Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவத சேஷத்வத்தின் முறை

மூலம் – இப்பாகவத சேஷத்வம் க்ரயம் செல்லும்படியைப் “பேசிவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் அருளிச்செய்தார். இது மத்யமபதத்துக்குத் தாத்பர்யார்த்தம். இவ்வர்த்தத்தை அநுஸந்தித்தால் இச்சேஷத்வம் ஸத்வாரகமாகவும் அத்வாரகமாகவும் நின்ற நிலையிலே சேஷ வ்ருத்தியான கைங்கர்யமும் நிற்கும். ஆகையால் தன் சக்திக்கு அநுரூபமாக பகவத்கைங்கர்யத்தினுடைய ஸாத்யாகார விவ்ருத்தியான புருஷார்த்தத்தில் எல்லை நிலத்தைத் தரிசு தூறு விடாதொழியப் ப்ராப்தம். இது, பர்த்துர்ப்ருத்யகணஸ்ய ச, ஆப்தோ விஷ்ணோரநாப்தச்ச த்விதா பரிகர: ஸ்ம்ருத: நித்யோ வந்த்யோ ந வாநித்ய: கர்மவச்யோ முமுக்ஷுபி: என்று ஸ்ரீபௌஷ்காதிகளிற் சொன்ன ந்யாயத்தாலே பதிவ்ரதாதர்மம் போலே இருக்கிற பரமைகாந்தித்வத்துக்கு மிகவும் உசிதமான பதிசித்தாநுவர்த்தநம் ஆகையால் ஹேத்வந்தரத்தாலன்றிக்கே அநந்யார்ஹ சேஷத்வஞானமடியாக வருகையாலே இவ்வந்ய சேஷத்வம் விருத்தமன்று.

– இப்படியாக உள்ள பாகவத சேஷத்வம் விலைக்கு விறாலும் செல்லும்படியாக உள்ளதைக் கல்பஸூத்ரத்தின் வ்யாக்யான கர்த்தாவாகிய பெரியாழ்வார் தனது திருமொழியில் (4-4-10) - பேசிவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே – எம்பெருமானின் திருநாமத்தைக் கூறுபவர்கள் எங்களை விற்கக்கூட உரிமை உள்ளவர்கள் - என்றார். இதுவே திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதன் பொருளாக உள்ளது. இந்த அர்த்தத்தில் நாம் சிந்தனை செய்தால், நாம் எம்பெருமானுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் (அடியார்கள் மூலம்) அடிமையாக உள்ளோம் என்றாகிறது. இதன்படி நாம் செய்யும் கைங்கர்யங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆகிறது. ஆகவே எம்பெருமானின் அடிமையாக உள்ள ப்ரபன்னன் ஒருவன் தனது சக்திக்கு இயன்றவரையில் பாகவதர்களுக்குத் தொண்டு செய்வதே தங்களின் கடமை என்று அறியவேண்டும். இப்படியாக உள்ள பாகவதர்களுக்குக் கைங்கர்யம் என்ற நிலமானது பாழாகப் போகும்படிச் செய்துவிடாமல், எப்போதும் கைங்கர்யம் என்னும் உழவு செய்தபடி இருக்கவேண்டும். கீழே உள்ள பௌஷ்கர ஸம்ஹிதை வரிகளைக் காண்க: பர்த்துர்ப்ருத்யகணஸ்ய ச – தனது கணவன் அருகில் இருந்தாலும் சரி, இல்லாதபோதும் சரி, கணவனையும் அவனது வேலையாட்களையும் கவனிப்பது மனைவிக்குக் குற்றமன்று. ஆப்தோ விஷ்ணோரநாப்தச்ச த்விதா பரிகர: ஸ்ம்ருத: நித்யோ வந்த்யோ ந வாநித்ய: கர்மவச்யோ முமுக்ஷுபி: - எம்பெருமானின் பரிவாரங்கள் ஆப்தர் மற்றும் அநாப்தர் என்று இருவகைப்படுவர். ஆப்தர் என்பவர் நித்யர், முக்தர் மற்றும் பாகவதர்கள். அநாப்தர் என்பவர் தேவர்களும், கர்ம வசப்பட்ட ஸம்ஸாரிகளும் ஆவர். முமுக்ஷு ஒருவன் முதலில் கூறியவர்களை வணங்கலாம், இரண்டாவதாகக் கூறப்பட்டவர்களை வணங்கக்கூடாது. ஆகவே பதிவ்ரதைக்கான தர்மங்களுடன் கூடிய ஒருவன், எம்பெருமானிடம் மிகவும் ஈடுபாடு கொண்ட ஒருவன், எம்பெருமானின் ஸங்கல்பத்திற்கு உட்பட்டே நடக்க முயல்வான். பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தல் என்பது நாம் எம்பெருமானுக்கு மட்டுமே அடிமை என்ற ஞானத்தால் உண்டாவதாகும். மற்ற யாருக்கும் நாம் அடிமை அல்ல என்பதால், பாகவதர்களுக்குத் தொண்டு செய்தல் என்பது முறையானதே ஆகும்.