Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – ப்ராப்த கர்மவிசேஷ வசத்தாலே கடினப்ரக்ருதியாய் க்ஷமை கொள்ளுகையும் கை தப்பினபோது ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாசஹஸ்தாம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம் கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத சங்கசக்ரபாணே பவ சரணமிதீரயந்தி யே வை த்யஜ பட தூரதரேண தாநபாபாந் தேவ சார்ங்கதரம் விஷ்ணும் ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌகஸ: என்று வைஷ்ணவவாமநாநி புராணங்களில் பாசுரங்களுக்கு மூலமான ச்ருதியிற் சொல்லுகிறபடியே யம விஷய கமநமின்றிக்கே “வேலிட்டுப் பாயவேண்டுமது முள்ளிட்டுப் பாய்ந்து கழியுமென்கிற” கணக்கிலே காணன் கஞ்சன் என்று முதலாக ஓதுகிற இங்குத்தை உபக்லேச முகத்தாலே சிகையறுக்கும் விரகுகளை முன்னிட்டு ஸர்வேச்வரன் க்ஷமா ப்ரேம தயா வாத்ஸல்யங்களாலே தணிந்த ப்ரதாபத்தையுடையனாய், மிகவும் தண்டிக்க வேண்டும் அபராதத்துக்கு ஸேவ்யனான ஸார்வபௌமன், அடையாளக்காரர் அந்த:புரபரிஜநம் கூனர் குறளர் குமாரர்கள் விஷயத்தில் அபராதங்களுக்கு ஈடாகவும், அந்தரங்கத்வாதி தாரதம்யத்துக்கு ஈடாகவும், ஸம்பந்த ஆந்ருசம்ஸ்யாதிகளாலே ப்ரீதி நடக்கச் செய்தே அவர்கள் தப்பினதுக்கு க்ஷமை கொள்ளுகைக்காகவும், மேலைக்கும் சிக்ஷையாகைக்காகவும் முகங்கொடாதேயிருத்தல், சம்மட்டியிட்டடித்தல், தள்ளுவித்தல், வாசலிலே தகைவித்தல், சிறிதுநாள் ஸேவையை விலக்கிவிடுதல் செய்யுமாப்போலே காகந்யாயத்தாலே ஒரு கண்ணழிவாலே இவ்வாச்ரிதரை ரக்ஷித்துவிடும்.
– பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்களால் ஒரு ப்ரபந்நன் கடினமான மனம் கொண்டவனாக இருக்கக்கூடும். அப்போது அவன் ப்ராயச்சித்தத்தைக் கைக்கொண்டாலும் மன்னிப்பு பெறாமல் இருக்கக்கூடும். ஆயினும் அவன் யமலோகத்தை அடைவதில்லை. இதனைக் கீழே உள்ள வரிகளில் காண்க: விஷ்ணுபுராணம் (3-7-14) - ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாசஹஸ்தாம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம் – தன்னுடைய கைகளில் பாசக்கயிற்றுடன் உள்ள தனது கிங்கரனைப் பார்த்து யமன் அவனது காதில் மிகவும் ரகசியமாக, “நான் சாதாரணவர்களுக்கு மட்டுமே ப்ரபு ஆவேன். எனது அதிகாரம் என்பது நாராயணனின் பக்தர்களிடம் செல்வதில்லை. ஆகவே மது என்னும் அசுரனை அழித்த ஸர்வேச்வரனின் திருவடிகளில் ப்ரபத்தி செய்தவர்களிடம் நீ செல்லவேண்டாம்”, என்பான். விஷ்ணுபுராணம் (3-7-33) - கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத சங்கசக்ரபாணே பவ சரணமிதீரயந்தி யே வை த்யஜ பட தூரதரேண தாநபாபாந் – யமன் தனது கிங்கரனிடம், “தாமரை போன்ற கண்கள் கொண்டவனே! வாஸுதேவா! விஷ்ணுவே! அடியார்களை