Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

மூலம் – இச்சேஷத்வ ஸம்பந்தமடியாக பகவத்பாகவதவிஷயங்களில் இவன் பண்ணும் கைங்கர்யம் சாஸ்த்ர ஸாபேக்ஷ ருசியாலேயோ, சாஸ்த்ர நிரபேக்ஷ ருசியாலேயோ என்னில், இருள்தரு மாஞாலத்துள் இருக்கிற இவனுக்குச் சாஸ்த்ரம் கைவிளக்காக வேண்டுகையாலே யதாசாஸ்த்ரமாய் சாஸ்த்ரம் விகல்பித்தவற்றில் யதாருசியாகக் கடவது.

– கடந்த அதிகாரத்தில் ஒருவன் தான் சேஷனாக (தொண்டு புரிபவனாக) உள்ள தன்மை காரணமாக எம்பெருமானுக்கும், அவனது அடியார்களுக்கும் கைங்கர்யம் செய்தல் பற்றி ஆராயப்பட்டது. அப்படிப்பட்ட கைங்கர்யத்தின் மீது இவன் கொள்ளும் ஆசை என்பது: இவனுக்கு இயல்பாகவே உள்ள ஆசை மற்றும் இது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டது என்பதாலா அல்லது இவனுக்கு இயல்பாகவே உள்ள ஆசை காரணமாக மட்டுமே அல்லாமல் இவற்றைப் பற்றி சாஸ்த்ரங்களில் எதுவும் கூறப்படவில்லை என்பதாலா என்று சந்தேகம் எழுகிறது. அறியாமை என்னும் இருள் சூழ்ந்த இந்த உலகில் உள்ள ஒருவனுக்கு சாஸ்த்ரங்களே கைவிளக்காக உள்ளன. ஆகவே இவனுக்கு சாஸ்த்ரங்கள் மூலமாகவே இந்த ஆசை ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் சாஸ்த்ரங்கள் “செய்தாலும் செய்யலாம், செய்யாமல் விட்டாலும் தவறில்லை” என்று கூறும்போது, ஒருவன் தனது சொந்த முடிவு எடுக்கலாம்.