Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
ஆசார்யனிடம் நன்றி
மூலம் – இப்படி பகவதுபக்ரமமாய் பாகவதபர்யந்தமாக வருகிற கைங்கர்யாக்ய புருஷார்த்த ஸித்திக்குப் ப்ரதானகாரணம் பாபிஷ்ட: க்ஷத்த்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் என்றும், “எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே” என்றும், “வில்லிபுதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றும் சொல்லுகிறபடியே ஸதாசார்ய ஸம்பந்தமே என்று விச்வஸித்து, அபிஷேகம் பண்ணப் புகுகிற ராஜகுமாரனுக்கு ராத்ரியில் விளக்கேற்றி வைக்குமாப் போலே தனக்கு அவர்கள் பண்ணின வெளிச் சிறப்பையும் அதடியாகத் தனக்கு வந்த கைங்கர்யாதிகளையும் அநுஸந்தித்து அவர்கள் பக்கலிலே க்ருதஜ்ஞனாயிருக்கவும்.
–எம்பெருமான் தொடக்கமாக அடியார்கள் முடிய உள்ள அனைவருக்கும் கைங்கர்யம் செய்தல் என்பதே தனது வாழ்வின் லட்சியம் என்பதையும், இந்த நிலையானது தன்னுடைய ஆசார்யனிடம் கொண்ட தொடர்பு காரணமாகவே தான் அடைந்ததாகவும் எண்ணியபடி இருத்தல் வேண்டும். இதனைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: பாபிஷ்ட: க்ஷத்த்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் – மிகுந்த பாவங்கள் செய்த க்ஷத்ரபந்துவும், மிகுந்த புண்ணியம் செய்த புண்டரீகனும் ஆசார்யர்களைக் கொண்டிருந்த காரணத்தால் மோக்ஷம் பெற்றனர். எனவே ஒவ்வொருவரும் ஆசார்யனை அடையவேண்டும். திருவிருத்தம் (54) - எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே – எங்களது ஈசனும், வானவர்களின் தலைவனும் ஆகிய எம்பெருமானின் தோஷங்கள் இல்லாத திருவடித் தாமரைகளில் எங்களைச் சேர்க்கவல்ல ஆசார்யர்களே நாச்சியார் திருமொழி (10-10) - வில்லிபுதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவரான பெரியாழ்வார் தனது எம்பெருமானைத் தன்னால் முடிந்த காரணத்தால் இங்கு அழைக்கும்போது, அவனை நாம் வணங்குவோமாக. தன்னுடைய ஞானம் என்பது வெளிப்பட உதவியது ஆசார்யனே என்பதால் அவரிடம் நன்றியுடன் இருந்து, அந்த ஞானம் காரணமாகவே தனக்கு கைங்கர்யம் என்பது கிட்டியது என்பதையும் உணரவேண்டும். மறுநாள் அரியணை ஏறப்போகும் ராஜகுமாரன் ஒருவனுக்கு, அதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் விழித்திருந்து அரண்மனையில் விளக்குகள் அணையாமல் பாதுகாக்கும் வேலைக்காரர்கள் போன்று ஆசார்யனிடம் இருத்தல் வேண்டும்.