Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – இப்படியல்லாதபோது ப்ரபந்நரான பூர்வர்களுடைய அநுஷ்டாந பரம்பரைக்கும், ப்ரபந்நரைப் பற்றவே ப்ராயச்சித்தம் விதிக்கிற சாஸ்த்ரத்துக்கும், மோக்ஷம் பெறுகைக்குக் காலம் குறித்து ப்ரபத்தி பண்ணாதே அநுவ்ருத்த புத்திபூர்வாபராதருமாய் விலம்பாக்ஷமருமாயிருப்பார்க்கு விலம்பம் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கும் சேராது.
– இப்படியாக அவர்கள் கூறும் கருத்து என்பது, சரணாகதி அளிக்கின்ற ஸர்வேச்வரனின் உயர்ந்த குணங்களை உணர்த்தவும், சரணாகதியின் மேன்மையை உணர்த்தவுமே ஆகும் என்று கொள்ளவில்லை என்றால் – இதுவரையில் ப்ரபந்நர்கள் அநுஷ்டித்து வந்த நெறிகளுக்கும்; ப்ரபந்நர்களின் தவறுகளுக்கான பிராயச்சித்தம் விதிக்கின்ற சாஸ்த்ரங்களுக்கும்; ப்ரபத்தி செய்யும்போது எப்போது மோக்ஷம் பெறவேண்டும் என்னும் கால விண்ணப்பம் செய்யாமல் ப்ரபத்தி செய்தவர்களுக்கும், தெரிந்தே பாவங்களைச் செய்துவிட்டு மோக்ஷத்திற்கான காலதாமதம் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உள்ளவர்களுக்கும் மோக்ஷம் காலதாமதம் ஆன பின்னரே கிட்டுகிறது என்று கூறும் ப்ரமாணங்களுக்கும் பயன் இல்லாமல் போய்விடும்.