Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அவிவேகத்தை நீக்குவதற்கான வழி
மூலம் – அபராதங்கள் எல்லாவற்றிற்கும் அடி அவிவேகம். அதில் ப்ரதாநமான அவிவேகம் அசித் ஸ்வபாவமான ஜடத்வ விகாராதிகளைச் சுமக்கையும் ஈச்வர ஸ்வபாவமான ஸ்வநிஷ்டத்வ ஸ்வாதந்த்ர்ய அநந்யார்த்தத்வாதிகளைச் சுமக்கையும், இவ் அவிவேகத்தை அறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச் சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு. அவிவேக ப்ரபுத்வாதேர்நிதாநஸ்ய நிவர்த்தநாத் அர்த்த காமாபசாராணாமயத்நோந்மூலநம் பவேத் இவையெல்லாவற்றுக்கும் அடி பலப்ரதாநோந்முகமாயிருப்பதொரு பூர்வாகமாகையாலே அதினுடைய நிவ்ருத்திக்குமாக அடியிலே ப்ரபத்தி பண்ணுதல், இதுக்கென்று பின்பு ஒரு ப்ரபத்தி பண்ணுதல் செய்தார்க்கு இவையெல்லாம் பரிஹ்ருதங்களாம்.
– அனைத்துவிதமான அபராதங்கள் செய்வதற்குக் காரணம் அவிவேகமே ஆகும். இதில் முக்கியமான அவிவேகம் - அசித்தாகவும், அறிவற்றும், எப்போதும் மாற்றம் அடைந்தபடியே இருக்கும் இந்த சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுவது; மேலும் ஈச்வரன் எவ்விதம் சுதந்திரமாகவும், யாருக்கும் வசப்படாமலும் உள்ளானோ அதுபோன்று இந்த ஆத்மாவும் சுதந்திரமாகவும், யாருக்கும் வசப்படாமலும் உள்ளது என்று எண்ணுவது ஆகும். இத்தகைய அவிவேகத்தை அறுக்கும் கூரிய வாளாக உள்ளது எதுவென்றால் – ஆத்மாவைப் பற்றிச் சுருக்கம் இல்லாமலும், தேவைக்கு அதிகமாக இல்லாமலும் உள்ள தெளிந்த ஞானமே ஆகும். அவிவேக ப்ரபுத்வாதேர்நிதாநஸ்ய நிவர்த்தநாத் அர்த்த காமாபசாராணாமயத்நோந்மூலநம் பவேத் – இந்த சரீரத்தை ஆத்மா என்று எண்ணுதல், ஆத்மாவானது சுதந்திரமானது என்று எண்ணுதல் போன்ற அபசாரத்திற்கான காரணங்கள் நீங்கி விடுவதால் பொருள் மற்றும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்டாகும் அபசாரங்கள் எந்தவிதமான முயற்சியும் இன்றி வேறுடன் நீங்கும் நிலை உண்டாகும் - என்பது அறிக. இப்படியான அபசாரங்கள் உண்டாதல் போன்றவற்றுக்கான அடிப்படை என்னவென்றால், கடந்த பிறவிகளில் செய்த பாவங்கள் காரணமாக ஏற்பட்ட வினைப்பலன்கள் இப்போது பலன் அளிக்கத்தொடங்கியதே ஆகும். இவை அனைத்தும் முன்னர் ப்ராயச்சித்தம் போன்று செய்யப்பட்ட ப்ரபத்தியினால் கழிந்துவிடும். அல்லது இவற்றுக்காக பின்னர் செய்யப்படும் ப்ரபத்தியும் இவற்றுக்கான பரிஹாரம் செய்ததாகவே ஆகும்.