Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – ஸ்வேச்சாமாத்ரத்தாலே புத்திபூர்வோத்தராகத்தையும் அடியிலே ப்ரபதநம் பண்ணினாலோ என்னில், இது உபாஸநத்தையும் புத்திபூர்வோத்தராகத்துக்கும் பரிஹாரமாகப் பண்ணினாலோ, அங்கப்ரபத்தியும் அதுக்குச் சேரப் பண்ணினாலோவென்கிற ப்ரதிபந்தியாலே நிரஸ்தம். இருவருக்கும் இப்படியாகிடுகவென்கை பாஷ்யாதி விருத்தமாகையாலே அபஸித்தாந்தம்; உஷஸ்தி ப்ரவ்ருத்திகளான ப்ரஹ்மநிஷ்டர்களுடைய அநுஷ்டாநத்துக்கும் விருத்தம். ஆகையாலே விசேஷ வசநமில்லாமையாலே க்ருதே பாபே அநுதாபோ வை இத்யாதிகள் கணக்கிலே “நிமித்தம் உதித்தாலல்லது நைமித்திகம் ப்ராப்தமன்று” என்கிற ந்யாயம் புத்திபூர்வோத்தராகத்தில் பதிதமாகாது. ஆனபின்பு ஆகாமி புத்திபூர்வபாபத்துக்கு அஞ்சினானாகில் அதுக்குக் காரணமான ப்ராரப்த பாபத்துக்குப் ப்ரபதநரூப ப்ராயச்சித்தம் பண்ணப் ப்ராப்தம், ராத்ய பக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ என்றார்களிறே. ஜந்மாந்தர க்ருதே பாபம் வ்யாதிரூபேண பாததே தத் சாந்தி: ஔஷதை: தாநை: ஜப ஹோமர்சநாதிபி: இத்யாதிகளில் தானஜபாதிகளிலும் அகப்படப் ப்ராரப்த பாபநாசம் சொல்லப்பட்டதிறே. ஆகையால் பாபாரம்பக பாபத்துக்கு அஞ்சிப் ப்ரபத்தி பண்ணினானாகில் அப்போது புத்திபூர்வக பாபமும் உதியாது.
– இங்கு ஒரு கேள்வி எழலாம். முதலில் செய்யப்பட்ட ப்ரபத்தி என்பது ஒருவனின் விருப்பம் காரணமாக, எதிர்வரும் காலங்களில் தெரிந்தே செய்யப்போகும் பாவங்களுக்காகச் செய்யப்பட்டது என்றால் என்ன நிகழும்? இத்தகைய கேள்வியானது கீழே உள்ள இரண்டு எதிர் வினாக்களால் தள்ளப்படுகிறது: எதிர்வரும் காலங்களில் தெரிந்தே செய்யப்போகும் பாவங்களுக்காக ஒருவன் பக்தியோ அல்லது உபாஸனமோ செய்யலாம் அல்லவோ? எதிர்வரும் காலங்களில் தெரிந்தே செய்யப்போகும் பாவங்களுக்காக ப்ரபத்தியை ஓர் அங்கமாகக் கைக்கொள்ளலாம் அல்லவோ? மேலே கேட்கப்பட்ட இரண்டு வினாக்களுக்கும், “பக்தி, உபாஸனம் அல்லது ப்ரபத்தியை ஓர் அங்கமாகக் கொள்ளுதல்” ஆகியவை மூலம் எதிர்வரும் காலங்களில் தெரிந்தே செய்யப்போகும் பாவங்களும் நீங்கிவிடும் என்று கொண்டால், இந்தக் கருத்து ஸ்ரீபாஷ்யத்திற்கும் மற்றும் உள்ள பல சாஸ்த்ரங்களுக்கும் விரோதமாகிவிடும். மேலும் இந்தக் கருத்து உஷஸ்தி முதலானவர்களின் அனுஷ்டானங்களுக்கும் விரோதமே ஆகும் (உஷஸ்தி முனிவரின் அனுஷ்டானம்: ஒரு காலத்தில் உணவிற்கு மிகவும் தட்டுப்பாடு உண்டானபோது, உஷஸ்தி முனிவர் யானைப்பாகர்கள் உள்ள கிராமத்திற்கு வந்தார். அப்போது அவர் பசி காரணமாக இறக்கும் தறுவாயில் இருந்தபோது, அங்கிருந்த யானைபாகன் ஒருவனிடம் இருந்த உணவுப்பண்டத்தை உண்டு தனது பசியைப் போக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவன் தண்ணீரை அளித்தான். உடனே அந்த