Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – இப்படி முன்னடி பார்த்து வர்த்திக்கவேணுமென்று அருளிச் செய்த அர்த்தம் சாஸ்த்ரைகவேத்யமாகையாலே சாஸ்த்ரீயங்களுக்கு உபலக்ஷணமாக ஸாரோத்தாரம் பண்ணி இவரருளிச் செய்த கைங்கர்யங்களும் தான் வேண்டினபடி செய்யவொண் ணாமையாலே சாஸ்த்ரோக்தமான நியமத்தோடே செய்தால் கைங்கர்யமாமென்று ஸூசிதம். “வேண்டிற்றுச் செய்து திரியவமையுமோவென்னில் அது இவனுக்கு ஸ்வரூபமன்று” என்றருளிச் செய்தபடியாலே அசாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம் என்று ஆளவந்தார் அருளிச் செய்தபடியே, சாஸ்த்ர விருத்தங்கள் தைவப்ரக்ருதியான இவன் ஸ்வரூபத்துக்குப் பொருந்தாமையாலும், ச்ருதி: ஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்யம் வர்த்ததே ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ மத்பக்தோ அபி ந வைஷ்ணவ: என்று அடிமை கொள்ளுகிறவன் அருளிச் செய்தபடியாலும் இவன் சரீரத்தோடு இருந்த காலம் சாஸ்த்ரவச்யனாய் அடிமை செய்யவேண்டுமென்று திருவுள்ளம்.
– இப்படியாக முன்னர் கூறப்பட்டதை அறிந்து ப்ரபன்னர்கள் வாழவேண்டும் என்பதன் பொருள் என்னவென்றால் - எம்பெருமானார் அருளிச்செய்த இன்றியமையாத கைங்கர்யங்கள் அனைத்தும் சாஸ்த்ரங்கள் மூலமாக அறியப்படவேண்டும் என்பதும், இவர் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட விதிமுறைகளில் கைக்கொள்ளப்படவேண்டும் என்பதும், இப்படிச் செய்தால் மட்டுமே அவை கைங்கர்யங்களாகக் கொள்ளப்படும் என்பதும் ஆகும். இதனை எம்பெருமானார் - வேண்டிற்றுச் செய்து திரியவமையுமோவென்னில் அது இவனுக்கு ஸ்வரூபமன்று – இவன் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்பச் செய்வான் என்றால் அது இவனுடைய ஸ்வரூபத்திற்கு விரோதமாகவே அமையும் – என்றார். கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஆளவந்தார் (21) - அசாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம் – சாஸ்த்ரத்திற்கு உட்படாத செயல்கள் அனைத்தும் அசுரத்தன்மை உள்ளவை – என்றார். மேலும் நம்முடைய கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு, நம்மை அடிமையாக்கிக் கொள்கிறவன் விஷ்ணுதர்மத்தில் (6-31) - ச்ருதி: ஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்யம் வர்த்ததே ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ மத்பக்தோ அபி ந வைஷ்ணவ: - வேதமும் ச்ருதியும் எனது கட்டளைகளாகும்; அவற்றை மீறி நடப்பவன் யாராக இருப்பினும் எனது ஆணைகளை மீறுபவன் ஆவான்; அவன் எனக்குத் துரோகம் செய்தவன் ஆவான்; அவன் என்னிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தாலும் வைஷ்ணவன் அல்லன் – என்றான். ஆகவே தன்னுடைய சரீரத்துடன் உள்ள காலம் முடிய ப்ரபன்னன் சாஸ்த்ரங்களுக்கு உட்பட்டு கைங்கர்யம் செய்யவேண்டும் என்பது எம்பெருமானாரின் திருவுள்ளம் ஆகும்.