Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை

மூலம் - 4. இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயமுண்டு. அவையாவன – அநுகூலரென்றும், ப்ரதிகூலரென்றும், அநுபயரென்றும். அநுகூலராவார் – ஸ்ரீவைஷ்ணவர்கள். ப்ரதிகூலராவார் – பகவத் த்விட்டுக்கள், அநுபயராவார் – இவ்விரண்டுமில்லாத ஸம்ஸாரிகள். இதில் அநுகூலரைக் கண்டால் சந்தந குஸுமாதிகள் போலவும், நிலவு தென்றல் போலவும், அபிமத விஷயங்கள் போலவும் உகந்து வர்த்திப்பான். ப்ரதி கூலரைக் கண்டால் ஸர்ப்பாதிகளைக் கண்டாற்போலே வெருவி வர்த்திப்பான். அநுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டாற்போலே த்ருணவத்கரித்து வர்த்திப்பான். இவர்கள் அநுகூலிப்பார்களாகில் இவர்களுக்கு ஜ்ஞாநத்தை உண்டாக்கவும், இவர்கள் அநுகூலியார்களாகில் ஐயோ என்று இவர்கள் பக்கலிலே க்ருபை பண்ணியிருக்கவும் அடுக்கும்.

– மேலே கூறப்பட்டபடி வாழ்கின்ற ப்ரபந்நன் தன் முன்பாக உள்ள மூன்று விஷயங்களைக் கவனித்து இருத்தல் வேண்டும். அவையாவன: அநுகூலர், ப்ரதிகூலர் மற்றும் அநுபயர் என்பவர்கள் குறித்தே ஆகும். அநுகூலர் = ஸ்ரீவைஷ்ணவர்கள்; ப்ரதிகூலர் = எம்பெருமானைத் த்வேஷம் செய்பவர்கள்; அநுபயர் = இந்த இரண்டிலும் பொருந்தாத ஸம்ஸாரிகள் ஆவர். இவர்களில் அநுகூலரைக் காணும்போது சந்தனம் மற்றும் மலர்களைக் கண்டது போன்றும், நிலவு மற்றும் தென்றலை அனுபவிப்பது போன்றும், மனதிற்குப் பிடித்த விஷயங்கள் போன்றும் மகிழ்வு கொள்ளவேண்டும். ப்ரதிகூலரைக் காணும்போது நாகம் மற்றும் நெருப்பைக் கண்டால் எப்படி அச்சம் உண்டாகுமோ அது போன்று அச்சம் கொள்ளவேண்டும். அநுபயரைக் காணும்போது, மரம் அல்லது மண்கட்டியைக் காண்பது போல் எண்ணி, அவர்களைப் புல்லாக நினைத்து பொருட்படுத்தாமல் தவிர்க்கவேண்டும். இப்படி உள்ள அநுபயர்கள் பகவத் விஷயத்தில் ஈடுபட எண்ணினால், அவர்களுக்குத் தகுந்த ஞானத்தை அளிக்கவேண்டும்; அவர்கள் பகவத் விஷயத்தில் ஈடுபாடு கொள்ளவில்லை என்றால் அவர்களின் நிலை கண்டு வருந்தி கருணை கொள்ளவேண்டும்.