Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – 5. இப்படிச் செய்யவொட்டாதொழிகிறது அர்த்தகாமங்களில் ப்ராவண்யம். அர்த்தகாமங்களடியாக ஸ்ரீவைஷ்ணவர்களை அநாதரித்திருக்குமாகில் ஸார்வபௌமனா யிருப்பானொரு ராஜாவினுடைய புத்திரனை ராஜஸந்நிதியிலே பரிபிவித்தால் ராஜா வெறுக்குமாப் போலே எம்பெருமான் திருவுள்ளம் சீறும். அர்த்தகாமங்களடியாக ப்ரதிகூலரை ஆதரித்திருக்குமாகில் ராஜா ஸார்வபௌமனாயிருக்க ராஜமஹிஷி க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலே மடிப்பிச்சை புக்கால் ராஜாவுக்கு அவத்யமாய் அத்தாலே அவளை அவன் வெறுக்குமாப் போலே எம்பெருமான் திருவுள்ளம் வெறுத்திருக்கும். அர்த்தகாமங்களடியாக அநுகூலரை ஆதரித்திருக்குமாகில் ரத்நத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசியறியாதாப் போலே இவனுக்குப் பிறந்த ஜ்ஞாநம் கார்ய கரமாயிற்றில்லையென்று அவனளவிலே எம்பெருமான் அநாதரித்திருக்கும்.
– கடந்த பத்தியில் கூறியபடி செய்ய இயலாமல் தடுப்பது எது என்றால், செல்வம் மற்றும் புலன் விஷயங்களில் உள்ள ஆசையே ஆகும். இப்படியாக பொருள் மற்றும் புலன் விஷயங்களில் கொண்ட ஆசை காரணமாக ஒருவன் ஸ்ரீவைஷ்ணவர்களை தரக்குறைவாக நடத்தினான் என்று வைப்போம்; அவனுடைய நிலை என்ன? அரசனின் முன்னிலையில் அரசகுமாரனை அவமானப்படுத்தினால் அரசனுக்கு எத்தனை கோபம் உண்டாகுமோ அது போன்று எம்பெருமான் தனது மனதில் அவன் மீது சீற்றம் கொள்வான். பொருள் மற்றும் புலன் விஷயங்களில் கொண்ட ஆசை காரணமாக ஒருவன் ப்ரதிகூலர்களை மரியாதையுடன் நடத்தினான் என்று வைப்போம்; அவனுடைய நிலை என்ன? அரசன் உள்ளபோது அரசியானவள் மற்றவர்களிடம் சென்று தனக்கு உதவி என்று கேட்டால் அரசன் எவ்விதம் அரசியை வெறுப்பானோ அது போன்று எம்பெருமான் அவனை வெறுப்பான். பொருள் மற்றும் புலன் விஷயங்களில் கொண்ட ஆசை காரணமாக ஒருவன் மேலே உள்ள இரு பிறவினர் நீங்கலாக உள்ள மற்றவர்களை மரியாதையுடன் நடத்தினான் என்று வைப்போம்; அவனுடைய நிலை என்ன? இப்படிபட்டவனுக்கு இரத்தினக்கல்லிற்கும் பாறாங்கல்லிற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு ஞானம் உள்ளது என்று தீர்மானித்து எம்பெருமான் அவனை ஒதுக்கிவிடுவான்.