Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்

கைங்கர்யத்துடன் கூடிய வாஸம்

மூலம் – அவ்விடங்கள் தம்மில் உகந்தருளின திவ்யதேசங்களிலே தனக்குக் கைங்கர்யத்துக்கு ஸௌகரியமுள்ள இடத்திலே நிரந்தரவாஸம் பண்ண உசிதம். இத்தை யாவச்சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று ஸத்த்வோத்தரங்களான பகவத் க்ஷேத்ரங்களுக்குப் ப்ரதர்சநார்த்தமாக அருளிச்செய்தார். பகவத் க்ஷேத்ரங்களே விவேகிக்கு வாஸஸ்தானமென்னுமிடத்தை யத்ர நாராயணோ தேவ: பரமாத்மா ஸநாதந: தத்ரபுண்யம் தத்பரம் ப்ரஹ்மா தத்தீர்த்தம் தத்போவநம் தத்ர தேவர்ஷய: ஸித்தா: ஸர்வே சைவ தபோதநா: என்று ஆரண்யபர்வத்தில் தீர்த்தயாத்ரையிலும், கோமந்த: பர்வதோ ராஜந் ஸுமஹாந் ஸர்வதாதுமாந் வஸதே பகவாந் யத்ர ஸ்ரீமாந் கமலலோசந: மோக்ஷிபி: ஸம்ஸ்துதோ நித்யம் ப்ரபுர்நாராயணோ ஹரி: என்று ப்ரதேசாந்தரத்திலும் மஹர்ஷி அருளிசெய்தான். ஸ்ரீவால்மீகி பகவானாலும் ஸுபகச்சித்ரகூடோ அஸௌ கிரிராஜோபமோ கிரி: யஸ்மிந் வஸதி காகுத்ஸ்த: குபேர இவ நந்தநே என்கிறவிடத்திலும் பகவததிஷ்டித க்ஷேத்ரத்தினுடைய அபிகந்தவ்யதை ஸுபகசப்தத்தாலே ஸூசிக்கப்பட்டது.

– இப்படியாக உள்ள இடங்களிலும் எம்பெருமான் அர்ச்சாவதாரமாக நிற்கின்ற இடங்களில் அவனுக்குக் கைங்கர்யம் செய்தபடி வாழ்வதற்கான வசதிகள் உள்ள இடங்களே ப்ரபந்நனுக்கு சரியான இடங்களாகும். இப்படியாக ஸத்துவ குணங்கள் நிரம்பிய இடங்களுக்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீரங்கநாதன் சரணாகதி கத்யத்தில் உடையவர் மூலமாக - யாவச்சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ – இந்த சரீரம் விழும்வரை ஸ்ரீரங்கத்திலேயே ஸுகமாக மகிழ்வுடன் இருப்பாயாக – என்று அருளிச் செய்தான். எம்பெருமான் உள்ள இடங்களே விவேகம் கொண்ட ஒருவன் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்பதைக் கீழே உள்ள வரிகளில் காண்க: மஹாபாரதம் ஆரண்யபர்வம் (88-27-28) - யத்ர நாராயணோ தேவ: பரமாத்மா ஸநாதந: தத்ரபுண்யம் தத்பரம் ப்ரஹ்மா தத்தீர்த்தம் தத்போவநம் தத்ர தேவர்ஷய: ஸித்தா: ஸர்வே சைவ தபோதநா: - எப்போதும் உள்ளவனாகிய நாராயணன் எங்கு உள்ளானோ அந்த இடமே புண்ணியமானது; மிகவும் உயர்ந்த இடமாகும்; தூய்மையானது; அந்த இடமே புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்ததாகும்; தவம் செய்ய ஏற்ற இடமாகும்; அந்த இடத்தில் தேவர்களும், ஸித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். மஹாபாரதம் பீஷ்மபர்வம் (12-8-9) - கோமந்த: பர்வதோ ராஜந் ஸுமஹாந் ஸர்வதாதுமாந் வஸதே பகவாந் யத்ர ஸ்ரீமாந் கமலலோசந: மோக்ஷிபி: ஸம்ஸ்துதோ நித்யம் ப்ரபுர்நாராயணோ ஹரி: - பல தாதுக்கள் நிறைந்த மிகவும் உயர்ந்த கோமந்தம் என்னும் மலை உள்ளது. அரசனே! அங்கு தாமரை போன்று அழகிய கண்கள் கொண்டவனும், ஐச்வர்யம் நிரம்பியவனும் ஆகிய நாராயணன், மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுக்களால் துதிக்கப்பட்டு, எப்போதும் வாழ்கிறான். இப்படியாக அர்சாவதாரமாக இல்லாத மற்ற இடங்கள் பற்றியும் அருளிச்செய்தார்கள். வால்மீகி பகவான் இராமாயணம் அயோத்யாகாண்டத்தில் (98-12) - ஸுபகச்சித்ரகூடோ அஸௌ கிரிராஜோபமோ கிரி: யஸ்மிந் வஸதி காகுத்ஸ்த: குபேர இவ நந்தநே – இமய மலை போன்றதான இந்தச் சித்ரகூட மலையும் மிகவும் மேன்மை உள்ளது; ஏன்? குபேரன் நந்தவனத்தில் உள்ளது போன்று இங்கு இராமன் உள்ளதால் ஆகும் – என்றார். இங்கு உள்ள ஸுபக என்னும் பதம், எம்பெருமான் அங்கு வாஸம் செய்த காரணத்தினால் சென்று அடையத்தக்கது என்பதைக் கூறுகிறது.