Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – 3. அதில் இவனுக்கு இங்கிருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு உண்டு. அவையாவன – பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல்; அதுக்கு யோக்யதையில் லையாகில் அருளிச்செயலைக் கேட்டு ப்ரவர்த்திப்பித்தல்; அதுக்கு யோக்யதையில் லையாகில் உகந்தருளின திவ்யதேசங்களுக்கு அமுதுபடி, சாத்துப்படி, திருவிளக்குத் திருமாலைகளை உண்டாக்குதல்; அதுக்கு யோக்யதையில்லையாகில் த்வயத்தினுடைய அர்த்தாநுஸந்தானம் பண்ணுதல், அதுக்கு யோக்யதையில்லையாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பானொரு ஸ்ரீவைஷ்ணவனுடைய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம்.
– ப்ரபந்நன் இந்த உலகில் வாழும்வரையில் அவன் ஐந்துவிதங்களில் கைங்கர்யங்கள் செய்யலாம். அவையாவன: ஸ்ரீபாஷ்யத்தை (இங்கு பாஷ்யம் என்று மட்டுமே கூறப்பட்டதால், கீதா பாஷ்யமும் அடக்கம் என்று சிலர் கூறுவர்) தான் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் உபதேசம் செய்தல். மேலே கூறப்பட்டது இயலவில்லை என்றால், ஆழ்வார்களின் அருளிச் செயலைக் கொண்டு, மற்றவர்களுக்கும் உபதேசம் செய்தல். மேலே கூறப்பட்டது இயலவில்லை என்றால், எம்பெருமானின் திவ்யதேசங்களில் வசித்துக் கொண்டு அங்குள்ள எம்பெருமானுக்கு சமைத்துக் கொடுப்பது, சந்தனம் அரைப்பது, திருவிளக்கு தூய்மையாக்கி ஏற்றுதல், திருமாலைகள் தொடுத்தல் முதலியவற்றைச் செய்தல். மேலே கூறப்பட்டது இயலவில்லை என்றால், த்வய மந்த்ரத்தை அதன் பொருளுடன் அறிந்து கொண்டு, அதனைக் கூறியபடி இருத்தல். மேலே கூறப்பட்டது இயலவில்லை என்றால், ”நான் உடையவரின் கோஷ்டியைச் சேர்ந்தவன்” என்று எண்ணியபடி உள்ள ஒரு ஸ்ரீவைஷ்ணவனைப் பற்றிக் கொண்டு, அவனுடைய நிழலில் ஒதுங்கி வாழ்தல்.