Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்
கைங்கர்யத்துடன் கூடிய வாஸம்
மூலம் - ஸ்ரீஸாத்த்வதாதிகளிலும் ஸ்வயம்வ்யக்த ஸைத்த வைஷ்ணவங்களென்கிற க்ஷேத்ர விசேஷங்களையும் அவற்றின் எல்லைகளில் ஏற்றச் சுருக்கங்களையும் பிரியச் சொல்லி த்ருஷ்டேந்த்ரியவசச்சித்தம் ந்ருணாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே என்று அவ்வோ க்ஷேத்ரங்களிலெல்லைக்குள்ளெ வஸித்தவனுக்கு தேஹந்யாஸ காலத்திலே வரும் விசேஷமும் சொல்லப்பட்டது. ஆகையால் யத்கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோராயதநே வஸேத் ந கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோராயதநே வஸேத் என்கிறபடியே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே வல்ல கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு பகவத் பாகவத அபிமாந விஷயமான ஸத்த்வோத்தர க்ஷேத்ரத்திலே வஸிக்கை உசிதம்.
– எம்பெருமான் தானாகவே எங்கெல்லாம் தோன்றினானோ, எங்கெல்லாம் ஸித்தர்களால் எம்பெருமான் ஸ்தாபிக்கப்பட்டானோ, எங்கெல்லாம் வைஷ்ணவர்களால் ஸ்தாபிக்கப்பட்டானோ எந்த இடங்களின் மேன்மைகளை ஸாத்த்வத ஸம்ஹிதைகள் உரைக்கின்றன; அந்த இடங்களைப் பற்றியும், அதன் எல்லைகள் பற்றியும் தனியாகவே கூறப்பட்டன. ஸாத்வத ஸம்ஹிதை (7-120) - த்ருஷ்டேந்த்ரியவசச்சித்தம் ந்ருணாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே – கொடியதான இந்த்ரியங்களின் பிடியில் சிக்கி, தோஷங்கள் பல அடைந்த மனமானது, மரணகாலத்தில் நாராயணன் கோயில் உள்ள திவ்யதேசத்தில் வசிப்பதன் மூலம் தூய்மை அடைகிறது – என்றது காண்க. இப்படியாக அப்படிப்பட்ட இடங்களில் வசிப்பவன் தனது உடலை விடும்போது அவனுக்கு ஏற்படும் மேன்மை கூறப்பட்டது. ஆகவே - யத்கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோராயதநே வஸேத் ந கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோராயதநே வஸேத் – எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்தில் வாழ்ந்தபடி தன்னால் இயன்ற கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும்; அப்படி கைங்கர்யம் செய்ய இயலவில்லை என்றாலும், செய்யக்கூடாதவற்றைத் தவிர்த்தபடி எம்பெருமான் கோயில் கொண்டுள்ள ஊரில் வாழவேண்டும் – என்னும்படி இருக்கவேண்டும். அதாவது தள்ளப்பட வேண்டியவை, ஏற்கப்பட வேண்டியவை என்றபடி வாழ்ந்து, கைங்கர்யம் செய்தபடி, பகவானும் பாகவதர்களும் உள்ள இடத்தில் இருந்தபடி, ஸத்வ குணம் பெருகியபடி உள்ள இடத்தில் வாழவேண்டும்.