Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 18)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
பாகவத அபசாரமே முதன்மையாக விலக்கப்படவேண்டியது
மூலம் – ஆனபின்பு ஜாதி குண வ்ருத்தாதிகளாலே உத்க்ருஷ்டரான பராசர வ்யாஸ சுக சௌநக நாதமுனி ப்ரப்ருதிகளுக்கும் தனக்கும் பாகவதத்வாதிகளும் பரமபுருஷார்த்த லாபமும் துல்யமாயிருந்தாலும் பகவத்பரிக்ரஹமான கோ-கோபஜாதிகளுடையவும், துளஸீ-சம்பகாதிகளுடையவும், கோமய-ம்ருகமதாதிகளுடையவும் வைஷம்யம் போலே பகவத்ஸங்கல்ப விசேஷ ப்ரயுக்தமான தத்ததுபாதி ஸ்வபாவத்தாலே ஸித்தங்களான உத்கர்ஷாபகர்ஷங்களை அஸூயா ப்ராதுர்பாவ ப்ரகணத்தில் ஆப்நாதமானபடியே திரஸ்கரிக்க நினையாதொழியவும், ஜாத்யாத்யுபாதிகளாலே பாகவதர் திறத்தில் அநுஜ்ஞா பரிஹாரௌ தேஹஸம்பந்தாஜ்ஜ்யோதிராதிவத் என்கிற ந்யாயத்தாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களுக்கு யதா சாஸ்த்ரம் நியமமுண்டானாலும் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: என்றும், ஸ்ம்ருத: ஸம்பாஷிதோ வா அபி என்றும், ய: சூத்ரம் பகவத்பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர: என்றும், தஸ்மாத்விஷ்ணு ப்ரஸாதாய வைஷ்ணவாந் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந்ந ஸம்சய: என்றும், பயிலும் சுடரொளி, நெடுமாற்கடிமைகளிலும் விசேஷித்தபடியே ப்ரதிபத்தியில் குறையற்றிருக்கவும், இப் ப்ரதிபத்தி மாத்ரத்தாலும் தஸ்யேதமித தீஹேதுரப்யுபகாரீ என்கிறபடியே பரிபூர்ண விஷயத்தில் சேஷத்வோசித கிஞ்சித்காரமான கைங்கர்யம் ஸித்தமென்றிருக்கவும், இந்நிலைகளில் ஒன்று கோணினபோது ஸர்வம் ஜிஹ்யம் ம்ருத்யுபதமார்ஜவம் ப்ரஹ்மண: பதம் என்கிறபடியே ம்ருத்யுவின் கடைவாயிலே அகப்பட்டாற்போலே நடுங்கி, க்ருதாபராதஸ்ய ஹி தே நாந்யத்பச்யாம்யஹம் க்ஷமம் அந்தரேணாஞ்ஜலிம் பத்த்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் என்றும், யதி கிஞ்சிததீக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயேந வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே ந கச்சித் அபராத்யதி என்றும், யச்ச சோகாபி பூதஸ்ய ச்ருத்வா ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண்யுக்தஸ்தச்ச த்வம் க்ஷந்துமர்ஹஸி என்றும் மஹாராஜருடையவும் இளையபெருமாளுடையவும் அந்யோந்ய ப்ரஸாதந ப்ரகாரம் சொல்லுகிற ச்லோகங்களைப் பராமர்சித்து அப்படியே ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேப கடிதமானாற் போலே பொருந்திப் போரவும் ப்ராப்தம்.
