Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
ஆசார்யனிடம் பொருள்களைக் கேட்டு அறிதல்
மூலம் – தன் நிஷ்டைக்கு அநுரூபமாகத் தெளியவேண்டும் அர்த்தங்களில் தனக்குத் தெளியாத நிலங்களை நான் க்ருதக்ருத்யனென்று அநாதரித்திராதே அநுபவபூர்த்தி யுண்டாம்போது தெளிவும் ப்ரேமமும் வேண்டுகையாலும், தத்பாத பக்தி ஞானாப்யாம் பலமந்யத் கதாசந ந யாசேத் விஷ்ணும் யாசநாந்நச்யதி த்ருவம் என்கிறபடியே ஞாநபக்திகளை அபேக்ஷித்தால் குற்றமில்லாமையாலும், தனக்கு சேஷி விஷயத்திலே சித்தரஞ்ஜனம் பிறக்கைக்காக, “பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து” என்னும்படி நிற்கிற தெளிவுடைய பரமைகாந்திகள் பக்கலிலே, தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா உபதேக்ஷ்யந்தி ஞானம் ஞாநிநஸ்தத்த்வதர்சிந: என்கிற கட்டளையிலே தெளியக்கேட்டு, மந்தோப்யமந்ததாமேதி ஸம்ஸர்கேண விபச்சித: பங்கச்சித: பலஸ்யேவ நிதர்ஷேணாவிலம் மய: என்கிறபடியே பரிசுத்தஞானனாய்.
– தான் என்ன செய்யவேண்டுமோ (ப்ரபத்தி) அதனைச் செய்தாகிவிட்டது என்று எண்ணியபடி ஒருவன் இருந்துவிடக் கூடாது. அந்த நிலையில் தான் அறியாதவற்றைக் கற்பதில் ஆர்வம் இருக்கவேண்டும். அந்த நிலையில் எம்பெருமானுடன் சேர்ந்து மகிழ்வுடன் இருந்தபோதிலும், ஞானமும் ப்ரேமையும் மிகவும் அவசியமாகும். தத்பாத பக்தி ஞானாப்யாம் பலமந்யத் கதாசந ந யாசேத் விஷ்ணும் யாசநாந்நச்யதி த்ருவம் – ஸர்வேச்வரனுடைய திருவடிகளில் ஒருவன் பக்தி மற்றும் ஞானம் ஆகிய இரண்டை மட்டுமே கேட்கவேண்டும்; இவற்றைத் தவிர வேறு பலன்களைக் கேட்பவன் கெட்டுப் போவது உறுதி – என்ற ச்லோகத்திற்கு ஏற்ப ஞானம் மற்றும் ப்ரேமையை எம்பெருமானிடம் கேட்பதால் எந்தக் குற்றமும் இல்லை. தன்னுடைய எஜமானனாகிய எம்பெருமானைக் குறித்து மயக்கம் அற்ற ஞானம் அடையும் பொருட்டு, பெரியாழ்வார் திருமொழி (5-2-8) - பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து – என்று கூறுவது போன்றுள்ள ஆசார்யனிடம் கேட்டுத் தெளியவேண்டும். அவர்களிடமிருந்து கீதை (4-34) - தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா உபதேக்ஷ்யந்தி ஞானம் ஞாநிநஸ் தத்த்வதர்சிந: - உனது ஆசார்யனைப் பணிந்து, உனது சந்தேகங்களை அவரது திருவடிகளில் வைத்து, அவருக்குக் கைங்கர்யம் செய்வாயாக; அதன் பின்னர் ஆத்மாவைக் குறித்து அவரிடம் கேட்டு அறிவாயாக; உனது சந்தேகங்களை அவர் தெளிய வைப்பார் – என்னும் ச்லோகத்தின் அடிப்படையில் ஞானம் பெறவேண்டும். இதனால் தூய்மையான ஞானம் பெறுவான். இதனை காளிதாஸனின் மாளவிகாக்நிமித்ரம் - மந்தோப்யமந்ததாமேதி ஸம்ஸர்கேண விபச்சித: பங்கச்சித: பலஸ்யேவ நிதர்ஷேணாவிலம் மய: - நீரின் கலக்கத்தை நீக்கும் தேத்தாங்கொட்டையைத் தேய்ப்பதன் மூலம் கலக்கமாக உள்ள நீர் தெளிவது போன்று, அறிஞனின் சேர்க்கையால் மூடனும் ஞானம் அடைவான் – என்பதில் காண்க.