Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை

மூலம் – ப்ராரப்தகர்மத்தில் பாபாம்சம் போலே புத்திபூர்வோத்தராகம் ப்ராயச்சித்தம் பண்ணாதபோது ஸபலமானாலும் பண்ணின ப்ரபத்தி மோக்ஷங்கொடா தொழியுமோவென்று சங்கிக்கவொண்ணாது; பெருங்காயம் வைத்த மரங்களுக்கு ஸ்தலாதிவிசேஷங்களாலே வாட்டத்துக்குக் காலதாரதம்யமுள்ள மாத்ரம்; இங்கும் இவர்கள் ஸம்ஸாரத்தினுடைய நிச்சேஷநிவ்ருத்தி பிறக்கைக்கு விலம்பாவிலம்ப வைஷம்யேமே உள்ளது. இத்தேஹாநந்தரம் மோக்ஷம் பெறவேணுமென்று அபேக்ஷித்தாலும் அநியதாயுஸ்ஸுக்களாய் விலம்பாக்ஷமராயிருப்பார்க்கு ஆயுர்வ்ருத்தியாலே விலம்பம் வரும். நியதாயுஸ்ஸுக்களுக்கு உள்ள ஆயுஸ்ஸுக்குள்ளே பலித்துவிடும்.

– ஒரு சிலர் ப்ரபத்தி செய்த பின்னர் தங்களது புத்தியில் உணர்ந்தே சில தவறுகளைச் செய்யக்கூடும். இதற்கான பிராயச்சித்தமும் செய்யாமல் இருக்கக்கூடும். இதன் காரணமாக, பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மவினைகளை அனுபவிப்பது போன்று, இந்தத் தவறுகளுக்கான பலன்களை அனுபவிக்கவேண்டும் என்றோ, தாங்கள் செய்த ப்ரபத்தி மோக்ஷம் அளிக்காமல் போய்விடும் என்றோ சந்தேகம் கொள்ளவேண்டாம். இலைகள் உதிர்வதற்காக வைக்கப்பட்ட பெருங்காயம் காரணமாக இலைகள் உதிர்ந்தாலும், அந்த மரங்கள் உள்ள இடங்கள் மற்றும் வேறு சில காரணங்களாலும் இலைகள் உதிரக்கூடும்; இது போன்று ப்ரபத்திக்குப் பின்னர் செய்யும் தவறுகளின் காரணமாக ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கான காலதாமதம் ஏற்படலாமே அன்று, மோக்ஷம் கிட்டாமல் போகாது. இவர்கள் தங்களது வாழ்வின் இறுதியில் மோக்ஷத்தை விரும்பியும், அதற்கான காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமலும் இருக்கக்கூடும். இவர்களது ஆயுட்காலம் இத்தனை ஆண்டுகள் என்று முன்னரே தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், இவர்களது ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு மோக்ஷம் தாமதம் ஆகும். மாறாக இவர்களது ஆயுட்காலம் இத்தனை ஆண்டுகள் மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டிருந்தால், அதற்குள்ளாகவே மோக்ஷம் கைகூடும்.