– தங்களுடைய குலம், ஒழுக்கம், நடத்தை, எம்பெருமானிடம் உள்ள பக்தி, வாழ்க்கையின் புருஷார்த்தத்தை உணர்ந்து அடைந்த தன்மை போன்றவற்றில் சிறந்தவர்களான பராசரர், வ்யாஸர், சுகர், சௌனகர், நாதமுனிகள் ஆகியவர்களுக்கும் தனக்கும் பக்தி உள்ளிட்ட அதே தன்மைகளில் ஒற்றுமைகள் உள்ளன என்று சிலர் எண்ணலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் போன்றவர்களைத் தங்களுக்குச் சமமானவர்கள் என்று துச்சமாக எண்ணக்கூடாது. எம்பெருமானுக்கே ஏற்புடைய பொருள்களாக பசுக்கள்-ஆயர்கள், துளஸி-சம்பக மலர்கள், பசுவின் சாணம்-கோரோசனம் இருந்தாலும் முதலில் உள்ள பொருள்கள் (பசு, துளஸி, பசுவின் சாணம்) உயர்ந்தவை என்றே கருதப்படுகின்றன. அப்படியாக உயர்ச்சி-தாழ்ச்சி என்பதான பொறாமையைத் தோற்றுவிக்கவல்ல தன்மைகள் காரணமாக உயர்ந்தவர்களை ஒருபோதும் தாழ்வாக எண்ணும் எண்ணம் உண்டாகக்கூடாது. இதனை அஸூயா ப்ராதுர்பாவ ப்ரகரணத்தில் பொறாமை ஏற்படுவதற்கான விளக்கத்தில் காணலாம் (குறிப்பு: ரஹஸ்யாம்நாயத்திற்கு ஏற்ப அந்தணன் உள்ளிட்ட நான்கு வர்ணங்களுக்கும் தனித்தனி கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன. த்ரேதாயுகத்தின் தொடக்கத்தில் இவர்களுக்குள்ளே பொறாமை உணர்வு தலைதூக்கியது. ஒருவர் மற்றவருக்கு உதவுவதில்லை என முடிவு செய்தனர். இது போன்ற பொறாமை இருக்கக்கூடாது என்று கருத்து). வர்ணத்திற்கு ஏற்ப ஒரு சில செயல்களைச் செய்யவேண்டும் என்பதும், ஒரு சிலவற்றைச் செய்யக்கூடாது என்பதும் பாகவதர்களாக இருந்தாலும் பொருந்தும் என்பதை ப்ரஹ்மஸூத்ரம் (2-3-47) - அநுஜ்ஞா பரிஹாரௌ தேஹஸம்பந்தாஜ்ஜ்யோதிராதிவத் – ஒரு வர்ணத்திற்கு ஒரு செயலை அனுமதிப்பதும், மற்றொரு வர்ணத்திற்கு அதே செயலை மறுப்பதும் அந்தந்த சரீர தொடர்பினால் ஆகும் – என்பதன் மூலம் உணரலாம். இப்படிப்பட்ட விதிகள் உள்ளபோதிலும் கீழே உள்ள கருத்துக்கள் கவனிக்க. கீழே உள்ள பல வரிகளில் கூறப்பட்டது போன்று பாகவதர்கள் விஷயத்தில் நாம் சிறிதளவும் மரியாதை குறைக்கக்கூடாது: கீதை (9-30) - ஸாதுரேவ ஸ மந்தவ்ய: - என்னை மட்டுமே வேறு பலன் எண்ணாமல் வணங்குபவன் தனது வர்ணத்திற்கு மாறான செயல்களைச் செய்தபோதிலும், அவன் மிகவும் மதிக்கத்தக்கவனே. இதிஹாஸ ஸமுச்சயம் (31-55) - ஸ்ம்ருத: ஸம்பாஷிதோ வா அபி – ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் அவன் பகவத் பக்தி உள்ளவன் என்றால் அவனுடன் உரையாடினாலே தூய்மை அடையச் செய்கிறான். இதிஹாஸ ஸமுச்சயம் (25-26) - ய: சூத்ரம் பகவத்பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர: - சூத்ரனாக இருந்தாலும், வேடனாக இருந்தாலும், நாயின் மாமிசத்தை உண்பவனாக இருந்தாலும் அவர்கள் எம்பெருமானின் பக்தர்கள் என்றால், அவர்களை அந்தந்த பிறப்பில் பிறந்த மற்றவர்கள் போன்று எண்ணி இகழும் ஒருவன் நரகம் புகுவான். இதிஹாஸ ஸமுச்சயம் (25-2) - தஸ்மாத்விஷ்ணு ப்ரஸாதாய வைஷ்ணவாந் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந்ந ஸம்சய: - எம்பெருமானின் கருணையையும் கடாக்ஷத்தையும் பெறுவதற்கு அவனது அடியார்களை மகிழ வைக்கவேண்டும். இதனால் எம்பெருமான் மனம் குளிர்ந்து கடாக்ஷிப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. திருவாய்மொழி (3-7-1) - பயிலும் சுடரொளி – எம்பெருமானின் அடிமைகள் தனது அத்தனை பிறவியிலும் தனது எஜமானர்கள் – என்கிறார். திருவாய்மொழி (8-10-1) – நெடுமாற்கடிமை – எம்பெருமானின் அடியார்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணிய உடனேயே கர்மபலன்கள் அழிந்துவிடுகின்றன. மேலும் எம்பெருமானின் அடியார்களுக்கு உரிய மரியாதை செலுத்துவதில் எந்தவிதமான குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வதை நமது கடமை என்றே கொள்ளவேண்டும். இப்படியாக ஓர் எண்ணம் இருந்தாலே போதுமானது, அந்த எண்ணமே அனைத்தும் கொண்டவனான எம்பெருமானுக்குச் செய்யும் மிகப்பெரிய கைங்கர்யமாகும். தஸ்யேதமித தீஹேதுரப்யுபகாரீ – இவன் எம்பெருமானுக்கு உரியவன் என்று எண்ணும் எண்ணமே பல உபகாரங்களைச் செய்யவல்லதாகும். இத்தகைய எண்ணத்திலிருந்து சற்று மாறுபாடு தென்பட்டாலும், மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டோமோ என்ற எண்ணம் உண்டாகி நடுங்கவேண்டும். மஹாபாரதம் சாந்திபர்வம் (79-21) - ஸர்வம் ஜிஹ்யம் ம்ருத்யுபதமார்ஜவம் ப்ரஹ்மண: பதம் – அஹங்காரம் உள்ளிட்ட பலவும் ஸம்ஸாரத்திற்குக் காரணமான அறியாமையை ஏற்படுத்தும்; நேரான நடத்தைகள் மோக்ஷத்திற்குக் காரணமான ஞானத்தை அளிக்கும் – என்றது காண்க. எம்பெருமானின் அடியார்கள் விஷயத்தில் குற்றங்கள் இழைத்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இதனைக் கீழே உள்ள பல வரிகளின் மூலம் உணரலாம்: இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (32-17) - க்ருதாபராதஸ்ய ஹி தே நாந்யத்பச்யாம்யஹம் க்ஷமம் அந்தரேணாஞ்ஜலிம் பத்த்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் – அனுமன் சுக்ரீவனிடம், “நீ குற்றம் செய்துள்ளாய். ஆகவே லக்ஷ்மணனிடம் உனது கைகளைக் குவித்து வணங்கி, மன்னிப்புக் கேட்பதைக் காட்டிலும் வேறு ஒரு ப்ராயச்சித்தம் நான் அறியேன்”, என்றான். இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (36-11) - யதி கிஞ்சிததீக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயேந வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே ந கச்சித் அபராத்யதி – சுக்ரீவன் லக்ஷ்மணனிடம், “நம்பிக்கை அல்லது அன்பு காரணமாக நான் உம்மிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். என்னை மன்னிக்கவேண்டும். இந்த உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்?”, என்றான். இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (36-20) - யச்ச சோகாபி பூதஸ்ய ச்ருத்வா ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண்யுக்தஸ்தச்ச த்வம் க்ஷந்துமர்ஹஸி - லக்ஷ்மணன் சுக்ரீவனிடம், “துன்பத்தில் சிக்கிய இராமனின் சொற்களைக் கேட்டவுடன் எனக்கு உண்டான வேதனை காரணமாக நான் உம்மை கடுஞ்சொற்களால் பேசிவிட்டேன். அவற்றைப் பொறுக்கவேண்டும்”, என்றான். இப்படியாக சுக்ரீவனும் லக்ஷ்மணனும் பேசிக்கொண்டவற்றை நன்கு ஆராயவேண்டும். இவற்றின்படியே, கத்தியால் பிளக்கப்பட்ட ஒரு பொருள் வஜ்ரத்தால் ஒட்டப்படுவது போன்று நாம் அவமதித்த அடியார்களிடம் மன்னிப்புக் கேட்டு, சமாதானம் செய்து கொள்ளவேண்டும்.