் பூதேஷ்வேநம் பரே ச தமாத்மநி ஸ்வவித் அவிதுஷோ: இத்தம் ஸாதாரணே ஸரணேர்முகை: நயதி பரதோ நாடீபேதை: யதோசிதம் ஈச்வர: இப்படி லோகவிக்ராந்த சரணௌ சரணம் தே அவ்ரஜம் விபோ என்று இவன் கால்பிடிக்க ஹஸ்தாவலம்பநோ ஹி ஏகோ பக்தி க்ரீதோ ஜனார்த்தன: என்கிறபடியே இவனைக் கைப்பிடித்து ராஜாதிராஜ: ஸர்வேஷாம் என்கிறபடியே உபயவிபூதி நாதனான ஸர்வேச்வரன் தானுகந்ததொரு நிலத்திலே வைக்க, அபிஷிக்தையான மஹிஷியைப் போலே பஹுமதனாய்த் தன் பரமைகாந்தித்வத்துக்கு அநுரூபமான வ்ருத்தியோடே போகும் இவ்வதிகாரி. இப்படிப்பட்ட அதிகாரிகளிலே ப்ராரப்த துஷ்க்ருதவிசேஷ வைசித்ரியாலே வரும் அஹங்கார மமகாரங்களென்ன, அவையடியாக அதடியாக அபசாரங்களென்ன, ப்ரயோஜநாந்தர ருசியென்ன, அதடியாக ஸம்பாவிதமான தேவதாந்தர ஸ்பர்சமென்ன, புத்தி தௌர்ப்பல்யமென்ன, அதடியாக வரும் உபாயாந்தர ப்ரத்யாசையென்ன, இவ்வைபரீத்யம் பிறந்தவர்களுக்கும் இவை பிறவாதே ப்ராரப்த ஸுக்ருதவிசேஷத்தாலும் பூர்வப்ரபத்தியில் பலஸங்கல்ப விசேஷத்தாலும் சித்ரமில்லாத கைங்கர்யத்திலே ப்ரதிஷ்டிதராய்ப் போந்தவர்களுக்கும் ஸம்ஸாரத்தினின்றும் நிர்யாணத்துக்கு விலம்ப அவிலம்பங்களிலே நிலையிருக்கும்படி எங்ஙனே என்னில்: இவ்விடத்தில் இவர்களுக்குச் சார்வாகாதிகளுக்குப்போலே நிலை நின்ற அஹங்கார மமகாரங்கள் புகா. அவஹிதராய் நடப்பார் இடறுமாப்போலே என்றேனும் ஒரு கால் வரும் அஹங்கார மமகாரங்கள் விவேகாவதிகளாய்ப் பின்பற்ற தெளிவாலே கழிந்துபோம். அபராதங்கள் பிறந்தால் க்ஷாமணாவதியாயும் சிக்ஷாவதியாயும் கோரின காலத்துக்குள்ளே அபராத நிஸ்தாரம் பிறக்கும்படி அபராத பரிஹாராதிகாரத்திலே சொன்னோம்.