நழுவவிடாதவனே! சங்கு மற்றும் சக்கரங்களைத் திருக்கரங்களில் கொண்டவனே! நீயே எனக்கு அடைக்கலம் – இவ்விதமாகக் கூறுபவர்கள் எந்தவிதமான பாவங்களும் அற்றவர்கள் ஆவர். அவர்களை நீ அணுகாமல், அவர்களை விட்டு விலகிச் செல்வாயாக”, என்றான். வாமநபுராணம் (94-43) - தேவ சார்ங்கதரம் விஷ்ணும் ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌகஸ: - சார்ங்கம் என்னும் வில்லை உடைய ஸ்ரீமந்நாராயணனே தாங்கள் பெற வேண்டிய உயர்ந்த புருஷார்த்தம் என்று கருதி, அவனது திருவடிகளில் ப்ரபத்தி செய்தவர்கள், யமலோகம் செல்வதில்லை; அவர்களுக்கு நரக இருப்பும் இல்லை. மேலே கூறப்பட்ட விஷ்ணுபுராணம் மற்றும் வாமனபுராணம் ஆகியவற்றின்படியும், இவை எந்த வேதங்களின் அடிப்படையில் உள்ளனவோ அந்த வேதங்களின்படியும், ப்ரபந்நர்கள் தங்களின் பாவங்களுக்காக யமலோகம் சென்று தண்டனை பெறுவதில்லை. மாறாக இந்த உலகத்திலேயே, அவர்கள் வாழும்போதே சிறு தண்டனையைப் பெறுகின்றனர். அவர்கள் - வேலிட்டுப் பாயவேண்டுமது முள்ளிட்டுப் பாய்ந்து கழியும் – ஒருவனை வேல் கொண்டு தண்டிப்பதைக் காட்டிலும், அவனுக்கு ப்ரியமானவர்களைச் சிறு முள் கொண்டு துன்புறுத்துவது அதிக தண்டனை அளிக்கும் – என்ற ந்யாயத்தின்படி தண்டனை பெறுவர். இப்படியாக அவர்களுக்கு ப்ரியமானவர்கள் குருடர்களாகவோ அல்லது முடமாகவோ ஆவர். ஆனால் பொறுமை, கருணை, ப்ரேமை, மாறாத அன்பு ஆகியவை நிறைந்த ஸர்வேச்வரன் இவர்கள் பெறும் தண்டனைகளைக் கண்டு, தனது கோபத்திற்காக வருந்தி, அந்த ப்ரபந்நர்களை, அவர்களை அனுபவித்த சிறு தண்டனைகளுக்குப் பின்னர் காப்பாற்றுகிறான். அரசன் ஒருவன் தனது குடை முதலானவற்றை ஏந்திவருபவர்கள், தனது அந்தப்புரங்களில் பணிபுரிபவர்கள், கூனமாக உள்ளவர்கள், குள்ளமாக உள்ளவர்கள், தனது புத்திரர்கள் என்ற வேறுபாடு காணாமல், அவர்கள் ஏதும் தவறு செய்தால் அந்தத் தவறுகளுக்கு ஏற்றபடி தண்டிக்கிறான். அவர்களுக்கும் தனக்கும் நெருக்கமான உறவு இருந்தாலும், அவர்கள் மீது ப்ரேமை இருந்தாலும், தனக்குக் கருணை இருந்தாலும் அவர்களை தண்டிக்கிறான். இது ஏனென்றால் தங்களின் செயலுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்பதற்காகவும், அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்காகவும் ஆகும். இந்தத் தண்டனைகள் என்னவென்றால் – தனது முகத்தையே அவர்கள் காணக்கூடாது என்று கூறுதல், கசையடி அளித்தல், தனது அரண்மனை விட்டு விலக்கி வைத்தல், வாசலை விட்டு ஒதுக்குதல், தனக்கு அவர்களி செய்யும் பணிகளில் இருந்து சிலகாலம் தள்ளிவைத்தல் போன்றவை ஆகும். உயிரைப் பறிக்கவேண்டிய அபராதம் செய்தபோதும், தன்னைச் சரணம் புகுந்த காரணத்தினால், காகாசுரனின் ஒரு கண்ணை மட்டும் பறித்த செயல் போன்று ஸர்வேச்வரன் தண்டனையை சுலபமாக்குகிறான்.