Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – அதில் அநுகூலரை அநாதரிக்கலாகாதென்னுமிடம் ஸ்ரீசாண்டில்ய ஸ்ருதியிலே, அநாத்யத ஸுதம் கேஹீ புருஷம் நாபிநந்ததி ததா அநார்சித ஸத்பக்தம் பகவாந் நாபிநந்ததி என்று சொல்லப்பட்டது. ப்ரதிகூல ஸம்ஸர்க்கம் ஆகாதென்னுமிடம், மஹாபாரதத்திலே யே த்விஷந்தி மஹாத்மாநம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்யதீர்த்தேஷு கதி: ஸம்ஸர்க்கிணாமபி என்று சொல்லப்பட்டது. அப்படியே மூடை: பாபரதை: க்ரூரைர்பகவச்சாஸ்த்ர தூஷகை: ஸம்பந்தம் நாசரேத்பக்திர்நச்யத்யேதைஸ்து ஸங்கமே என்று ப்ரதிகூல ஸம்ஸர்க்கம் பகவத்ப்ரேமத்தை அழிக்குமென்று சொல்லப்பட்டது. உதாஸீநரை த்ருணவத்கரித்திருக்கவேணுமென்னுமிடம், அத்யப்ரப்ருதி ஹே லோகா யூயம் வயம் வயம் அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம் நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் வயம் து கிங்கரா விஷ்ணோர்யூயமிந்த்ரய கிங்கரா: இத்யாதிகளிலே ப்ரஸித்தம்.
– ப்ரபந்நன் யாரை ஏற்கவேண்டுமோ (ஸ்ரீவைஷ்ணவர்கள்) அவர்களைத் தள்ளக்கூடாது என்பதை சாண்டில்ய ஸ்ம்ருதி (4-86) - அநாத்யத ஸுதம் கேஹீ புருஷம் நாபிநந்ததி ததா அநார்சித ஸத்பக்தம் பகவாந் நாபிநந்ததி – தன்னுடைய குழந்தையை மதிக்காமல், தன்னிடம் உதவி கேட்டு வரும் ஒருவனிடம் அந்தக் குழந்தையின் தந்தை எப்படி அன்பு காட்டுவதில்லையோ அது போன்று, தனது பக்தர்களை வணங்காதவர்களிடம் எம்பெருமான் அன்பு காட்டுவதில்லை – என்றது. அடுத்து, ப்ரபந்நர்கள் தகாதவர்களிடம் தொடர்பு வைக்கக்கூடாது என்ற கருத்து மஹாபாரதத்தில் (சாந்திபர்வம்: 336-36) - யே த்விஷந்தி மஹாத்மாநம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்யதீர்த்தேஷு கதி: ஸம்ஸர்க்கிணாமபி – பரமாத்மாவான கேசவனை எண்ணமுடியாத அளவிற்கு அவனிடம் பகையை வளர்த்திருப்பவர்கள், அப்படிப்பட்டவர்களுடன் சேர்பவர்கள் ஆகிய இருவரும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் எந்தப் பயனும் பெறுவதில்லை – என்றது காண்க. மேலும் தகாதவர்களிடம் வைக்கும் தொடர்பு எம்பெருமான் மீது வைக்கும் ப்ரேமையை அழிக்கும் என்பதை சாண்டில்ய ஸ்ம்ருதி (1-121) - மூடை: பாபரதை: க்ரூரைர்பகவச்சாஸ்த்ர தூஷகை: ஸம்பந்தம் நாசரேத்பக்திர்நச்யத்யேதைஸ்து ஸங்கமே – அறிவில்லாதவர்கள், பாவங்களில் ஈடுபட்டபடி உள்ளவர்கள், தீய தன்மைகள் உள்ளவர்கள், பாஞ்சராத்ர ஆகமத்தைத் தவறாகக் கூறுபவர்கள் ஆகியவர்களுடன் சேர்ந்தால் பக்தி அழியும் – என்றது. ஏற்கத்தக்கவர்கள், ஏற்கத்தகாதவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தவிர உள்ள மூன்றாவது பிரிவினரைப் புல் போன்று அற்பமாக ஒதுக்கவேண்டும் என்பது குறித்து - அத்யப்ரப்ருதி ஹே லோகா யூயம் வயம் வயம் அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம் நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் வயம் து கிங்கரா விஷ்ணோர்யூயமிந்த்ரய கிங்கரா: - உலகவிஷயங்களில் ஈடுபட்டபடி உள்ளவர்களே! இன்று தொடக்கமாக நீங்களும் நாங்களும் வெவ்வேறு ஆவோம். நீங்கள் உலக இன்பம் மற்றும் செல்வம் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபாட்டுடன் உள்ளீர்கள், நாங்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் மட்டுமே ஈடுபாட்டுடன் உள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீங்கள் புலன்கள் வசப்பட்டவர்கள், நாங்கள் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் – என்றது காண்க.