Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – புந: சரணாகதியை விதிக்கிற வசநத்தை அடியிலே புத்தி பூர்வோத்தராகத்துக்கும் பரிஹாரமாக ப்ரபத்தி பண்ணாதார் விஷயத்திலே நியமித்தாலோ என்னவொண்ணாது; புத்திபூர்வோத்தராகத்தையும் பற்ற ப்ரபத்தி பண்ணலாமென்று விசேஷித்துக் கண்டோக்தி பண்ணுவதொரு வசநம் உண்டாகிலிறே இப்படி நியமிக்கலாவது? இப் ப்ரபத்தி பூர்வோத்தராகத்துக்கும் பரிஹாரமென்று அறிந்தால் இச்செட்டை விடுவாரையும் கிடையாமையாலே புந:ப்ரபத்திவசநம் நிர்விஷயமாம். ஸாமாந்யவசநத்தளவைப்பற்றி விசேஷவசநத்தை பாதிக்கவோண்ணாது. இப்படி விசேஷவசநத்தை பாதிக்கில் உபாஸநிஷ்டனுக்கும் பூர்வோத்தராகத்துக்கும் தோஷமில்லையாம்.
– முதல் ப்ரபத்தி செய்யும்போதே, தான் பின் ஒரு காலத்தில் அறிந்தே செய்யும் பாவங்களுக்கான ப்ரபத்தியையும் சேர்த்துச் செய்யாதவர்களுக்கு மட்டுமே கடந்த பத்தியில் கூறியபடி “தெரிந்தே செய்த பாவங்களுக்கு ப்ராயச்சித்தம் மீண்டும் சரணாகதி செய்தல்” என்று விதிக்க இயலாது. ஏன்? பின் ஒரு காலத்தில் அறிந்தே செய்ய உள்ள பாவங்களுக்கான ப்ரபத்தியையும் முதல் ப்ரபத்தி செய்யும்போதே சேர்த்துச் செய்யவேண்டும் என்று நேரடியாகக் கூறும் ப்ரமாணங்கள் இருந்தால் அல்லவோ இப்படிக் கூற இயலும். இப்படியாகப் பின்னர் செய்யப் போகும் பாவங்களுக்கான ப்ராயச்சித்தமாக முதலிலேயே ப்ரபத்தி செய்யலாம் என்று விதியிருந்தால், இப்படிப்பட்ட எளிமையான வாய்ப்பை யாரேனும் நழுவ விடுவார்களோ? ஆகையால் இது போன்று கூற இயலாது. ஒரு குறிப்பிட்ட விதி உள்ளபோது, அதனை ஒரு பொது விதி மூலம் தள்ள இயலாது. இப்படி ஒரு பொது விதியானது, குறிப்பிட்ட ஒரு விதியைத் தள்ள இயலும் என்று கூறினால், பக்தி நிஷ்டன் மற்றும் உபாஸனை நிஷ்டன் ஆகிய இருவருக்கும் அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குத் தோஷம் இல்லை என்றாகிவிடும்.