Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

மூலம் – இப்படி க்ருதக்ருத்யனாய் ஸ்வநிஷ்டையைத் தெளிந்து சரீரத்தோடிருந்த காலம், பழந்திருவிடையாட்டத்திலே சிறிதிடத்தை அடைத்துக் கொண்டிருப்பாரைப்போலே, ஒரு படி துவக்கற்று ஒரு படி துவக்குண்டிருக்கிற இவ்வதிகாரிக்கு முக்தருடைய கைங்கர்ய பரம்பரைபோலே ஸ்வாதுதமமாகையாலே ஸ்வயம்ப்ரயோஜநமாய், சாஸ்த்ர விமுக்த பாலவிசேஷ நியதமாய், உத்தரகைங்கர்யத்துக்கு அவஸர லாபார்த்தமாகப் பூர்வ கைங்கர்யம் தலைக்கட்ட வேண்டும்படி சங்கிலித் துவக்காய், ஸ்வாமிஸம்ப்ரீதிக்கு காரணமுமாய், கார்யமுமாய், “வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன்போது” என்றும், “சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை என் நினைந்து போக்குவர் இப்போது” என்றும், “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றும், “பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவு என மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையலாய் வழிபட்டோட அருளில்” என்றும், “நாடாத மலர் நாடி” என்றும், “வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க” என்றும், “தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே” என்றும், “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்றும், “பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிடக் கொள்ளுமாகில்” என்றும், “எண்ணக் கண்ட விரல்கள்” என்றும், “உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளும் இருக்கெகச் சாமவேத நாண்மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துற்மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாள்” என்றும், “நாக்கு நின்னையல்லால் அறியாது நானதஞ்சுவன் என் வசமன்று” என்றும், “வாய் அவனையல்லது வாழ்த்தாது” என்றும், “தோள் அவனையல்லால் தொழா” என்றும், “நயவேன் பிறர் பொருளை” என்றும், “நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும்” என்றும், “இருளிரிய”, “ஊனேறு செல்வத்து”, “நீணாகஞ் சுற்றி” என்னும் திருமொழிகளிலும், பத்யு: ப்ரஜாநாமைச்வர்யம் பசூநாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாஸம் குந்தோ வா யமுநாதடே என்றும், குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த: ப்ரகல்பதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதச்ச தே பரவாநாஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத என்றும், காமயே வைஷ்ணவத்வம் து ஸர்வஜந்மஸு கேவலம் என்றும், வர்த்தமான: ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்தமான ஸ்வார்ஜிதைர்கந்த புஷ்பாத்யை: சுபை: சக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாஸராந் என்றும், சொல்லுகிறபடியே ஸ்வரூபாநுரூப காலக்ஷேபார்த்தமான உத்தரக்ருத்யமிருக்கும்படி.

