Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
கைங்கர்யங்களை சரியான வழியில் விருப்பத்துடன் செய்தல்
மூலம் – அக்கரையில் அபிமததேசத்துக்குப்போக ஓடம் பார்த்திருப்பார் நினைத்தபோது விடவொண்ணாத பணபந்த த்யூதத்திலிழியாதே வேண்டின மட்டிலே தலைக்கட்டுகைக்கு ஈடான விஹார த்யூதத்திலே இழிந்தாலும் த்யூதசாஸ்த்ரத்தின்படியே அடிதப்பாதே கருவி வைக்குமாப்போலே ஆஜ்ஞாநுஞைகளாலே அடிமை கொள்ளுகிற சாஸிதாவினுடைய சாஸநத்துக்குப் பொருந்தின காலவிசேஷாதி நியதமான கைங்கர்யத்தை, பித்த பரிஹாரார்த்தமாக க்ஷீரஸேவை பண்ணுவாரைப் போலன்றிக்கே அயத்நலப்தமான ஔஷதத்தாலே அவிலம்பிதமாக ஆரோக்யம் பெற்றவர்கள் பால் வார்த்துண்ணுமாப் போலே, உகந்து பண்ணவும்.
– ஓர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து எதிர்கரைக்குச் செல்ல விரும்புபவர்கள், ஓடத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில், பொழுதுபோக்காகச் சொக்கட்டான் முதலான விளையாட்டில் ஈடுபடுவர். அப்போது அவர்கள் அவற்றைப் பந்தயத்துக்காக ஆடாமல், பொழுதுபோக்கிறாக மட்டுமே ஆடுவர். இதன் காரணம், பந்தயத்துக்காக ஆடினால், ஆடிக்கொண்டிருக்கும்போதே ஓடம் வந்துவிட்டால் நிறுத்த இயலாது. ஆனால் பொழுதுபோக்கிறாக ஆடினால், ஓடம் வந்துவிட்டால் ஆட்டத்தை நிறுத்திவிட்டு, ஓடத்தில் ஏறிவிடலாம். இவ்விதம் அவர்கள் பொழுதுபோக்கிறாக மட்டுமே ஆடினாலும், அந்த விளையாட்டிற்கான விதிமுறைகள் தவறாமலேயே ஆடுகின்றனர். இது போன்றே, ப்ரபந்நன் ஒருவன் எம்பெருமானால் விதிக்கப்பட்டவற்றைச் செய்யும்போது, அவனது கைங்கர்யமாக உள்ள அவற்றைச் செய்யும்போது, தனக்கு அவை பயன் அளிக்கும் என்ற எண்ணத்துடன் செய்யவில்லை என்றாலும், சாஸ்த்ர முறைப்படியே செய்தல் வேண்டும். அவற்றை எந்த நேரத்தில், எந்த இடத்தில் இயற்றவேண்டுமோ, அந்த முறை மாறாமல் செய்தல் வேண்டும். இதனைச் செய்யும்போது இவனது நிலை எப்படி இருக்கவேண்டும் என்றால் – பித்தம் உள்ளவன், பித்தம் நீங்குவதற்காகப் பாலைப் பருகினான் என்னும்போது, இயல்பாகவே ருசி கொண்டதான பாலானது, மருந்தாகப் பருகப்படுவதால், இனிமையாக இருக்காது; ஆனால் பித்தம் நீங்கிய பின்னர் பாலைப் பருகும்போது மகிழ்வுடன் ருசித்துப் பருகுவான் (அதாவது, வேறு பலன் கருதி செய்யும் பகவத் கைங்கர்யங்கள், பித்தம் உள்ளவன் பருகும் பால் போன்று இனிக்காது. ப்ரபத்தி மூலம் கர்மங்களை நீக்கியவர்கள், பித்தம் நீங்கிப் பருகும் பால் இனிப்பது போன்று, பகவத் கைங்கர்யத்தால் இனிமை அடைவர்).