Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதன் காரணம்

மூலம் – அதில் இவன் சாஸ்த்ரவிருத்தமாக வர்த்திக்கும்போது சாஸிதாவாய் தண்டகரான ஈச்வரனுக்கு லீலா ரஸ மாத்ரத்தை உண்டாக்கி அம்முகத்தாலே அதிசயாதாயகனாம். சாஸ்த்ராநுகுணமாக வர்த்திக்கும்போது, சுபே த்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதே அஸௌ பரம: சரீரீ என்கிறபடியே ஈச்வரனுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கி அவனுடைய ஔதார்யாதி குணங்கள் குமரிராதபடி அம்முகத்தாலே உதாரா: ஸர்வ ஏவைதே என்று அவன் தானே கொண்டாடும்படி அதிசயாதாயகனாம்.

– இப்படியாக ஜீவன் செய்கின்ற செயல்கள் சாஸ்த்ரங்களுக்கு உட்படாமல், அவற்றுக்கு விரோதமாக இருந்தால், தவறுகளுக்குத் தண்டனை விதிப்பவனாகிய எம்பெருமானின் லீலைகளுக்கு ப்ரயோஜனமாகி விடுகிறான் (ஜீவனின் பாவங்களை நீக்கும் பொருட்டு ஜீவனைத் தவறுகள் செய்ய வைப்பது, இதன் மூலம் தண்டனை அளித்து அவன் பாவங்களைப் போக்குவது உள்ளிட்ட லீலைகளுக்கு ஜீவன் ப்ரயோஜனமாகிறான்). மாறாக, சாஸ்த்ரங்களுக்கு உட்பட்ட செயல்களைச் செய்தால் ஈச்வரனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க்கி, அவனுடைய தாராளகுணம் முதலானவை வீணாகாமல் வெளிப்படும்படிச் செய்து, எம்பெருமானாலேயே கொண்டாடப்படுகிறான். இப்படிப்பட்டவர்களை கீதையில் (7-18) – உதாரா: ஸர்வ ஏவைதே – என்னை அவர்களுக்குக் கொடுப்பவனாக மாற்றுவதால் அவர்களும் கொடையாளிகள் – என்று கொண்டாடுவதன் மூலம் உணரலாம். மேலும் மஹாபாரதம் சாந்திபர்வம் (199-25) - சுபே த்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதே அஸௌ பரம: சரீரீ – அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்டு, அனைவரிலும் மேம்பட்டு நிற்கும் ஸர்வேச்வரன், ஜீவன் செய்கின்ற செயல்கள் நல்லவையாக இருந்தால் மகிழ்கிறான், தீமையாக இருந்தால் மகிழ்வதில்லை – என்றது காண்க.