Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்
பாகவதர்கள் வஸிக்கும் இடங்களே சிறந்தவை
மூலம் – அவ்விடங்கள் தம்மிலும் “கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ” என்கிறபடியே பாகவதோத்தரமான தேசம் முமுக்ஷுவுக்குப் பரிக்ராஹ்யம். கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸந்த்ரஷ்டாரமீச்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜநா: என்னச் செய்தே, கலௌ கலு பவிஷ்யந்தி நாராயணபராயணா: க்வசித்க்வசிந்மஹாபாகாத்ரமிடேஷு ச பூரிச: தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரி ச மஹாபாகாப்ரதீசீ ச மஹாநதீ யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே அமலாசயா: இத்யாதிகளிலே கலியுகத்தில் பாகவதர்கள் வஸிக்கும் தேசவிசேஷம் சொல்லுகையாலே இந்த யுகத்தில் இப் ப்ரதேசங்களில் பாகவத பரிக்ருஹீதமான ஸ்தலங்களே பரிக்ராஹ்யங்கள்.
– இப்படிப்பட்ட இடங்களிலும் மிகவும் சிறப்பான இடங்கள் எவை என்றால், பாகவதர்கள் வசிக்கும் இடங்களே ஆகும். மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவர்கள், பெரியாழ்வார் திருமொழி (4-4-7) - கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ – என்று கூறுவது போன்று, பாகவதர்கள் வசிக்கும் இடங்களையே கைக்கொள்ளத் தக்கதாகக் கொள்ளவேண்டும். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-1-50) - கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸந்த்ரஷ்டாரமீச்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜநா: - மைத்ரேயரே! இந்தக் கலியுகத்தில் பாஷாண்டிகளால் மனம் கெடுக்கப்பட்ட மனிதர்கள், அனைத்திற்கும் நாதனாக அனைத்தையும் படைத்த விஷ்ணுவை ஆராதனை செய்யமாட்டனர் – என்று கூறியபோதிலும், கலியுகத்தில் பாகவதர்கள் எங்கு வாழ்கின்றனர் என்று ஸ்ரீமத்பாகவதம் (11-5-38, 39, 40) பின்வருமாறு கூறுகிறது - கலௌ கலு பவிஷ்யந்தி நாராயணபராயணா: க்வசித்க்வசிந்மஹாபாகாத்ரமிடேஷு ச பூரிச: தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரி ச மஹாபாகாப்ரதீசீ ச மஹாநதீ யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே அமலாசயா: - நாராயணனே அடையவேண்டிய இலக்கு என்று உணர்கின்ற பரமைகாந்திகள் கலியுகத்தில் இங்கும் அங்குமாகப் பல இடங்களில் பிறப்பார்கள்; அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாமிரபரணி, க்ருதமாலா, பாலாறு, காவேரி முதலான நதிக்கரைகளிலும் மேற்கு நோக்கிப் பாய்கின்ற நதிக்கரைகளிலும் பிறப்பார்கள்; இப்படிப்பட்ட பாவனமான நதிகளின் தீர்த்தங்களைப் பருகுபவர்கள் தூய்மையான மனம் கொண்டவர்களாக, வாஸுதேவனிடம் மிகுந்த பக்தியை உடையவர்களாக இருப்பார்கள் – என்றது. இப்படியாக இந்தக் கலியுகத்தில் பாகவதர்கள் வாழ்கின்ற இடங்களே பரமைகாந்திகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கூறப்பட்டுள்ளன.