Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதன் காரணம்

மூலம் – இங்கு பகவத் கைங்கர்யத்தை பாகவத கைங்கர்ய பர்யந்தமாகச் சொல்லுகைக்கு அடி என் என்னில் – பரகத அதிசயாதாந இச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ: பர: சேஷீ என்று வேதார்த்தஸங்க்ரஹத்திலே அருளிச் செய்தபடியே ஸர்வேச்வரனைப் பற்ற சேஷபூதனான இவன் அதிசயாதாநம் பண்ணப் ப்ராப்தன். அவ்வதிசயந்தான் வஸ்து சக்தியை அநுரோதித்து வரவேணும். ஆனால் ஜீவனுக்குப் பரனைப் பற்ற சக்யமான அதிசயம் எது என்று பார்த்தவிடத்தில் சரீரத்வாதிமுகத்தாலே அதிசயாதாநம் பண்ணுகை இவனுக்கும் அசித்துக்கும் பொதுவாயிருந்தது. இவன் சேஷிக்கு விசேஷித்துப் பண்ணும் அதிசயம் சைதந்யமுகத்தாலேயாயிருக்கும்.

– பகவத் கைங்கர்யம் எவ்விதம் பாகவத கைங்கர்யம்வரை செல்லும் என்று கேள்வி எழலாம். இதற்கு விடை தரப்படுகிறது. வேதார்த்த ஸங்க்ரஹம் - பரகத அதிசயாதாந இச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ: பர: சேஷீ – மற்றவர்களுக்குப் ப்ரயோஜனம் உண்டாக்குவதையே தனக்கு முக்கியமான ப்ரயோஜனம் என்று எண்ணுபவன் சேஷன் எனப்படுகிறான்; அந்த ப்ரயோஜனத்தைப் பெறுகிறவன் சேஷி ஆகிறான் – என்றது காண்க. ஆக ஸர்வேச்வரனுக்கு சேஷனான ஜீவன் எம்பெருமானுக்கு ஏதேனும் ப்ரயோஜனமாக இருந்தால் மட்டுமே அவனுக்கு சேஷனாக இருக்க இயலும். அத்தகைய ப்ரயோஜனம் ஜீவனின் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி இருக்கும். ஆனால் அனைத்தும்வல்ல எம்பெருமானுக்கு ஜீவன் என்ன ப்ரயோஜனத்தை அளிக்க இயலும் என்ற கேள்வி எழலாம். எம்பெருமானின் சரீரமாக ஜீவன் உள்ளதால், ஜீவன் ஏதேனும் ப்ரயோஜனத்தை அளிக்க இயலும் என்று வைப்போம். ஆனால் அசித் பொருள்களும் எம்பெருமானின் சரீரமே ஆகும். அப்படியெனில் எம்பெருமானுக்கு ப்ரயோஜனமாக இருத்தல் என்பது சித் மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் பொதுவாகவே உள்ளது. ஆனால் ஜீவன் தன்னுடைய அறிவு மூலமாகச் சிறப்பான ப்ரயோஜனத்தைச் செய்ய இயலும்.