– (முதலில் உள்ள ச்லோகத்திற்கான பொருள்) – மனத்தில் இந்த்ரியங்களையும், மனத்தை ப்ராணனிலும், ப்ராணத்தை ஜீவனிடமும், ஜீவனை பஞ்சபூதங்களிலும், பஞ்சபூதங்களுடன் கூடிய ஜீவனைத் தன்னுடனும் எம்பெருமான் விரைவாகச் சேர்த்துக் கொள்கிறான். ஆக ஜீவன் வெளிக்கிளம்புதல் என்பது தனது ஸ்வரூபத்தை அறிந்து உபாயம் செய்தவன், செய்யாதவன் ஆகிய இருவருக்கும் பொதுவாகவே உள்ளது. ஆனால் அவரவர்களுக்கு ஏற்றபடி தூமாதி மார்க்கமாகவோ அல்லது அர்ச்சிராதி மார்க்கமாகவோ எம்பெருமான் அழைத்துச் செல்கிறான். ஜிதந்தே ஸ்தோத்ரம் - லோகவிக்ராந்த சரணௌ சரணம் தே அவ்ரஜம் விபோ – எங்கும் உள்ளவனே! அனைத்து உபாயங்களையும் கைவிட்டு உலகம் அளந்த உனது திருவடிகளைச் சரணம் புகுந்தேன் – என்று சேதனன் எம்பெருமானின் திருவடிகளில் சரணம் புகுகிறான். அப்போது எம்பெருமான், விஷ்ணுதர்மம் (3-24) - ஹஸ்தாவலம்பநோ ஹி ஏகோ பக்தி க்ரீதோ ஜனார்த்தன: - பக்தியால் வாங்கப்பட்ட ஜனார்த்தனன் என்று திருநாமம் கொண்ட எம்பெருமானின் திருக்கரங்களே ப்ரபன்னனுக்குத் துணையாகும் – என்பதற்கு ஏற்ப சேதனனின் கைகளைப் பிடிக்கிறான். இவ்விதமாகத் தன்னால் கைப்பிடிக்கப்பட்ட சேதனனை, மஹாபாரதம் - ராஜாதிராஜ: ஸர்வேஷாம் – அனைத்திற்கும் ராஜாதிராஜன் – என்று போற்றப்படும் உபயவிபூதி நாதனான ஸர்வேச்வரன், தான் எந்த ஒரு திவ்யதேசத்தில் விருப்பம் கொண்டு வாஸம் செய்கிறானோ, அந்த இடத்தில் வாழவைக்கிறான். அங்கு அந்த சேதனன் அரசனின் ப்ரியமான அரசியைப் போன்று அனைவராலும் கொண்டாடப்பட்டபடி வாழ்கிறான். தனது பரமைகாந்தி நிலைக்கு ஏற்றபடி அவன் வாழ்ந்து வருகிறான். இப்படியாக வாழ்ந்து வருபவர்களில், பலன் தரத்தொடங்கிவிட்ட பூர்வ பாவ கர்மபயன் காரணமாகக் கீழே உள்ள நிலைகளில் இருத்தல் கூடும்: அவர்களில் சிலர் “நான்”, “எனது” என்ற அஹங்கார மமகாரங்களில் சிக்கக்கூடும் இத்தகைய எண்ணங்கள் காரணமாக அபராதங்கள் செய்யக்கூடும் எம்பெருமானைத் தவிர உள்ள மற்ற விஷயங்களில் விருப்பமோ ஆசையோ கொள்ளக்கூடும் இத்தகைய விருப்பங்கள் நிறைவேறும் பொருட்டு, மற்ற தெய்வங்களை நாடக்கூடும் மன உறுதியை இழக்கக்கூடும் இதனால் மற்ற உபாயங்களில் இழியக்கூடும் மேலும் சில அதிகாரிகள், பலன் தரத்தொடங்கிவிட்ட பூர்வ புண்ணிய கர்மபயன் காரணமாகவும், ப்ரபத்தியின்போது செய்த குறிப்பிட்ட விண்ணப்பம் காரணமாகவும் எம்பெருமானின் கைங்கர்யத்தை விட்டு சற்றும் இடைவெளி இன்றி, அகலாமல் இருக்கக்கூடும். இப்படியாக உள்ள இரண்டுவிதமான ப்ரபன்னர்கள் இந்த சரீரத்தை விட்டு அகலும் காலதாமதம் எத்தகையது என்ற கேள்வி எழலாம். விடை அளிப்போம். இங்கு ப்ரபன்னர்களுக்குச் சார்வாகர்கள் போன்று எப்போதும் அஹங்கார மமகாரங்கள் நிலையாக நிற்பதில்லை. நன்றாக நடப்பவர்கள் கூட ஒரு சில நேரத்தில் நிலை தடுமாறி விழுவது போன்று, இத்தகைய அஹங்கார மமகாரங்கள் எப்போதாவது ப்ரபன்னர்களைச் சூழ்கின்றன. ஆனால் இவை விவேகம் ஏற்பட்டவுடனேயே கழிகின்றன. அபராதபரிஹார அதிகாரத்தில் – ஏதேனும் அபசாரம் உண்டாகிவிட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கும் வரையிலோ அல்லது அதற்கான பிராயச்சித்தமான சிறிய தண்டனையை அனுபவித்த பின்னரோ அந்த அபசாரம் நீங்கிவிடும் என்று கூறியது காண்க.