Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – ஆகையால் ப்ரபந்நனுக்கு புத்திபூர்வோத்தராகம் லேபியாதென்று விசேஷித்துச் சொல்லுவதொரு ப்ரமாணமின்றிக்கேயிருக்க, இவனுக்குப் பின்பு புத்திபூர்வோத்தராகம் பிறந்தாலும் க்ஷமை கொள்ளவேண்டாமென்றும், க்ஷமை கொள்ளாவிடிலும் சிக்ஷாரூப தண்டவிசேஷமில்லையென்றும், விலம்பாக்ஷமருக்கும் பரமபலத்துக்கு விலம்பம் வாராதென்றும், ப்ராரப்த ஸுக்ருதவிசேஷாதிகளாலே வரும் இங்குத்தைக்குக் கைங்கர்யத்துக்கு விச்சேத ஸங்கோசங்கள் வாராவென்றும் சொல்லுகிற பக்ஷங்கள் சரண்யனுடைய குணங்களையும் சரணாகதியினுடைய ப்ரபாவத்தையும் சொல்லுகைக்காகவத்தனை.
– ஆகவே ப்ரபந்நன் ஒருவன் அறிந்தே செய்கின்ற தவறுகள் மூலம் உண்டாகும் பாவங்கள் அவனுக்கு ஒட்டுவதில்லை என்று சிலரால் கூறப்பட்டாலும், இந்தக் கருத்துக்கு ஏற்ற ப்ரமாணங்கள் ஏதும் இல்லை. மேலும் சிலரால் கூறப்படுவது என்னவென்றால் – தனது புத்திக்குத் தெரிந்தே ப்ரபந்நன் செய்யும் பாவங்களுக்கு அவன் பிராயச்சித்தம் செய்ய வேண்டாம் என்றும், இப்படியாக அவன் பிராயச்சித்தம் செய்யவில்லை என்றாலும் அவனுக்கு நல்வழி புகட்ட சிறு தண்டனை கூட அளிக்கப்படுவதில்லை என்றும் – என்பதாகும். மேலும் இப்படியாக ப்ரபந்நன் ஒருவன் தெரிந்தே செய்யும் பாவங்கள் காரணமாக, அவன் தனக்கு மோக்ஷம் உண்டாகும் காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன் என்றாலும், அந்தக் காலதாமதம் மூலமாக தண்டனை அளிக்கும்விதமாகக் கூட அவனுக்கு மோக்ஷம் காலதாமதம் ஆவதில்லை. இப்படிப்பட்டவன் தனது பூர்வகர்மங்கள் காரணமாகப் பெற்ற கைங்கர்யங்களில் குறைபாடுகளும், தடங்கல்களும் உண்டாவதில்லை. இப்படியாகப் பலவிதமாகக் கூறப்படுவது ஏன்? இவை அனைத்தும் சரணாகதி அளிக்கின்ற ஸர்வேச்வரனின் உயர்ந்த குணங்களை உணர்த்தவும், சரணாகதியின் மேன்மையை உணர்த்தவுமே ஆகும்.