Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – இது தவிர்ந்தபோது வரும் அநிஷ்டமும், யதா ஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம் லோகோபயோகிநீம் ரம்யாம் பஹுஸஸ்ய விவர்த்தநீம் லங்கயந் சூலமாரோஹேதநபேக்ஷ: அபி தாம் ப்ரதி ஏவம் விலங்கயந் மர்யாதாம் வேதநிர்மிதாம் ப்ரிய: அபி ந ப்ரிய: அஸௌ மே மதாஜ்ஞா வ்யதிவர்த்தநாத் என்று அநந்தரம் சொல்லப்பட்டது. இந்த பகவதப்ரீதிக்கு க்ஷமை கொண்டிலனாகில் முக்தனாவதற்கு முன்னே அதிகாராநுரூபமாக ஏதேனுமோர் அநிஷ்டத்தை விளைவிக்கும். அது நிற்க ஸத்த்வப்ரக்ருதியான இவனுக்கு பகவதப்ரீதிக்கு மேற்பட்ட நரகமில்லை. அந்த பகவதப்ரீதி சமிப்பதும் பின்பு க்ஷமை கொள்ளில். ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் என்னும்படி நிஸர்க்கஸுஹ்ருத்தான ஈச்வரனுடைய அப்ரீதி சமிக்குமளவும் இவனுக்கு அருந்துதமா யிருக்கும். இங்ஙன் இராதவனுக்கு ஸ்வாமி விஷயத்தில் ப்ராவண்யமும் கைங்கர்ய ரூபமான மோக்ஷத்தில் ருசியும் சங்கிக்க அடுக்கும்.
– ஓர் அரசன் உலகிற்குப் பயன்படுவதற்காக அழகான ஒரு நதியை ஏற்படுத்தக்கூடும்; அந்த நதியானது பலவிதமான இடங்களில் உள்ள பயிர்களைச் செழிப்பாக வைத்தபடி ஓடும்; அந்த நதியால் தனக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று ஒருவன் அழிக்க முற்படுகிறான் என வைப்போம்; அப்படிப்பட்டவன் அரசனின் நண்பனாக இருந்தாலும் அவனை அந்த அசரன் கழுவில் ஏற்றுவான்; இப்படியாகவே வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை மீறி நடப்பவன் எனக்கு ப்ரியமானவனாகவே இருந்தாலும், எனது கட்டளைகளை மீறியதால் தண்டனைக்கு உரியவனே ஆவான் – என்பதாகும். இப்படியாக ஒருவன் எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை அளிக்காத செயலைச் செய்தான் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்டவன் தான் மரணம் அடைவதற்கு முன்பாக அதற்காக எம்பெருமானிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்கவில்லையென்றால், அவனுடைய தகுதிக்கு ஏற்ப தீமைகள் வந்து சேரும். அது மட்டும் அல்லாமல், எம்பெருமானுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய செயலைச் செய்வதைக் காட்டிலும் ப்ரபன்னனுக்கு வேறு பெரிய நரகம் என்று ஏதும் இல்லை. இவன் மன்னிப்பு கேட்டவுடன் எம்பெருமானின் வருத்தம் மறைந்து விடுகிறது. கீதை (5-29) - ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் – எம்பெருமான் அனைத்து உயிர்களின் நன்மையை விரும்புபவன் – என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்தின் நன்மையை அளிப்பவனாகிய ஈச்வரனின் வருத்தமானது தணிகின்றவரையில் இவனுக்கு உண்டான வேதனையானது பிறப்புறுப்பில் உண்டான வேதனை போன்று தாங்க இயலாத அளவு இருக்கும். தனது செயலைக் கண்டு எம்பெருமானின் மகிழ்ச்சி குலைந்தது கண்டும், இப்படியான வேதனை ஒருவனுக்கு உண்டாகவில்லையென்றால் அவன் தனது எஜமானனாகிய எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியும், கைங்கர்ய ரூபமாக உள்ள மோக்ஷத்தில் கொண்டுள்ள ஆசையும் சந்தேகிக்கக் கூடியவையே ஆகும்.
– இப்படியாக உள்ள சாஸ்த்ர நியமங்களை மீறும்போது உண்டாகும் தீமை குறித்து அடுத்துக் கூறப்பட்டது. அந்த வரிகள் (லக்ஷ்மீ தந்த்ரம்: 17 – 95, 96, 97): யதா ஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம் லோகோபயோகிநீம் ரம்யாம் பஹுஸஸ்ய விவர்த்தநீம் லங்கயந் சூலமாரோஹேதநபேக்ஷ: அபி தாம் ப்ரதி ஏவம் விலங்கயந் மர்யாதாம் வேதநிர்மிதாம் ப்ரிய: அபி ந ப்ரிய: அஸௌ மே மதாஜ்ஞா வ்யதிவர்த்தநாத்