Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 14)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

மூன்று கரணங்களால் விலக்கவேண்டியவையும் ஏற்கவேண்டியவையும்

முலம் – இவ்வுத்தரக்ருத்யத்தில் மநோவாக்காயங்களென்று சொல்லுகிற கரணங்கள் மூன்றாலும் பரிஹரணீயங்களிலும் பரிக்ராஹ்யங்களிலும் ஸாரமிருக்கும்படி சொல்லுகிறோம்: விஷஸ்ய விஷயாணாம் ச தூரமத்யந்தமந்தரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி என்றும், “ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்றும் சொல்லுகையாலே பரமபுருஷார்த்தருசி குலையாமைக்காக மறக்க வேண்டுமவற்றில் ப்ரதாநம் விஷயாஸ்வாதம் க்ருதத்நதை வாராமைக்காக நினைக்க வேண்டுமவற்றில் ப்ரதாநம் ஆசார்யன் செய்த ப்ரதமகடாக்ஷம் முதலான உபகாரம். கார்ப்பண்யம் குலையாமைக்காகச் சொல்லாதொழிய வேண்டுமவற்றில் ப்ரதாநம் ஆத்மோத்கர்ஷம் உபாயநிஷ்டையை மறவாமைக்காக ஸதைவம் வக்தா என்கிறபடியே, சொல்லவேண்டுமவற்றில் ப்ரதாநம் த்வயம். உகந்து பணி கொள்ள உரியனான எம்பெருமான் திருவுள்ளமழலாமைக்காகக் கரணத்ரயத்தாலும் “செய்யாதன செய்யோம்” என்னுமவற்றில் ப்ரதாநம் ப்ரஹ்மவிதபசாரம். புருஷார்த்த ஸாகரம் வற்றுதல் வரையிடுதல் செய்யாமைக்காகக் கரணத்ரயத்தாலும் கர்த்தவ்யங்களில் ப்ரதாநம் பகவத் கைங்கர்யத்தின் எல்லை நிலமாய் சாஸ்த்ராநுஜ்ஞாதமான ஆசார்யாதி பாகவத கைங்கர்யம்.

– மனம், வாக்கு மற்றும் உடல் என்று கூறப்படும் மூன்றாலும் ப்ரபந்நன் ஒருவன் செய்யக்கூடியது எது என்றும், செய்யக்கூடாதது எது என்றும் இப்போது சுருக்கமாகக் காண்போம். விஷஸ்ய விஷயாணாம் ச தூரமத்யந்தமந்தரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி – சிற்றின்ப விஷயங்களுக்கும் விஷத்திற்கும் வேறுபாடு அதிகமாகும்; விஷம் என்பது குடித்தால் மட்டுமே அழிக்கும், ஆனால் விஷயங்கள் என்பது நினைத்தவுடன் அழிக்கவல்லவையாகும் – என்றது காண்க. மேலும், திருவாய்மொழி (6-9-9) - ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ – என்னுடைய ஆத்மா ப்ரமித்து நிற்கும்படியாக ஐந்து இந்த்ரியங்களும் என்னைத் தங்கள் பக்கம் இழுத்து வருத்துகின்றன, இப்படியான அற்பமான சுகங்களைப் பாவியான எனக்குக் காண்பித்து, நீ என்னை வருத்தலாமா – என்றதும் காண்க. ஆகவே மிகவும் உயர்ந்த புருஷார்த்தத்தின் மீது உள்ள ருசி குறைந்து விடாமல் இருப்பதற்கு, புலன்களால் நுகரப்படும் இன்பங்களை விலக்குவது என்பது முக்கியமாகும். செய்நன்றி மறத்தல் என்னும் பழி வராமல் இருப்பதற்குச் செய்யவேண்டியது, ஆசார்யன் நம்மை முதன்முதலில் கடாக்ஷம் செய்ததை எப்போதும் எண்ணியபடி இருத்தல் வேண்டும். கார்ப்பண்யம் என்பது குறையாமல் இருப்பதற்கு நம்மைப் பற்றிய தற்பெருமையான சொற்களைக் கூறாமல் இருத்தல் வேண்டும். உபாயத்தை எப்போதும் மறவாமல் இருப்பதற்கு சரணாகதி கத்யம் – ஸதைவம் வக்தா – த்வயத்தின் பொருளை – என்று கூறுவது போன்று, எப்போதும் த்வய மந்த்ரத்தை உச்சரித்தபடி இருக்கவேண்டும். நமுடைய கைங்கர்யத்தை உகப்புடன் ஏற்கின்ற எம்பெருமான் நம்மீது அத்ருப்தி கொள்ளாமல் இருப்பதற்கு திருப்பாவை (2) – செய்யாதன செய்யோம் – என்று கூறுவது போன்று, ப்ரஹ்மத்தை அறிந்தவர்களை மனம், வாக்கு மற்றும் உடல் ஆகியவை மூலம் எந்தவிதமான அபசாரம் செய்யாமல் இருப்பதே ஆகும். நம்முடைய புருஷார்த்தம் என்னும் கடலானது வற்றாமலோ சுருங்காமலோ இருப்பதற்கு நாம் செய்யவேண்டியது எம்பெருமானின் கைங்கர்யத்தினுடைய எல்லையாக உள்ளதும், சாஸ்த்ரங்களால் முழங்கப்படுவதும் ஆகிய ஆசார்ய, பாகவத கைங்கர்யங்களே ஆகும்.