Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 16)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

நின்றனம் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான் நன்றிது தீயதிதென்று நடத்திய நான்மறையால் இன்று நமக்கிரவாதலில் இம்மதியின் நிலவே அன்றி, அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியுளதே.

– த்ரிவிக்ரமனாக நின்று உலகம் அனைத்தையும் அளந்த ஸர்வேச்வரனால் “இந்தக் கர்மம் செய்யக்கூடியது, இந்தக் கர்மம் செய்யக்கூடாதது” என்று சாஸ்த்ரங்கள் மூலமாக நமக்கு உணர்த்துகிறான். இவ்விதம் வேதங்களால் காண்பிக்கப்பட்ட வழிமுறைகளில் நாம் நடப்பதன் மூலம் கிட்டுவது என்னவென்றால் எம்பெருமானிடம் பூர்ணமான ப்ரேமை கொண்ட நித்யஸூரிகளுக்கு ஒத்த கைங்கர்ய நிலை நமக்கும் கிட்டுகிறது. ஸம்ஸாரம் என்னும் இருளில் வாழ்கின்ற நம்மை, மீண்டும் மீண்டும் அஜ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்தபடியே உள்ளது. இதனைப் போக்க வேதங்களாகிய சந்த்ரனின் ப்ரகாசம் போன்ற ஸ்ம்ருதியைக் காட்டிலும் வேறு உபாயம் உள்ளதோ?