Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
பாகவத கைங்கர்யம் மூலம் எம்பெருமான் எவ்விதம் மகிழ்கிறான்
மூலம் – இப்படி சேஷிக்கு அபிமதமென்கிறவளவே அன்று, சேஷத்வமாகிற ஸம்பந்தந்தான் ஸத்வாரகமாகவும் உண்டாகையால் கைங்கர்யமும் ஸத்வாரகமாகவும் ப்ராப்தம். அது எங்ஙனேயென்னில்: நித்யம் ச்ரியா ஸமேதஸ்ய பக்தேராத்மவத: ஸதா ஸஹ ஸத்வாரகம் ச ஸ்யாத் சேஷித்வம் பரமாத்மந: ஸ்வதந்த்ரனாய் ஸ்வச்சந்தலீலனான ராஜா தான் பூண்ட ஆபரணத்தையும் இட்ட மாலையையும் அடியார்களுடையவும் ஆனை குதிரைகளுடையவும் கழுத்திலே இடுமாப்போலே “அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றும், நாரத: அஹமநுப்ராப்த: ஸ்வதர்சன குதூஹலாத் ப்ரபவோ பகவத்பக்தா மாதர்சாம் ஸததம் த்விஜ என்றும் “மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை” என்றும் சொல்லுகிறபடியே அத்யந்த பாரதந்த்ர்யாதிகளடியாக பகவதிஷ்டவிநியோகார்ஹதையாலே பகவச்சேஷத்வம் தான் யாவதாத்மபாவியான கட்டளையிலே பாகவதசேஷத்வபர்யந்தமாயிற்று. இங்கு பாகவதத்வமடியாக ஸ்வரூப ப்ரயுக்தமாகவும் குணைர்தாஸ்யமுபாகத: என்கிற ந்யாயத்தாலே குணஜ்ஞானமடியாக ஸ்வேச்சையாலும் வந்த பாகவதசேஷத்வம் “பகவத்பக்தா:”, “மாத்ருசாம்” என்கிற இரண்டு பதத்தாலும் ஸூசிதம்.
– இப்படியாக பாகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யம் எம்பெருமானுக்கு மகிழ்வை உண்டாக்குகிறது. அத்துடன் மட்டும் நில்லாமல், தான் எம்பெருமானின் சேஷனாக உள்ள நிலையானது பாகவதர்களை இடையிட்டும் மேம்படுகிறது. ஆகவே ஒருவன் எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பது பாகவதர்கள் மூலமாகவும் சென்றடைகிறது. இதனை நித்யம் ச்ரியா ஸமேதஸ்ய பக்தேராத்மவத: ஸதா ஸஹ ஸத்வாரகம் ச ஸ்யாத் சேஷித்வம் பரமாத்மந: - பெரியபிராட்டியை விட்டு அகலாத எம்பெருமான், தன்னுடைய பாகவதர்களைத் தனது ஆத்மா என்றே கருதும் எம்பெருமான், தன்னுடைய பத்னியாகிய பிராட்டியுடன் உள்ளபோதும் எஜமானத்தன்மையை வெளிப்படுத்தியபடியும், பாகவதர்கள் மூலமாகத் தனது எஜமானத்தன்மையை வெளிப்படுத்தியபடியும் உள்ளான் – என்பதன் மூலம் அறியலாம். சுதந்திரமாகவும் தன்னுடைய விருப்பப்படியும் செயல்படுவதில் நாட்டம் கொண்ட அரசன் ஒருவன் தான் கழுத்தில் அணிந்துள்ள ஆபரணங்களையும், மாலைகளையும் தன்னுடைய வேலையாட்கள் மற்றும் யானை குதிரைகள் ஆகியவர்களின் கழுத்தில் அணிவிக்க விருப்பம் கொள்கிறான் (இது போன்று எம்பெருமான் தனது அடியார்களைக் கௌரவிப்பதில் மகிழ்வு கொள்கிறான்). கீழே உள்ள வரிகள் காண்க: அமலனாதிப்பிரான் (1) - அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன் பத்மோத்தரம் (81-52) - நாரத: அஹமநுப்ராப்த: ஸ்வதர்சன குதூஹலாத் ப்ரபவோ பகவத்பக்தா மாதர்சாம் ஸததம் த்விஜ – நாரதனாகிய உன்னைக் காணவே நான் இப்போது மிகவும் ஆர்வத்துடன் வந்தேன். இருமுறை பிறப்புள்ள அந்தணனே! பாகவதர்கள் அனைவரும் என்னைப் போன்றவர்களுக்கு எப்போதும் எஜமானர்கள் பெரியதிருமொழி (8-10-3) - மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை மேலே உள்ள பல வரிகளின் மூலம் - ஜீவன்கள் எம்பெருமானின் கட்டளைக்கு அடிபணிந்தவர்கள் என்பதாலும், எஜமானனின் ஓர் அடிமைக்கு மற்ற அடிமைகள் தொண்டு செய்வது இயல்பானதே என்பதாலும், நாம் எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யங்கள் நம்முடைய உயிர் உள்ளவரையில் பாகவதர்கள் முடிய நீட்டிக்கப்பட வேண்டும் என்றாகிறது. பாகவதர்களின் குணங்கள் மற்றும் ஞானம் காரணமாகவும் அவர்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்னும் நமது ஆர்வம் மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இதனை இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (4-12) - குணைர்தாஸ்யமுபாகத: - இராமனின் குணங்களுக்குக் கட்டுப்பட்டு அடிமையாக உள்ளேன் – என்று லக்ஷ்மணன் கூறுவதன் மூலம் அறியலாம். இதனையே ”பகவத்பக்தா:”, “மாத்ருசாம்” போன்ற பதங்கள் உணர்த்துகின்றன.