Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

இதுநாள் இழந்ததை எண்ணித் தளராமல் இருத்தல்

மூலம் – இப்படித் தனக்கு அநாதிகாலம் பிறந்த அநர்ஹதையையும் அதடியாக இழந்த கைங்கர்யத்தையும் பார்த்து, “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்” என்று அலற்றப்பண்ணும் நிர்வேத ப்ராசுர்யத்தாலே அவஸந்நனாகாதே “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா” என்கிறபடியே எதிர் சூழல்புக்கு நிற்கிற சரண்யனுடைய தாய் முலைப்பால்போலே பத்யதமமுமாய் ப்ரியதமுமான உபதேசத்தாலே தெளிந்த அவதார ரஹஸ்யாதிகளாகிற தீர்த்தங்களை அவகாஹித்துத் தேறி, உத்தமே சேத்வயஸி ஸாதுவ்ருத்த: என்றும், துராசார: அபி ஸர்வாசீ க்ருதந்தோ நாஸ்திக புரா ஸமாச்ரயேதாதிதேவம் ச்ருத்த்யா சரணம் யதி நிர்த்தோஷம் வித்தி ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: என்றும், யத்ப்ரஹ்மகல்ப நியுதாநுபவே அப்யநாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே ஏவம் ஸதா ஸகலஜந்மஸு ஸாபராதம் க்ஷாம்யஸ்யஹோ ததாபிஸந்தி விராம மாத்ராத் என்றும், ப்ரவஹத்யேவ ஹி ஜலே ஸேது: கார்யோ விஜாநதா என்றும், “மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே” என்றும் சொல்லுகிற ந்யாயத்தாலே கதத்துக்குச் சோகியாதே, கதமான அயோக்யதையைக் கண்டு அகலவும் பாராதே, அபர்யநுயோஜ்யமாய் அநவதிகமான சரண்யப்ரபாவத்தாலே இப்போது பிறந்த யோக்யதையைக் கண்டு, வருகிற நீருக்கு அணை கோலுங்கணக்கிலே இவ்வவஸ்தைக்கு அநுரூபமான ஆஜ்ஞா அநுஜ்ஞா அநுவர்த்தநமாகிற கைங்கர்யாநுபவத்தை இழவாதே.

– தான் இத்தனை காலமாக தகுதி இழந்து இருந்த நிலையையும், இதனால் ஸர்வேச்வரனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்களைச் செய்யாமல் விட்டதையும் உணரும் ப்ரபந்நன், தனது நிலையைக் கண்டு மிகவும் துவண்டு போகக்கூடும். இதனால் திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் – விபரீதமான ஞானம், தீய ஒழுக்கம், அசுத்தமான சரீரம் – என்று கூறுவது போன்று, தன்னைத்தானே மிகவும் நிந்தித்துக் கொண்டு, அதனால் தளர்ச்சி அடையாமல் இருத்தல் வேண்டும். திருவிருத்தம் (1) - உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா – இது போன்ற பிறவிகளில் பிறக்காமல் காப்பதற்காக நீ பல அவதாரங்கள் எடுத்தாய் – என்று கூறுவதை எண்ணி உறுதி கொள்ளவேண்டும். தாய்ப்பால் போன்ற இனிமையான ஸர்வேச்வரன் தன் முன்பாக நின்று தன்னைக் காப்பாற்றும் பொருட்டு கூம் சொற்களை எண்ணியபடி இருக்கவேண்டும் (உதாரணமாக கீதையில் – பரித்ராயாண ஸாதூநாம், ஸம்பவாமி யுகே யுகே, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ போன்றவை). அவனது அவதார ரஹஸ்யங்கள் என்னும் நீர் நிலைகளில் குடைந்து நீராடவேண்டும். கீழே உள்ள வரிகளை எண்ணியபடி இருக்கவேண்டும்: போதாயந ஸூத்ரம் (1-10-32) - உத்தமே சேத்வயஸி ஸாதுவ்ருத்த: - முதுமையில் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால் நன்மையைப் பெறுவான். ஸாத்த்வத ஸம்ஹிதை (16-23-24) - துராசார: அபி ஸர்வாசீ க்ருதந்தோ நாஸ்திக புரா ஸமாச்ரயேதாதிதேவம் ச்ருத்த்யா சரணம் யதி நிர்த்தோஷம் வித்தி ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: - ஒருவன் தீய ஒழுக்கம் கொண்டவனாக, அனைத்தையும் உண்பவனாக, நன்றி கெட்டவனாக, நாஸ்திகனாக இருக்கக்கூடும். ஆயினும் ஸர்வேச்வரனை சரணம் புகுந்த பின்னர், அவனது கடாக்ஷம் காரணமாக குற்றங்கள் நீங்கப்பெறுவான் ஸ்ரீவைகுண்டஸ்தவம் (61) - யத்ப்ரஹ்மகல்ப நியுதாநுபவே அப்யநாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே ஏவம் ஸதா ஸகலஜந்மஸு ஸாபராதம் க்ஷாம்யஸ்யஹோ ததாபிஸந்தி விராம மாத்ராத் – நான்முகனின் காலத்தில் பதினாயிரம் கல்ப காலங்கள் அநுபவித்தாலும் கழியாத தீயபலன்களை அளிக்கக்கூடிய பாவங்களை ஒருவன் அரை நொடியில் செய்யக்கூடும். இப்படியாக அனைத்துப் பிறவியிலும் பாவங்களையே ஒருவன் செய்துவந்தாலும், ”பாவங்களைச் செய்யமாட்டேன்” என்ற நினைவு அவனுக்குத் தோன்றிவிட்டாலே நீ மன்னித்துவிடுகிறாய். வங்கிபுர நம்பி காரிகை (31) - ப்ரவஹத்யேவ ஹி ஜலே ஸேது: கார்யோ விஜாநதா – கழிந்துவிட்ட பிறவி கழிந்ததே. அறிவாளி ஒருவன் தண்ணீர் ஓடி வரும்போது அல்லவோ அணை இடுவான்? திருவாய்மொழி (3-8-1) - மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – இறக்கும் காலத்திலாவது ப்ரபத்தி செய்து இறப்பது நலமே இப்படியாக ஒருவன் தனது கடந்த கால நிலையை எண்ணி வருத்தம் கொண்டு, எம்பெருமானை விட்டு அகன்று செல்லக்கூடாது. மாறாக, தனக்கு இப்போது வாய்த்துள்ள ”ஏன் என்ற கேள்வி எழாமல், எல்லையற்ற எம்பெருமானின் பெருமையால்” உண்டான தகுதியை எண்ணி, இனிவரும் காலங்களில் வர உள்ள நீரைத் தடுக்க அணை கட்டுவது போன்று, மேன்மேலும் தகுதிகளுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டும். மேலும் எம்பெருமானின் ஆணை, கைங்கர்யங்கள் ஆகியவற்றில் நிலை நின்று, தனது ப்ரபந்நன் என்னும் நிலையை விடாமல் இருத்தல் வேண்டும்.