Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

ப்ரபன்னனுக்கு பாவங்கள் நேராமை, ஒட்டாமை

மூலம் – இப்படி பகவச்சேஷதைக ஸ்வபாவனாகையாலே சாஸ்த்ரநியத தத்கைங்கர்யைக ரஸனான இவ்வதிகாரிக்குப் பின்பு அநாபத்தில் புத்திபூர்வகமான அபராதம் வருகை, பற்றின கைங்கர்யைகநிஷ்டைக்கு விருத்தமாகையாலே, ப்ராயேண ஸம்பாவிதமன்று. ப்ராப்தகர்ம விசேஷவசத்தாலே தேச கால அவஸ்தா வைகுண்யஹேதுகமாகவும் ப்ராமாதிகமாகவும் ஸுஷுப்த்யாத்ய வஸ்தைகளிலும் வரும் அபராதலேசங்களுள்ளவை அச்லேஷ விஷயமாய்க் கழிந்துபோம்.

– ப்ரபன்னன் தன்னுடைய இயல்பாகவே எம்பெருமானின் அடிமையாக உள்ளான். அவன் சாஸ்த்ரங்களின் அடிப்படையில் அமைந்துள்ள கைங்கர்யங்கள் மூலமாக எம்பெருமானுக்குக் கைங்கர்யங்கள் செய்து மகிழ்கிறான். இப்படிப்பட்ட ஒருவன் தனது ஆபத்து காலம் நீங்கலாக எம்பெருமானுக்கு எதிராக எந்தவிதமான அபராதமும் செய்யமாட்டான். அப்படிச் செய்தான் என்றால், அவன் எம்பெருமானுக்கு மட்டுமே அடிமை என்ற தன்மை பொருந்தாது போய்விடும் (ஆகவே அவன் எந்தவிதமான அபராதங்களும் செய்வதில்லை). ஆனால் பலன் தரத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்கள் காரணமாகவும், காலம்-இடம்-தருணம் ஆகியவை காரணமாகவும் அவன் தன்னை அறியாமலோ அல்லது உறங்கும்போதோ சில அபராதங்களைச் செய்துவிடக்கூடும். இப்படிப்பட்ட அபராதங்கள் அவனுக்கு ஒட்டுவதில்லை. அவை எந்தவிதமான சுவடும் இன்றி கழிந்துவிடுகின்றன.