Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 15)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

எம்பெருமானுக்கு நெருக்கமான ஒருவரும் தெரிந்தே செய்யும் அபராதங்களை விலக்கவேண்டிய காரணம்

மூலம் – தாஸ: ஸகா வாஹநமாஸநம் த்வஜ: இத்யாதிகளிற்படியே அத்யந்த பகவதந்தரங்கர்க்கும் ஸாத்த்விகாபராதலேசமும் ப்ரத்யவாயகரமென்னுமிடம் சாண்டிலீ வ்ருத்தாந்தாதிகளிலே ப்ரஸித்தம். ஸர்வேச்வரனைப் போலே ஸூரிகளும் அவதரித்தால் கர்மவச்யத்வாபிநயம் பண்ணி லோகஹித ப்ரவர்தநார்த்தமாக அபசார பரிஹாராதிகளை நடத்திப் போவர்கள். ஆகையால் பகவத்ப்ரீதியிழவாமைக்காகவும், அதுக்காகப் புந:ப்ரபத்தியாதல் லகுதண்டமாதல் ப்ரஸங்கியாமைக்காகவும் மேல்வரும் அபராதங்கள் வேரறுக்கும் விரகு பார்க்கவேணும்.

– ஸ்தோத்ரரத்னம் (41) - தாஸ: ஸகா வாஹநமாஸநம் த்வஜ: - அடிமையாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், இருக்கையாகவும், கொடியாகவும் – என்பது போன்று எம்பெருமானுக்கு அனைத்தாகவும் கருடன் இருந்தபோதிலும், அவன் சாண்டிலீ என்னும் பாகவதோத்தமை குறித்து செய்த அபராதம் காரணமாக துன்பம் அனுபவித்த நிகழ்வு மிகவும் ப்ரஸித்தம் ஆகும். ஆகவே எம்பெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஸாத்விகமான எண்ணம் மேலோங்கி இருந்தாலும், தெரிந்தே செய்யும் அபராதம் மிகுந்த பாவத்தையே உண்டாக்கும் என்றாகிறது (சாண்டிலீ பற்றிய குறிப்பு: மிகுந்த பாகவதோத்தமையான இவள் கடலின் நடுவே வசித்து வந்தாள். இவளது ஆச்ரமத்தின் வழியே சென்ற கருடனின் மாமாவான காவலர் என்பவரும், கருடனும் இவளது ஆச்ரமத்தில் சற்று இளைப்பாறினர். இவளது உபசரிப்பைக் கண்ட கருடன் தனது மனதில், “இவள் இங்கு இருக்கவேண்டியவள் அல்லள். இவளை நாம் விஷ்ணுலோகம் போன்ற இடத்திற்குக் கொண்டுவிடுவோம்”, என்று எண்ணினான். மறுநாள் தனது சிறகுகள் அனைத்தும் உதிர்ந்து நிற்பதைக் கருடன் கண்டான். தான் சாண்டிலீ பற்றி எண்ணியதன் விளைவே இதன் காரணம் என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். பின்னர் தனது சிறகுகள் முளைக்கப்பெற்றான். ஆகவே எண்ணம் உயர்வானதாக இருந்தபோதிலும், அது அபசாரத்தை உண்டாக்குமானால், பாவமே விளையும்). ஆகவே நித்யஸூரிகளாக உள்ளபோதிலும் அவர்கள் இந்தப் பூமியில் அவதரித்தால், கர்மவசப்பட்ட மற்றவர்கள் போன்றே நடந்துகொண்டு, உலகின் நன்மைக்காகத் தங்களது அபசாரத்திற்கு ஏற்ற ப்ராயச்சித்தம் செய்வர். ஆகவே எம்பெருமானின் கருணையை இழக்காமல் இருப்பதற்காகவும், அபராதம் காரணமாக இழக்க நேரிட்டால் அதற்காக மறுபடியும் ப்ரபத்தி செய்தல் மற்றும் சிறு தண்டனைகளைப் பெறுதல் போன்றவற்றை விலக்குவதற்காகவும் இனிவரும் காலங்களில் அபராதம் செய்யாமல் உள்ளதற்கு ஏற்ற வழியை ஆராயவேண்டும்.