Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்

வர்ணாச்ரம தர்மங்கள் ஓங்கியுள்ள இடங்களே சிறந்தவை

மூலம் – இருந்த நாள் இப்படி ஸ்வயம்ப்ரயோஜநமாக நிரபராத அநுகூல வ்ருத்தியிலே ருசியும் த்வரையுமுடையவனாய். ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்ய: தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி என்னும்படியாயிருக்கிற பரமைகாந்திக்கு வ்ருத்திக்கு அநுகுணமாக வாஸஸ்தாநவிசேஷம் எதென்னில், ஆர்யாவர்த்தாதி புண்யதேசங்கள் யுகஸ்வபாவத்தாலே இப்போது வ்யாகூலங்களானபடியாலே சாதுர்வர்ண்யதர்மம் ப்ரதிஷ்டிதமான இடத்திலே வஸிப்பானென்கிறதுவே இப்போதைக்கு உபாதேயம்.

– தான் இந்த உலகில் வாழும் காலம் முடிய எந்தவிதமான அபராதங்களும் இழைக்காமல், எம்பெருமானுக்கு ஏற்புடைய வகையில் வாழ்வதில் விருப்பமும் ஆர்வமும் கொண்டபடி ப்ரபன்னன் உள்ளான். அவன் எம்பெருமானுக்கு எப்படி நெருக்கமாக உள்ளான் என்றால் - ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்ய: தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி – மற்ற தேவதைகளைப் பற்றாத பரமபாகவதனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவனுடைய ஊர், குலம் முதலானவற்றைக் கொண்டு அவனைக் குறிப்பிடக்கூடாது; அவனுக்கு எம்பெருமானுடன் உள்ள தொடர்பைக் கூறியே கூறவேண்டும்; காரணம், அவனுக்கு அனைத்துமாக எம்பெருமானே அல்லவோ உள்ளான் – என்று விஷ்வக்ஸேந ஸம்ஹிதை கூறுவதன் மூலம் அறியலாம். ஆக இப்படிப்பட்ட பரமைகாந்திகள் வஸிப்பதற்கு ஏற்ற இடம் எவை என்றால்: ஆர்யாவர்த்தம் என்பதான இமயமலை மற்றும் விந்தியமலை ஆகியவற்றின் இடையே உள்ள பகுதியானது யுகங்களின் மாறுபாடு காரணமாக நிலைகுலைந்துள்ளது. ஆகவே நான்கு வர்ணங்களுக்கும் ஏற்றபடியான தர்மங்கள் எந்த இடங்களில் கடைபிடிக்கப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட இடங்களே பரமைகாந்திகள் வஸிக்கத்தக்கவை ஆகும்.