– இப்படியாகச் செய்யவேண்டியதைச் செய்த ஒருவன் (ப்ரபத்தியைச் செய்தவன்), தனக்கு நிஷ்டை உண்டானதை அறிந்து கொண்ட ஒருவன், தன்னுடைய உடல் இந்த உலகில் உள்ளவரை எப்படி இருத்தல் வேண்டும் என்றால் – தானியம் விளைகின்ற பூமியில் தனக்காக ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் விவசாயி போன்று, தனக்காக ஏதேனும் சிலவற்றை மட்டுமே, சிறிதளவு மட்டுமே வைத்தபடி இருப்பான்; இவன் உலக விஷயங்களின் தொடர்பு பலவற்றைக் கைவிட்டபோதிலும், தனது சரீரம் போன்ற சிலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளான் என்றாலும், நித்யஸூரிகளுக்கு எப்படிக் கைங்கர்யம் இனிமையாக உள்ளதோ அது போன்று இவனும் செய்தபடி இருக்கவேண்டும். இத்தகைய கைங்கர்யம் சாஸ்த்ரங்கள் மூலமாக விதிக்கப்பட்டு, இவையே முடிவுமாக உள்ளன. ஒரு கைங்கர்யம் முடித்தவுடன் அடுத்த கைங்கர்யம் என்று சங்கிலித் தொடர் போன்று இவற்றை இயற்றியபடி இருத்தல் வேண்டும். இதுவே அவனை ஸ்வாமியாக ஏற்றுக்கொள்ள வழியாகிறது. கீழே உள்ள பல வரிகள் காண்க: நான்முகன் திருவந்தாதி (63) - வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன்போது – அவனது திருக்கல்யாண குணங்கள் குறித்துப் படித்தும், கேட்டும், அவனை வணங்கியும், பூஜைகள் செய்து எனது காலத்தை நான் கழித்தேன். பெரிய திருவந்தாதி (86) - சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை என் நினைந்து போக்குவர் இப்போது – அவனுடைய குணங்களைக் கூறும் நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஆத்மாவைச் சூழ்ந்துள்ள துன்பத்தை நீக்கையலும், வேறு எதனை எண்ணி நீக்க இயலும்? திருவாய்மொழி (3-3-1) - ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் – சற்றும் இடைவிடாமல் அவனுடன் கூடியிருந்து, அனைத்து நிலைகளிலும் தோஷம் இல்லாத கைங்கர்யம் செய்தல் வேண்டும். திருவாய்மொழி (8-10-4) - பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவு என மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையலாய் வழிபட்டோட அருளிலே – அவனது ஓங்கி வளர்கின்ற குணங்களைக் கூறுகின்ற பாசுரங்கள் எனது வாயிலும், இந்த்ரியங்களை வெல்லவல்ல திருமேனி அழகு மனதிலும், அந்தத் திருமேனிக்கு ஏற்ற மலர்களை எனது கைகள் தூவும்படிச் செய்தலும் ஆகியவற்றைச் செய்தான் என்றால், எனக்கு என்ன குற்றம் உண்டாகும். திருவாய்மொழி (1-4-9) - நாடாத மலர் நாடி – எளிதாகக் கிட்டாத மலர்களைத் தேடி அவனுக்காக அளிப்பதற்காகவே இந்த உடல் உள்ளது. திருவாய்மொழி (9-2-10) - வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க – அழகில் ஈடில்லாத பெரியபிராட்டியும், பூமிப்பிராட்டியும் வருடுகின்ற மென்மையான அவன் திருவடிகளைக் கடும் பாவங்கள் பலவற்றைச் செய்யும் நானும் பிடிக்க. திருவாய்மொழி (2-9-4) - தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே – தனது மகிழ்ச்சிக்காகவே என்னை அவன் வைத்துக் கொள்ளவேண்டும். திருப்பாவை (29) - உனக்கே நாம் ஆட்செய்வோம் – உனக்கே நாங்கள் பல கைங்கர்யங்கள் செய்வோம். நாச்சியார் திருமொழி (4-1) - பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிடக் கொள்ளுமாகில் – அவன் சயனிக்கும் இடத்தில் அவனது திருவடிகளைப் பிடிக்கும் கைங்கர்யம் செய்யும்படி அவன் கருணை செய்தான் என்றால். பெரியாழ்வார் திருமொழி (4-4-3) - எண்ணக் கண்ட விரல்கள் – அவனது திருநாமங்களை எண்ணுவதற்காகவே உள்ள விரல்கள். பெரியாழ்வார் திருமொழி (5-1-6) - உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளும் இருக்கெகச் சாமவேத நாண்மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துற்மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாள் – நான் உண்ணாமல் இருக்கின்றபோது எனக்குப் பசி ஏற்படுவதில்லை. ஆனால் திருமந்த்ரம் கூறாத நாள், மூன்று வேதங்களையும் ஓதாத நாள், புதிய மலர்களைக் கொண்டு வந்து உனது திருவடிகளில் சேர்க்காத நாள் ஆகிய நாள்களே எனக்குப் பட்டினி நாள்கள். பெரியாழ்வார் திருமொழி (5-1-1) - நாக்கு நின்னையல்லால் அறியாது நானதஞ்சுவன் என் வசமன்று – எனது நாக்கு உன்னைக் கூறுவது அல்லாமல் வேறு எதனையும் அறியாது, இதனால் உனக்குக் குறை வந்துவிடுமோ என அச்சம் கொள்கிறேன். முதல் திருவந்தாதி (11) - வாய் அவனையல்லது வாழ்த்தாது – அவனைத் தவிர வேறு யாரையும் எனது வாய் புகழாது. முதல் திருவந்தாதி (63) - தோள் அவனையல்லால் தொழா – எனது தோள்கள் அவனை அல்லாது வேறு யாரையும் வணங்காது. முதல் திருவந்தாதி (64) - நயவேன் பிறர் பொருளை – மற்றவர்கள் பொருளை நாடமாட்டேன். திருச்சந்தவிருத்தம் (101) - நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் – நான் உன்னை எப்போதும் நினைக்கவேண்டும் என்று நீ கருணையுடன் எண்ணவேண்டும். பெருமாள் திருமொழி (1) – இருளிரிய – திருவரங்கனை எப்போது காண்பேன். பெருமாள் திருமொழி (4) – ஊனேறு செல்வத்து – திருவேங்கடமுடையானுக்கே ஆளாவேன். பெரிய திருமொழி (11-7) – நீணாகஞ் சுற்றி – புலன்கள் அவனுக்கே ஆகவேண்டும். பத்யு: ப்ரஜாநாமைச்வர்யம் பசூநாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாஸம் குந்தோ வா யமுநாதடே – நான்முகன் அல்லது சிவனது ஐச்வர்யம் வந்தாலும் நான் விரும்பமாட்டேன். க்ருஷ்ணனின் திருவடிபட்ட யமுனையின் கரையில் நான் கடம்ப மரமாகவோ அல்லது குந்த மரமாகவோ இருக்க விரும்புவேன். இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-22) - குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த: ப்ரகல்பதே – என்னை உனக்குத் தொண்டு செய்பவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும். இதனால் எனது தகுதி குறையாது. அப்படிச் செய்தால் கைங்கர்யம் என்னும் பலனை அடைவேன். நீயும் உன்னை அடைந்தவனைக் காப்பாற்றிய பலனைப் பெறலாம் (என இராமனிடம் இலக்குவன் கூறுகிறான்). இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-7) - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதச்ச தே பரவாநாஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத – இராமா! நீ நூறு ஆண்டுகள் இருந்தால் நானும் நூறு ஆண்டுகள் உனக்கு அடங்கியே இருப்பேன். உனது திருவுள்ளம் மகிழும் இடம் என்று பார்த்து, அங்கு பர்ணசாலை அமைக்கும்படி நீ எனக்குக் கட்டளை இடவேண்டும். ஜிதந்தே ஸ்தோத்ரம் (1-13) - காமயே வைஷ்ணவத்வம் து ஸர்வஜந்மஸு கேவலம் – அனைத்துப் பிறப்புகளிலும் அவனுக்குத் தொண்டனாய் நிற்பதையே விரும்புகிறேன். வர்த்தமான: ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்தமான ஸ்வார்ஜிதைர்கந்த புஷ்பாத்யை: சுபை: சக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாஸராந் – ஒவ்வொரு நாளையும் நான் ஐந்து பாகமாய்ப் பிரிப்பேன். அவற்றில் செய்யக்கூடியதான பகவத் கைங்கர்யங்களைச் செய்தபடி இருப்பேன். எனது திறனுக்கு ஏற்றபடி நான் ஈட்டிய சந்தனம், மலர்கள் கொண்டு பக்தியுடன் அவனை ஆராதனை செய்து எனது நாட்களைக் கழிப்பேன்.