Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – பவேயம் சரணம் ஹி வ: என்ற பின்பும் உண்டான ராக்ஷஸிகளுடைய புத்திபூர்வாபசாரங்கள் மர்ஷயாமீஹ துர்பலா பாபாநாம் வா சாபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம என்கிறபடியே பிராட்டிக்கு க்ஷமாவிஷயமாயிற்றில்லையோ வென்னில், அவ்விடத்திலும் அவர்களுக்குத் திருவடி நலியப் புகுகிறாரென்கிற பயம் விளைந்து நலிவுக்கு விலக்கு உண்டானபடியாலே வாளாலே ஓங்கி விடுமாப் போலே தண்டலேசமும் க்ஷமையும் ஸித்தம்.
– ஒரு கேள்வி எழலாம். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (58-90) - பவேயம் சரணம் ஹி வ: - உங்களை நான் காப்பேன் – என்று அரக்கிகளிடம் சீதை கூறிய பின்னரும் சீதைக்கு அந்த அரக்கிகள் பல துன்பங்களை இழைத்தனர்; இவர்கள் இவ்விதம் செய்தபோதிலும் சீதை பின்வருமாறு கூறியதன் மூலம், தெரிந்தே செய்யும் தவறுகளையும் சீதை மன்னித்தாள் என்றாகிறதே என்னும் ஐயம் தோன்றலாம்: இராமாயணம் யுத்தகாண்டம் (116-40) - மர்ஷயாமீஹ துர்பலா – அவர்களது குற்றங்களை நான் பொறுக்கிறேன். அவர்களது துன்பங்களை என்னால் பொறுக்க இயலாது. இராமாயணம் யுத்தகாண்டம் (116-44) - பாபாநாம் வா சாபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம – அனுமனே! நீ எண்ணுவது போன்று இவர்கள் குற்றம் புரிந்தவர்களாக இருந்தாலும், உன்னுடைய மன்னிக்கும் இயல்பு காரணமாக இவர்களை மன்னிக்கவேண்டும். யார்தான் குற்றம் செய்வதில்லை? இப்போது மேலே எழுந்த ஐயத்திற்கான பதிலைக் காண்போம். இங்கு சீதை மன்னித்தாலும், அந்த அரக்கிகளுக்குத் தங்களை அனுமன் அழித்துவிடுவான் என்னும் பயம் உண்டானது அல்லவோ? அந்தப் பயமே தண்டனை போன்றது என்று கருத்து. ஆக ஒரு மனிதனை வெட்ட வாளை ஓங்கி பின்னர் நிறுத்துவது போன்றி, சற்றே பயம் என்னும் தண்டனையும் அதன் பின்னர் மன்னிப்பும் அளிக்கப்படுகிறது.