Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை

மூலம் – இப்படி ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்த உத்தரக்ருத்யத்தில் குலடா ஷண்ட பதிதா வைரிப்ய: காகிணீமபி உத்யதாமபி க்ருஹீண்யாந்நாபத்யபி கதாசந பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தே அதீவ தயிதா மம இத்யாதிகளிற்படியே தர்மவிருத்த அர்த்தகாமங்கள் தூரதோ நிரஸ்தங்களான படியாலே தர்ம அவிருத்தங்களான அர்த்தகாமங்களுபாதியாகவும் அநுகூல ப்ரதிகூல உதாஸீந விஷயங்களில் தான் நின்ற நிலை குலையலாகாதென்று திருவுள்ளம்.

– இப்படியாக ப்ரபந்நர்களுக்கான ஒழுக்கங்களை எம்பெருமானார் அருளிச்செய்ததைக் காணலாம். மேலும் சாஸ்த்ரங்களால் அப்பால் விலக்கப்பட்டவை என்பதால், பொருள் மற்றும் புலன் விஷயங்களில் கொள்ளும் ஆசை என்பது ப்ரபந்நர்களுக்கு மட்டும் அல்லாமல், அனைவருக்குமே தடுக்கப்பட்ட ஒன்றாகும். இதனைக் கீழே உள்ள ச்லோகங்களில் காணலாம்: சாண்டில்ய ஸ்ம்ருதி (3-18) - குலடா ஷண்ட பதிதா வைரிப்ய: காகிணீமபி உத்யதாமபி க்ருஹீண்யாந்நாபத்யபி கதாசந – விபச்சாரி, அலி, கர்மங்களைத் துறந்தவன், விரோதி ஆகியவர்கள் தாங்களாகவே அளித்தாலும், எப்பேர்ப்பட்ட ஆபத்து காலமாக இருந்தாலும் அவற்றைப் பெறுதல் கூடாது. விஷ்ணுதர்மம் (76-22) - பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தே அதீவ தயிதா மம – மற்றவர்களின் குற்றங்களைக் காணாத குருடன், மற்றவர்களின் மனைவிகளிடம் அலி போன்று நடப்பவன், மற்றவர்களைப் பற்றிப் பேசாத ஊமை ஆகியவர்கள் எனக்கு மிகவும் ப்ரியமானவர்கள். ஆக, தர்மவழிக்கு மாறாத வழியில் பொருள் ஈட்டுதல் மற்றும் புலன் விஷயங்களில் ஈடுபடுதல் என்றாலும் கூட, ப்ரபந்நர்கள் தங்களது நிலையை அநுகூலர், ப்ரதிகூலர் மற்றும் உதாஸீநர் ஆகியவர்கள் விஷயங்களில் மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதே எம்பெருமானாரின் திருவுள்ளம் ஆகும்.