Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 19)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

பாகவத அபசாரமே முதன்மையாக விலக்கப்படவேண்டியது

மூலம் – ஜ்ஞாநவானானவன் ப்ராதிகூல்யத்திலே புத்திபூர்வகமாகப் ப்ரவ்ருத்தனானாலும் புந:ப்ரபத்தியாலே ஸர்வேச்வரன் க்ஷமிக்குமென்னுமிடம் ஸ்ரீபதரிகாச்ரமத்திலே க்ரோதாந்தனாய் தர்மாத்மஜனான பகவானோடே எதிரம்பு கோத்த ருத்ரனை ப்ரஹ்மா தெளிவித்து விலக்க, அவனும் ப்ரஸாதயாமாஸ பவோ தேவம் நாராயணம் ப்ரபும் சரணம் ச ஜகாமாத்யம் வரேண்ய வரதம் ஹரிம் என்கிறபடியே ப்ரஸாதமான சரணாகதியைப் பண்ண, ததோ அத வரதோ தேவோ ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய: ப்ரீதிமாநபவத் தத்ர ருத்ரேண ஸஹ ஸங்கத: என்கிறபடியே ஸர்வேச்வரன் ப்ரஸந்நனாய் ருத்ரனை அங்கீகரித்தானென்கையாலே ஸித்தம்.

– தத்வ ஞானம் கொண்ட ஒருவன் தனது அறிவுக்குத் தெரிந்தே எம்பெருமானுக்கு வெறுப்பு உண்டாகும்படியான செயலில் ஈடுபடக்கூடும். அந்தச் செயலுக்காக வருந்தி அவன் ப்ராயச்சித்த ப்ரபத்தி செய்தான் என்றால், அவனை எம்பெருமான் மன்னிக்கிறான். இதனை ஸ்ரீபதரிகாச்ரமத்தில் நடந்த நிகழ்வு மூலம் அறியலாம். தர்மத்தின் புத்ரனாக எம்பெருமான் ஸ்ரீபதரிகாச்ரமத்தில் அவதரித்தபோது, அவனுக்கு எதிராக அம்பைக் குறி பார்த்த ருத்ரனை நான்முகன் தடுத்து, ருத்ரனுக்கு புத்தி புகட்டினான். அதன் பின்னர் தெளிந்த ருத்ரன் மஹாபாரதம் சாந்திபர்வம் (352-64) - ப்ரஸாதயாமாஸ பவோ தேவம் நாராயணம் ப்ரபும் சரணம் ச ஜகாமாத்யம் வரேண்ய வரதம் ஹரிம் – அதன் பின்னர் ப்ரபுவான நாராயணனின் கோபம் தீர்ந்து அவன் மகிழும்படியாக ருத்ரன் சரணம் புகுந்தான், அனைத்திற்கும் காரணமானவனும் வரங்களை அளிப்பவனும் ஆகிய அந்த ஸ்ரீஹரியிடம் சரணம் புகுந்தான் – என்பதற்கு ஏற்ப எம்பெருமானிடம் சரணாகதி அடைந்தான். அப்போது மஹாபாரதம் சாந்திபர்வம் (352-65) - ததோ அத வரதோ தேவோ ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய: ப்ரீதிமாநபவத் தத்ர ருத்ரேண ஸஹ ஸங்கத: - இந்த்ரியங்களை வென்றவனும் வரங்களை அளிப்பவனும் ஆகிய எம்பெருமான் தனது கோபம் நீங்கப்பெற்று ருத்ரனுடன் ப்ரியமாக இருந்தான் - என்பதற்கு ஏற்ப எம்பெருமான் மகிழ்வுடன் ருத்ரனின் சரணாகதியை ஏற்றான்.