Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
பாகவத அபசாரமே முதன்மையாக விலக்கப்படவேண்டியது
மூலம் – தான் குற்றவாளனாகவுமாம் தான் இப்போது குற்றம் செய்யாதேயிருக்க ஜந்மாந்தர துஷ்க்ருதத்தாலேயாகவுமாம் சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே அவர்களை க்ஷமை கொள்ளுகிற முகத்தாலே ஈச்வரனை க்ஷமை கொள்ள வேணுமென்னுமிடம் ருக்ஷாக்ஷராணி ச்ருண்வந் வை ததா பாகவதேரிதாந் ப்ரணாமபூர்வகம் க்ஷாந்த்யா யோ வதேத்வைஷ்ணவோ ஹி ஸ: என்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற ப்ரமாணத்திலே ப்ரஸித்தம். இங்ஙன் செய்யாதபோது யே ப்ராஹ்மணாஸ்தே அஹமஸம்சயம் ந்ருப தேஷ்வர்ச்சிதேஷ்வர்ச்சிதோ அஹம் யதாவத் தேஷ்வேவ துஷ்டேஷ்வஹமேவ துஷ்டோ வைரம் ச தைர்யஸ்ய மமாபி வைரம் க்நந்தம் சபந்தம் புருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந ப்ரணமேத்யதா அஹம் ஸ பாபக்ருத் ப்ரஹ்மதவாக்நிதக்தோ வக்யச்ச தண்டயச்ச ந சாஸ்மதீய: என்கிறபடியே பகவதபிமாந பாஹ்யனுமாய், வைஷ்ணவப்ரக்ருதியாயிருக்கிற தனக்கு ஸ்வரூபமென்னலாம்படி அந்தரங்கமான பாகவதசேஷத்தையும் ஸ்வபாவமாய் நிற்கிற சாம தமாதிகளையும் இழந்தானாம். இவற்றை இழக்கைதானே இவனுக்கு வதமும் தண்டமும். பகவதபிமாந பாஹ்யதையின் கொடுமையை “அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே” என்று பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்தார்.
– ஒருவன் இந்தப் பிறவியில் பாகவத அபசாரம் செய்யக்கூடும்; அல்லது இந்தப் பிறவியில் ஒருவன் பாகவத அபசாரம் செய்யாதபோதிலும் அவன் முற்பிறவிகளில் செய்த தவறுகளின் காரணமாக அவனை ஒரு சில பாகவதர்கள் வெறுக்கக்கூடும். இப்படி உள்ளபோது அவன் ஏதோ ஒரு முறையில் அவர்கள் தன்னை மன்னிக்கும்படிச் செய்து, இதன் மூலம் ஈச்வரனும் தன்னை மன்னிக்கும்படிச் செய்யவேண்டும். இதனை ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் குறித்து விளக்கும் ப்ரமாணம் மூலம் அறியலாம். அந்த ப்ரமாணம் லைங்கபுராணம் உத்தரபாகம் (4-9) - ருக்ஷாக்ஷராணி ச்ருண்வந் வை ததா பாகவதேரிதாந் ப்ரணாமபூர்வகம் க்ஷாந்த்யா யோ வதேத்வைஷ்ணவோ ஹி ஸ: - ஒரு பாகவதன் தன்னைக் குறித்துக் கடுமையாகப் பேசினாலும், அவனை வணங்கியபடி நின்று, அவனது கோபத்திற்குத் தான் இலக்கானதற்காக மன்னிப்பு கேட்பவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் ஆவான் – என்பதாகும். இப்படிச் செய்யவில்லையெனில் – அவன் பகவானின் கடாக்ஷத்தையும் கருணையையும் இழக்கிறான், எம்பெருமானுக்கு மிகவும் நெருக்கமான அடிமையாக இருத்தல் என்பதாகிய தனது வைஷ்ணவ ஸ்வரூபத்தை இழக்கிறான், புலன்களை வசப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை ஆகியவற்றை இழக்கிறான். கீழே உள்ள வரிகள் காண்க: விஷ்ணுதர்மம் (52-20) - யே ப்ராஹ்மணாஸ்தே அஹமஸம்சயம் ந்ருப தேஷ்வர்ச்சிதேஷ்வர்ச்சிதோ அஹம் யதாவத் தேஷ்வேவ துஷ்டேஷ்வஹமேவ துஷ்டோ வைரம் ச தைர்யஸ்ய மமாபி வைரம் – பாகவதர்கள் அனைவரும் எனது வடிவமே ஆவர். அரசனே! அவர்களை பூஜித்தால் என்னைப் பூஜிப்பதே ஆகும். அவர்கள் மகிழ்வு கொண்டால் நானும் மகிழ்கிறேன். அவர்களை வெறுப்பவன் என்னையும் வெறுப்பவன் ஆகிறான். இதிஹாஸ ஸமுச்சயம் - க்நந்தம் சபந்தம் புருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந ப்ரணமேத்யதா அஹம் ஸ பாபக்ருத் ப்ரஹ்மதவாக்நிதக்தோ வக்யச்ச தண்டயச்ச ந சாஸ்மதீய: - ஓர் அந்தணன் தன்னை அடித்தாலும், சாபம் அளித்தாலும், தகாத சொற்களைக் கூறினாலும் அந்த அந்தணனை ஒருவன், நான் (எம்பெருமான்) ப்ருகு முனிவரை வணங்கியது போன்று வணங்கவேண்டும். இவ்விதம் செய்யாதவன் பாவம் செய்தவன் ஆகிறான். அவன் அந்தணனின் கோபம் என்னும் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டவன் ஆகிறான், அவன் கொல்லத்தக்கவன், தண்டனை பெறுவதற்கு ஏற்றவன், என்னைச் சேராதவன் ஆகிறான். மேலே கூறியபடி ”எம்பெருமானுக்கு மிகவும் நெருக்கமான அடிமையாக இருத்தல் என்பதாகிய தனது வைஷ்ணவ ஸ்வரூபத்தை இழத்தல்” போன்றவை ஓர் உண்மையான வைஷ்ணவனுக்கு மரணதண்டனை போன்றே இருப்பதாகும். இப்படியாக தான் அந்த அரங்கனுக்கே அடிமைப்பட்டு இருப்பது குறித்தும், திருவரங்கன் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் கூறும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் (37) - அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – என்று அவனது பார்வை தன் மீது படாமல் போனால் உண்டாகும் துக்கத்தை வெளிப்படுத்துவது காண்க.