Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவத சேஷத்வமும் பாகவத சேஷித்வமும்

மூலம் – இப்படியாகில் இருவருக்கும் பாகவதத்வமுண்டானால் ஒருவரைப்பற்ற ஒருவர்க்கு சேஷத்வமும் சேஷித்வமும் வருகை விருத்தமன்றோ என்னில், பரஸ்பர உபகார்யே உபகாரக பாவாதிகளிற்போலே இங்கும் விரோதமில்லை. அதிகார்யவஸ்தையிலே க்ரியைக்குச் சேஷியானவன் தானே கர்த்ரவஸ்தையிலே இதுக்குச் சேஷமாய் நில்லா நின்றான். அப்படியே அந்யோந்யம் பண்ணும் அதிசயங்களை உபஜீவியாதே ஒருத்தருக்கொருத்தர் அதிசயாதாநம் பண்ணினால் அதிசயாதாயகத்வவேஷத்தாலே இருவருக்கும் சேஷத்வமுண்டாய் அதிசயத்துக்கு வேஷத்தாலே இருவருக்கும் சேஷித்வமுண்டாகக் குறையில்லை.

– பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்யும்போது, இருவருமே பாகவதர்கள் என்றாகின்றனர். இவ்விதம் ஆகும்போது இருவருக்குள் ஒருவர் அடிமையாகவும், மற்றொருவர் எஜமானனாகவும் இருக்கின்ற நிலை உண்டாகும் அல்லவோ? இது முரணாக உள்ளதே என்ற சந்தேகம் எழலாம். இதில் முரண்பாடு ஏதும் இல்லை. இந்த உலகத்தில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்தபடியும், தான் அவரிடமே உதவி கேட்டபடியும் உள்ள நிலையைக் காணலாம். யாகம் ஒன்றை இயற்றும் ஒருவன், ஏதோ ஒரு பலனுக்காக அதனை இயற்றியபோதிலும் அவன் எஜமானனாக உள்ளான்; அவனே அந்த யாகம் இயற்றுகின்ற நேரத்தில் யாகம் இயற்றும் தொண்டனாகவும் உள்ளான். இது போன்று ஒரு பாகவதர் மற்றொரு பாகவதருக்குக் கைங்கர்யம் செய்யும்போது கைங்கர்யம் செய்கின்ற பாகவதர் மற்றவருக்கு சேஷனாக உள்ளார். கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்கின்ற பாகவதர் வேறு ஒரு காலகட்டத்தில் கைங்கர்யம் செய்த பாகவதருக்குக் கைங்கர்யம் செய்யும்போது அவருக்கு இவர் சேஷனாகிறார். இப்படியாக இருவருக்கும் சேஷத்வமும் சேஷித்வமும் உண்டாவதில் குறையில்லை.