முனிவர், “எனக்கு இந்த உணவுப்பண்டம் உயிர் தரிக்கத் தேவை. ஆனால் நீர் அருந்தாமல் என்னால் இருக்க இயலும். ஆகவே இந்த நீரைப் பருகுவது விருப்பத்தின் அடிப்படையில் அன்றி, அவசியமானது என்னும் அடிப்படையில் அல்ல. ஆகவே நீர் எனக்கு வேண்டாம்”, என்றார். ஆக, உபாஸனம் என்பது அதன் பின்னர் அறிந்தே செய்கின்ற பாவங்களை நீக்கும் என்றால் இந்த முனிவர் அச்சம் கொண்டிருக்கமாட்டார். எனவே மோக்ஷ உபாயம் மூலம் அறிந்தே செய்கின்ற பாவங்களின் பலன் கழியாது என்று அறியவேண்டும்). ஆகவே இங்கு விசேஷமாக உரைக்க எந்த வாக்கியமும் இல்லாத காரணத்தினால் விஷ்ணுபுராணம் (2-6-40) - க்ருதே பாபே அநுதாபோ வை – பாவங்களைச் செய்த பின்னர் ஒருவனுக்கு “தவறு செய்தோமே” என்று உண்டாகும் எண்ணம் காரணமாக அவன் எம்பெருமானை த்யானிப்பதே சரியான ப்ராயச்சித்தம் ஆகும் – என்பது போன்ற வாக்கியங்களை மறுப்பதற்கு இல்லை. ஆகவே - ஒரு சரியான சந்தர்ப்பம் உண்டானால் தவிர, அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து வெளியேறுவது குறித்து சிந்திக்க இயலாது என்னும் விதியானது ப்ரபத்திக்குப் பின்னர் செய்யப்படும் பாவங்களுக்குப் பொருந்தும். ப்ராயச்சித்தம் என்பது செய்த தவறுக்கான செயல் அல்லாமல் இனி செய்யப்போகும் தவறுக்கான செயல் அல்லவே! ஒருவன் தான் தெரிந்தே செய்யப்போகும் தவறுகளுக்காக அச்சம் கொண்டான் என்றால், அவன் இதுவரை செய்த பாவங்களை மனதில் நிலைநிறுத்தி ப்ரபத்தி செய்யவேண்டும். இதன் காரணம் அந்தப் பாவங்களுக்கான பலன்கள் இவனுக்குக் கிட்டத் தொடங்கி இருக்கும். இந்தப் பூர்வ பாவ பலன்களே இவன் மேலும் தவறுகள் செய்வதற்குக் காரணமாகின்றன. ஆகவே அவற்றைப் போக்க இவன் ப்ரபத்தி செய்தல் வேண்டும். ராத்ய பக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ – பக்தி என்னும் உபாயம் பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பாவ பலன்களைத் தவிர மற்ற பாவங்கள் அனைத்தையும் நீக்கும் – என்றது காண்க. ஜந்மாந்தர க்ருதே பாபம் வ்யாதிரூபேண பாததே தத் சாந்தி: ஔஷதை: தாநை: ஜப ஹோமர்சநாதிபி: - முன் ஜன்மங்களில் செய்த பாவங்களே இந்தப் பிறவியில் பல வ்யாதிகளாக வந்து துன்பம் செய்கின்றன; இவற்றை மருந்துகளாலும், தானங்களாலும், ஜபங்களாலும், ஹோமங்களாலும், எம்பெருமானை வணங்குவதாலும் நீக்கவேண்டும் – என்று கூறியது காண்க. இது போன்ற வரிகள் மூலம், ஜபம் மற்றும் ஹோமங்களால் பலன் தரத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்களும் நீங்கும் என்று கூறப்பட்டன அல்லவா? ஆகவே, முன்னர் செய்த வினைகளின் பயனாக எதிர்வரும் காலங்களில் தெரிந்தே செய்யப்போகும் பாவங்களுக்காக ஒருவன் அச்சம் கொண்டு ப்ரபத்தி செய்தான் என்றால், அவை நீங்குவதோடு மட்டும் அல்லாமல், அது போன்ற பாவங்களும் உண்டாகாது.