Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்
கைங்கர்யத்துடன் கூடிய வாஸம்
மூலம் – ஆகையால், ஞானஸமகாலமுக்த்வா கைவல்யம் யாதி கதசோக: தீர்த்தே ச்வபச க்ருஹே வா நஷ்டஸ்ம்ருதிரபி பரித்யஜன் தேஹம் என்று சரீரபாதத்துக்கு ஒரு தேச விசேஷ நியமமில்லை என்றதுவும் எப்படிக்கும் பலத்தில் இழவில்லையென்கைக்காக. ஆராத அருளமுதம் பொதிந்த கோயில் அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில் தோலாத தனிவீரன் தொழுத கோயில் துணையான வீடணற்குத் துணையாம் கோயில் சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில் செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில் திருவரங்கமெனத் திகழும் கோயில்தானே. கண்ணனடியிணை எமக்குக் காட்டும் வெற்புக் கடுவினையர் இருவினையும் கடியும் வெற்புத் திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத் தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறித்த வெற்புப் புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்புப் பொன்னுலகிற் போகமெலாம் புணர்க்கும் வெற்பு விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு வேங்கடவெற்பென விளங்கும் வேதவெற்பே. உத்தமவமர்த்தல மமைத்ததோர் எழிற்றனுவினுய்த்த கணையால் அத்திவரக்கன் முடிபத்துமொரு கொத்தென உதிர்த்த திறலோன் மத்தறு மிகுத்த தயிர்மொய்த்தவெணெய் வைத்ததுணும் அத்தனிடமாம் அத்திகிரி பத்தர்வினை தொத்தறவறுக்கும் அணியத்திகிரியே. தேனார்கமலத் திருமகள் நாதன் திகழ்ந்துறையும் வானாடுகந்தவர் வையத்திருப்பிடம் வன்தருமக் கானாரிமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமு நாகமும் கூடிய நன்னிலமே. ஸா காசீதி ந சாகசீதி புவி ஸ: அயோத்யேதி ஸ: அவந்தீதி ந கல்மஷாதவதி ஸா காஞ்சீதி நோதஞ்சதி தத்தே ஸா மதுரேதி நோத்தமதுராம் நான்யாபி மாந்யா பூரி யா வைகுண்ட கதா ஸுதா ரஸபுஜாம் ரேசேத நோ சேதஸே
– வராஹ புராணம் - ஞானஸமகாலமுக்த்வா கைவல்யம் யாதி கதசோக: தீர்த்தே ச்வபச க்ருஹே வா நஷ்டஸ்ம்ருதிரபி பரித்யஜன் தேஹம் – இந்த மந்த்ரத்தைக் கூறி ப்ரபத்தி செய்யும் ஒருவன் புண்ணிய தீர்த்தம், நாய் மாமிஸம் உண்பவன் வீடு, நினைவிழத்தல் போன்ற எந்தச் சூழலில் மரணம் அடைந்தாலும் மோக்ஷம் பெறுகிறான் – என்றது. ஆகவே இந்த வரியானது மரணம் ஸம்பவிக்க சிறப்பான இடங்கள் என்று ஏதும் இல்லை என்று கூறியபோதிலும், செய்த ப்ரபத்திக்குப் பலனாகிய மோக்ஷம் எப்படியாயினும் கிட்டும் என்பதை உணர்த்துவதையும் அறியவேண்டும். ஆராத அருளமுதம் என்னும் பாசுரத்தின் பொருள் – எத்தனை அனுபவித்தாலும் திகட்டாதபடி உள்ளது; கருணையே வடிவான அழகியமணவாளன் உறைகின்ற கோயில்; தாமரையில் வஸிக்கும் நான்முகன் அயோத்தியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு வம்ஸத்தினருக்கு அளித்த கோயில்; தோல்வி என்பதை அறியாத வீரனாகிய இராமன் ஆராதனை செய்த கோயில்; இராமனுக்குத் துணையாக