Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
பாகவத சேஷத்வத்தின் முறை
மூலம் – இப்பாகவத சேஷத்வம் ஸ்வாபாவிகமோ ஔபாவிகமோவென்னில், கர்மாத்யுபாதிகளற நித்யாபிவாச்சித பரஸ்பர நீசபாவை: என்கிறபடியே யாவதாத்மபாவியாய்க்கொண்டு முக்ததசையிலும் அநுவர்த்திப்பதொன்றாகையாலே ஸ்வாபாவிகமென்னவுமாம்; பகவத்ஸம்பந்த ஜ்ஞாநவிசேஷ நிபந்தநமாகையாலே ஔபாவிகமென்னவுமாம்.
– இப்படியாக பாகவதர்களுக்குத் தொண்டு புரிந்தபடி இருத்தல் என்பது இயற்கையாகவே உண்டாகிறதா அல்லது எதிர்பாராமல் உண்டாகிறதா என்ற கேள்வி எழலாம். இரண்டு வகைகளிலும் உண்டாகிறது. ஸ்ரீவைகுண்டஸ்தவம் (77) - நித்யாபிவாச்சித பரஸ்பர நீசபாவை: - ஒருவருக்கொருவர் தொண்டு செய்தபடி இருக்க விரும்பும் நித்யஸூரிகளோடு நான் எப்போது சேர்வேன் – என்று கூறுவதற்கு ஏற்ப இத்தகைய பாகவத சேஷத்வம் என்பது முக்தி அடைந்த பின்னரும் தொடர்வதால் இது இயற்கையாகவே உள்ளதாகிறது. எம்பெருமானின் தொடர்பு பற்றிய ஞானம் உண்டாகும்போது இத்தகைய பாகவத சேஷத்வமும் உண்டாவதால் எதிர்பாராமல் உண்டாகிறது எனவும் கூறலாம்.