Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

ப்ரபந்நன் தனது அறிவுக்குத் தெரிந்து செய்யும் பாவங்களுக்கு ப்ராயச்சித்தம்

மூலம் – புத்திபூர்வக பாபாரம்பக பாபங்களுக்கு அஞ்சி அவையும் கழிய வேண்டுமென்று ப்ரபத்தி பண்ணாதே “பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்” போலே ப்ரக்ருதியோடே கூட இருக்கிற இவனுக்கு ஆத்மகுணபூர்த்தியில்லாமையாலே மந்ததைர்யரான ரிஷிகளுக்குப்போலே புத்திபூர்வகமாகவும் சில ஸ்வநிஷ்டாவிபரீதங்கள் வந்தாலும் நிஸர்க்க ஸுஹ்ருத்தான ச்ரிய:பதி ரக்ஷணோந்முகனாய் நிற்கையாலே இவ்விபநீதாநுஷ்டாநங்கள் மின்னொளி மாத்ரமாய் நிலை நிற்குமவையன்றிக்கே அக்காலத்தில் பிறந்த ஸ்வநிஷ்டாவைபரீத்யமாகிற இழவைக் கடுக அநுஸந்தித்து யதோசிதமாக லஜ்ஜாநுதாபங்கள் பிறந்து அபாய ஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத் ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யுத்புந: சரணம் வ்ரஜேத் உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப்யேததேவ ஹி அஜ்ஞாநாததவா ஜ்ஞாநாத் அபராதேஷு ஸத்ஸ்வபி ப்ராயச்சித்தம் க்ஷமஸ்வேதி ப்ரார்த்தநைகைவ கேவலம் விதித: ஸ ஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி ப்ரஸாதயஸ்வ த்வம் சைநம் சரணாகத வத்ஸலம் மாம் சாஸ்மை ப்ரயதோ பூத்வா நிர்யாதயிதுமர்ஹஸி இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே யதாதிகாரம் ப்ராயச்சித்தாவலம்பநம் உண்டாம்.

– ப்ரபத்தி செய்கின்றபோது ஒருவன் தனது பாவங்களுக்கு அஞ்சி, அவைகளை நீக்கவேண்டும் என்று வேண்டாமல் இருக்கக்கூடும். இதனால் நேர்வது என்ன? பெரியதிருமொழி (11-8-3) - பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் – கூறுவது போன்று பாம்புடன் ஒரே வீட்டில் வசிப்பது போல இவன் இந்த ப்ரக்ருதியுடன் உள்ளான். இதனால் இவனுக்கு ஆத்மகுணங்களானவை பூர்ணமாக உண்டாகாமல் இருப்பதால், புலனடக்கம் இன்றி சஞ்சலம் நிறைந்த மனம் கொண்ட சில ரிஷிகள் போன்று (விச்வாமித்ரர் போன்றவர்கள்) இவனுடைய ”ப்ரபந்நன்” என்னும் தன்மைக்கு விரோதமாக உள்ள பாவங்கள், இவனது அறிவுக்குத் தெரிந்தே இவனைச் சூழக்கூடும். இப்படியாகத் தெரிந்தே இவன் பாவங்களைச் செய்தபோதிலும், பெரியபிராட்டியாரின் நாயகனான எம்பெருமான், இவனைக் காப்பாற்றும் எண்ணத்துடன் எப்போதும் உள்ளதால், அந்தச் சூழலிலும் காப்பதற்குத் தயாராகவே உள்ளான். இதனால் அந்த ப்ரபந்நன் செய்கின்ற விபரீதமான செயல்கள் ஒரு நொடியில் தோன்றி மறைகின்ற மின்னல் போன்று, நொடிப்பொழுதே நிற்கின்றன. தன்னுடைய தவறை உணர்ந்த ப்ரபந்நன் தான் செய்த தவறுக்காக வருந்தி, அதற்காக வெட்கம் அடைந்து, தன்னுடைய தகுதிக்கு ஏற்ப அதற்கான ப்ரயாச்சித்தம் செய்கிறான். இதனைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: லக்ஷ்மீ தந்த்ரம் (17-91, 92) - அபாய ஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத் ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யுத்புந: சரணம் வ்ரஜேத் உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப்யேததேவ ஹி – பாவங்கள் செய்ய நேர்ந்தால் உடனே ப்ராயச்சித்தம் செய்தாக வேண்டும். எம்பெருமானைச் சரணம் புகுவதே இங்கு ப்ராயச்சித்தம் ஆகும். மோக்ஷத்திற்கான ப்ரபத்தியைச் செய்த பின்னர், கர்மயோகம் முதலானவற்றை மோக்ஷத்தின் உபாயமாகக் கைக்கொள்வதும் பாவமே ஆகும். வங்கீபுர நம்பி - அஜ்ஞாநாததவா ஜ்ஞாநாத் அபராதேஷு ஸத்ஸ்வபி ப்ராயச்சித்தம் க்ஷமஸ்வேதி ப்ரார்த்தநைகைவ கேவலம் – தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட பாவங்களை எண்ணி, “என்னைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்”, என்று எம்பெருமானிடம் இறைஞ்சுவதே ப்ராயச்சித்தம் ஆகும். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21: 20, 21) - விதித: ஸ ஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி ப்ரஸாதயஸ்வ த்வம் சைநம் சரணாகத வத்ஸலம் மாம் சாஸ்மை ப்ரயதோ பூத்வா நிர்யாதயிதுமர்ஹஸி – சீதை இராவணனிடம், “தன்னைச் சரணம் புகுந்தவர்களிடம் மிகவும் அன்பு கொண்டவனாக தர்மங்களை அறிந்த இராமன் உள்ளான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். உனக்கு உயிர் வாழ்வதில் ஆசை இருந்தால், அவனுடன் நட்பு கொள்வாயாக. தன்னிடம் சரணம் புகுந்தவர்களிடம் அன்புடன் இருக்கின்ற இராமனின் மனதை மகிழும்படிச் செய்வாயாக. தூய்மையான மனதுடன் என்னை அவனிடம் ஒப்படைப்பாயாக”, என்றாள். மேலே உள்ள பல வரிகளின்படி ப்ராயச்சித்தம் என்பதைக் கைக்கொள்ளுதல் குறித்து அறியலாம்.