நின்ற விபீஷணனுக்குக் காப்பாக இருந்த கோயில்; வேறு எங்கும் கிட்டாத பயன்கள் அனைத்தையும் அளிக்கும் கோயில்; வேதத்தின் முதல் அக்ஷரமான ப்ரணவத்தின் சேர்க்கை கொண்ட கோயில்; தீராத வினைகள் அனைத்தையும் நீக்கும் கோயில் – இதுவே திருவரங்கம் என்னும் கோயிலாகும். கண்ணனடியிணை என்னும் பாசுரத்தின் பொருள் – க்ருஷ்ணனின் திருவடிகளை நாம் பற்றும்படியாகக் காட்டித் தரும் திருமலை; தீய பாவங்களை பலவற்றையும் கொண்டவர்களின் இருவினைகளையும் தீர்க்கும் திருமலை; இதுவே பரமபதம் என்னும்படியாக ஒளிர்கின்ற திருமலை; தெளிந்த தீர்த்தங்கள் கொண்ட பொய்கைகள் நிறைந்த திருமலை; புண்ணியத்தின் இருப்பிடம் இதுவே என்று போற்றப்படும் திருமலை; பரமபதத்தில் அடைகின்ற அனுபவங்கள் அனைத்தையும் இங்கேயே அனுபவிக்கச் செய்யும்படியான திருமலை; நித்யஸூரிகளாலும் இங்கு உள்ளவர்களாலும் விரும்பத்தக்க திருமலை – இது திருவேங்கடமலை என்று வேதங்களாலும் போற்றபடும் திருமலையாகும். உத்தம என்னும் பாசுரத்தின் பொருள் – உயர்ந்த போர்க்களத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகான வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரே அம்பு மூலமாக பல அஸ்த்ரங்களின் பலம் நிறைந்த அசுரனாகிய இராவணனின் பத்துத் தலைகளையும், தேங்காய்க்கொத்து போன்று அறுத்த பலம் கொண்ட இராமன்; மத்தினால் கடையப்படும்படியான மிகுந்த தயிர், தாயான யசோதை மற்றும் ஆய்ச்சிமார்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மிகுதியான வெண்ணெய் ஆகியவற்றை உண்ட க்ருஷ்ணன் – இப்படிப்பட்ட ஸ்வாமியான ஸ்ரீமந்நாராயணன் வாஸம் செய்யும் ஸ்தலமாக ஹஸ்திகிரி உள்ளது. எம்பெருமானின் அடியார்களுடைய பாவங்களை நீக்கி, ஸம்ஸார பந்தம் இல்லாதபடி ஒழிக்கவல்ல சக்கராயுதம் போன்றே உள்ளது. தேனார் என்னும் பாசுரத்தின் பொருள் – தேன் நிறைந்த தாமரைமலரில் வீற்றுள்ள பெரியபிராட்டியாரின் நாதனான ஸர்வேச்வரன் எப்போதும் வாஸம் செய்கின்ற பரமபதத்தை அடையவேண்டும் என்று விரும்பி ப்ரபத்தி செய்வர். இப்படிச் செய்தவர்கள் இந்த உலகில் வஸிக்கின்ற இடங்கள் எவையோ அவை – கடுமையான தவங்கள் இயற்றப்படும் இமயமலை, கங்கையின் கரைகள், காவேரியின் கரைகள், கடலில் உள்ள சுவேத த்வீபம், மற்ற திவ்யதேசங்கள், பரமபதம் ஆகிய பலவும் கூடியுள்ள இடம் போன்று ஆகின்றன. ஸா காசீதி என்று தொடங்கும் ச்லோகத்தின் பொருள் – இந்தப் பூமியில் உள்ள எந்த நகரமானது எம்பெருமானின் சரிதங்கள் என்னும் அமிர்தத்தைப் பருகவல்ல பாகவதர்களின் மனதிற்கு ஏற்றபடி இல்லையோ, அப்படிப்பட்ட நகரம் - காசி என்ற பெயர் கொண்டதாக உள்ளபோதிலும் ப்ரகாசம் அடைவதில்லை; அயோத்தியாக இருந்தாலும் வசிப்பதற்கு ஏற்றதல்ல; அவந்தியாக இருந்தாலும் பாவங்களில் இருந்து காப்பாற்ற வல்லது அல்ல; காஞ்சி என்றாலும் உயர்வானது அல்ல; மதுரா என்றாலும் பெருமையை அடைவதில்லை; எப்படி இருந்தாலும் மதிக்கத் தக்கதாக இருப்பதில்லை.