Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – 1. ஒருவன் ப்ரபந்நனானால் அவனுடைய ஆத்ம யாத்ரை பகவததீநையாகையாலே அதில் அவனுக்கு அந்வயமில்லை; உண்டென்றிருந்தானாகில் ஆத்ம ஸமர்ப்பணம் பொய்யாமித்தனை. தேஹயாத்ரை கர்மாதீநையாகையாலே அதுக்குக் கரையவேண்டா; கரைந்தானாகில் நாஸ்திகனாமித்தனை. ஆகையால் உபய யாத்ரையையுங் கொண்டு இவனுக்குக் கார்யமில்லை. 2. ஆனால் மநோவாக்காயங்களாகிற த்ரிவித கரணங்களையுங் கொண்டு வேண்டிற்றுச் செய்து திரியவமையுமோ என்னில், அது இவனுக்கு ஸ்வரூபமன்று; உபயாம்சத்தில் அந்வயமில்லாவிட்டாலும், ப்ராப்யமான கைங்கர்யத்திலே இவற்றை அந்வயிப்பிக் குமித்தனை.
– 1. ஒருவன் ப்ரபந்நன் என்றால் தன்னுடைய மோக்ஷம் என்பது எம்பெருமானின் வசப்பட்டது என்பதால் அதனைக் குறித்து அவன் வருத்தம் கொள்ளவேண்டியதில்லை. அப்படியும் அவன் வருந்தினால் என்றால், அவன் ப்ரபத்தி செய்தது என்பது பொய்யே ஆகும். அவன் தனது சரீரத்தைக் கைவிடுதல் என்பது கர்மத்தின் கையில் உள்ளது என்பதால், அதற்காகவும் வருத்தம் கொள்ளக் கூடாது. அப்படியும் அவன் வருந்தினால் என்றால், அவன் நாஸ்திகனே ஆவான். ஆகவே இரண்டிற்காகவும் வருத்தம் கொள்ளக் கூடாது. 2. அப்படி என்றால் மனம், வாக்கு மற்றும் சரீரம் ஆகியவற்றைக் கொண்டு ஒருவன் தனது விருப்பப்படி செயல்கள் செய்தபடி இருக்கலாமா என்ற கேள்வி எழலாம். அப்படிச் செய்தல் என்பது இவனுடைய ஸ்வரூபத்திற்கு (இயல்பிற்கு) ஏற்றதன்று. அவனுக்கு அந்த மூன்று கரணங்களைக் கொண்டு உபாயத்தின் மீது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும், இவற்றைக் கொண்டு இவன் தனது கைங்கர்யத்தில் ஈடுபட்டபடி இருக்கலாம். இந்தக் கைங்கர்யம் அல்லவோ இவனுடைய புருஷார்த்தமாக உள்ளது?