Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 13)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

ஸர்வேச்வரனிடம் நன்றியுடன் இருத்தல்

மூலம் – இவையெல்லாவற்றிற்கும் ஸாதாரணமான ப்ரதாநகாரணமுமாய் முக்ததசையில் ஆத்மாநுபந்தியான பகவதநுபவத்தைப் பற்ற அபர்யநுயோஜ்ய ஸ்வாதந்த்ர்யமடியாக சங்கிதமாம் விச்சேதத்துக்கும் பரிஹாரமாயிருப்பது “இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி”, என்றும், “போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போகவிட்டார்” என்றும், “வண்புகழ் நாரணன் திண்கழல்” என்றும், “சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளினைக் கீழ்க் கொள்ளுமப்பன்” என்றும், ”தன் தாளிணைக் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை” என்றும் சொல்லுகிறபடியே அபுநராவ்ருத்தியிலும் முன்பு ஸம்ஸரிப்பிக்கையிற்போலே ஸத்யஸங்கல்பனாய்ச் சேஷியான ச்ரிய:பதியினுடைய “பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து” என்று சொல்லப்பட்ட ஸஹஜகாருண்யமென்று தெளிந்து அவ்விஷயத்திலும் க்ருதஜ்ஞனாயிருக்கவும் ப்ராப்தம்.

– இவை அனைத்திற்கும் காரணமானவனும், முக்தி அடையும் நேரத்தில் அவனது அனுபவத்தைத் தடுக்கக்கூடிய அனைத்தையும் தனது ஸத்யஸங்கல்பத்தால் போக்கக்கூடியவனும் ஆகிய எம்பெருமான் விஷயத்தில் நன்றி கொண்டவனாக இருத்தல் வேண்டும். கீழே உள்ள பல வரிகளைக் காண்க: பெரியாழ்வார் திருமொழி (4-9-3) – இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி - திருவரங்கன் செய்வது என்னவென்றால் இருளை நீக்கவல்ல கதிர்கள் கொண்ட சூரிய மண்டலத்தில் தனது அடியார்களை ஏற்றி, பரமபதத்தில் அவர்களை நிலையாக நிறுத்தி, மீண்டும் இறங்கி விடாதபடி ஏணியை விலக்கி விடுவான். பெரியாழ்வார் திருமொழி (4-5-2) – போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போகவிட்டார் – நமோ நாராயணா என்று ப்ரபத்தி செய்து ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்ற பின்னர், பெரியபிராட்டியாரையே பணயமாக வைத்தாலும் மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்ப விடமாட்டான். திருவாய்மொழி (1-2-10) - வண்புகழ் நாரணன் திண்கழல் –மேன்மையான புகழ் கொண்ட நாராயணனின் திருவடிகளைப் பற்றுங்கள். திருவாய்மொழி (3-7-7) - சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளினைக் கீழ்க் கொள்ளுமப்பன் – தானும் இந்த உலகில் அவதாரம் செய்து, அடியார்களைக் காப்பாற்றி, அவர்களை ஸ்ரீவைகுண்டத்திற்குக் கொண்டு சென்று, அவர்களுக்கு இயல்பாகவே உள்ள ஸ்வரூபத்தை வெளிப்படுத்தி, தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளும் எம்பெருமான். திருவாய்மொழி (7-5-10) - தன் தாளிணைக் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை – தன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டு, எப்போது அவன் செய்கின்ற நன்மைகளை. தன்னுடைய எஜமானனாக உள்ள மக்ஷாலக்ஷ்மியின் நாயகனான எம்பெருமானிடம் ப்ரபந்நன் மிகுந்த நன்றியுடன் இருக்கவேண்டும். இதன் காரணம் – ஸம்ஸாரத்தில் உள்ளபோது எத்தனை வாத்ஸல்யத்துடன் அவன் உள்ளானோ, அதே போன்று மோக்ஷம் பெற்ற பின்னரும் நம்மிடம் அவன் உள்ளான். இதனை திருவாய்மொழியில் (9-2-1) - பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து – உன்னுடைய கருணையாலும், உன்னுடைய பிராட்டியின் கருணையாலும் உனது கோயிலைத் தூய்மையாக்கும் கைங்கர்யங்கள் செய்து – என்பதன் மூலம் காணலாம்.